ஜனாசா எரிப்புக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம்
வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகள் தங்கத்துக்கு ஒப்பானவை என்கிறார் பிமல் ரத்நாயக்க
நேர்காணல்: எம்.வை.எம்.சியாம்
சிங்களவர்கள் மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் சிங்களவர்களுக்கு எதிராகவும் பிரச்சாரங்களை முன்னெடுத்தே பிரதான அரசியல் தரப்பினர் இதுவரையில் செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள். அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டே முஸ்லிம்களின் வாக்குகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களின் வாக்குகளை விற்பனை செய்யும் ஒரு கலாச்சாரமே தற்போது காணப்படுகிறது என்று தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அத்துடன் முறையற்ற அரசியல் கலாச்சாரத்தை இம்முறை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்து சிறந்த அரசியல் கலாச்சாரத்தை நாங்கள் தோற்றுவிப்போம். முஸ்லிம் மக்கள் எம்முடன் உள்ளார்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
விடிவெள்ளிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
Q: தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரது வெற்றி வாய்ப்பு எந்தளவுக்கு உள்ளது?
இம்முறை தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது.எமக்கு பலமிக்க மக்களாணை கிடைக்கும் என நம்புகிறோம். சாதாரண பொதுமக்கள் தொழில் வல்லுநர்கள் இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட வெவ்வேறு துறைகளில் உள்ளவர்கள் எமக்காக வாக்களிக்க தயாராக உள்ளனர்.
நாம் அவர்களிடத்தில் எமக்காக வாக்களிக்களியுங்கள் எனக்கூறவில்லை.இம்முறை மக்களே புதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். அதேபோன்று இதற்கு முன்னர் ஆட்சி செய்த அரசாங்கங்கள் ஆட்சியாளர்கள் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.எனவே இந்த தேர்தலை வெற்றிகொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்.
Q:அநுரகுமார திசாநாயக்க 50 வீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை உள்ளதா? அல்லது விருப்பு வாக்குகள் தான் வெற்றியை தீர்மானிக்குமா?
நிச்சயம் பெரும்பான்மை வாக்குடன் அநுரகுமார வெற்றி பெறுவார். விருப்பு வாக்குக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படாது. காரணம் தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் அநுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச இடையிலேயே போட்டி நிலவுகிறது. எனவே மக்கள் அநுரவை ஜனாதிபதியாக தெரிவு செய்வர்.
Q:ஜனாதிபதித்தேர்தலில் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றத்தில் உங்களால் பெரும்பான்மையைப் பெற முடியுமா? ஜனாதிபதி ஒரு கட்சி பிரதமர் வேறு கட்சி என்ற ஸ்திரமற்ற ஆட்சிதான் வருமா?
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியுமானால் எம்மால் நிச்சயம் பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற முடியும். அதேபோன்று பாராளுமன்றத்திலும் பெரும்பான்மை பலத்தை நிருபிக்க முடியும்.
Q:ஜே.வி.பி.யின் கடந்த கால வரலாறுகள் குறிப்பாக 1980 களில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அடிப்படையாக வைத்து தேசிய மக்கள் சக்திக்கு எதிராக பிராசாரம் செய்கிறார்களே?
இந்த குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை. 1989 இல் இருந்து இன்றைக்கு 35 வருடங்கள் கடந்துள்ளன. நாம் தற்போது ஜனநாயக கோட்பாட்டுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளோம். கடந்த பல தசாப்தங்களாக ஜனநாயக ரீதியாக நாம் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறோம். தேர்தலின் பின்னரும் எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டே அரசியல் செய்வோம்.
கடந்த காலங்களில் தேர்தல் பிரசாரங்களில் பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் எங்களுடைய தரப்பை சேர்ந்த சுமார் 10க்கும் மேற்ப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். எமக்கு எதிராக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். கடத்திச் சென்று தாக்குதல் மேற்கொண்டனர். துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கினர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பிள்ளையான் என்பவர் யார்? இந்த தாக்குதலுக்கும் அவருக்கும் தொடர்புள்ளதாக தற்போது சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் அவர் ஆளுங்கட்சியின் இராஜாங்க அமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்.
அத்துடன் எமக்கு எதிராக குற்றம் சுமத்துபவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் பதவியில் இருக்கும் போதே கொலை செய்யும் அரசியல் கலாசாரத்தையே பின்பற்றினர்.சட்டங்களை புறக்கணித்து குற்றங்களை செய்து விட்டு தமக்கு எதிராக செயற்படுவர்கள் மீது அந்தப் பழியை போட்டு விடுகிறார்கள்.
குறிப்பாக 2001 இல் அரசியலமைப்பின் 17 ஆவது திருத்தத்தையும் 2019 இல் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் தேவைப்பாட்டையும் நாமே வலியுறுத்தினோம். எனவே நாம் ஜனநாயகத்துக்காகவும் நாட்டின் நல்லிணக்கத்துக்காகவும் பல தடவைகள் குரல் எழுப்பியுள்ளோம். எனவே தற்போது உள்ள கட்சிகளை விடவும் அரசியல்வாதிகளையும் விடவும் நாமே மக்களுக்காக முன்னிற்கிறோம்.
Q: வடக்கு கிழக்கில் தங்களது கட்சியின் பிராசாரங்கள் போதாதுள்ளதாக கூறப்படுகிறது. அநுரவின் வெற்றிக்கு வடக்கு கிழக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் தேவையில்லை என்று கருதுகிறீர்களா?
அவ்வாறு நாம் கருதவில்லை. நாம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் முடிந்தளவு தேர்தல் பிரசாங்களை முன்னெடுத்துள்ளோம். யாழ்ப்பாணம் முல்லைத்தீவு வவுனியா மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களின் தேசிய மக்கள் சக்தியின் பிரசாரங்கள் பிரத்தியேக கூட்டங்களை முன்னெடுக்கிறோம். அண்மையில் காங்கேசன்துறை கிளிநொச்சி மன்னார் பகுதியில் எமது கட்சி அலுவலகங்களையும் திறந்து வைத்தோம்.
அத்துடன் வடக்கில் தேர்தல் இன்னமும் சூடு பிடிக்கவில்லை.இருப்பினும் நாம் எம்மால் முடிந்தளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக்கொண்டு செல்கிறோம்.வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு மத்தி என அனைத்து பிரதேசங்களில் உள்ள மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி ஒருவரே நாட்டுக்கு அவசியப்படுகிறார். வடக்கு கிழக்கு மற்றும் மலையக மக்களின் வாக்குகளை தங்கத்துக்கு ஒத்ததாக கருதுகிறோம். அவை அதிக பெறுமதியுடையவை. சிங்கள முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்த சமூகத்தை உருவாக்கவே எதிர்பார்க்கிறோம். மாற்றமாக பிரித்தாளும் கொள்கை எமக்கில்லை.
Q:தேசிய மக்கள் சக்திக்கு முஸ்லிம் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளதாக கருதுகிறீர்களா? அப்படியானால் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம்?
ஆம். குறிப்பாக இம்முறை தேர்தல் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் மிக முக்கிய தேர்தலாக கருதப்படுகிறது. காரணம் கடந்த காலங்களில் முஸ்லிம் மக்களிடத்தில் இனவாதத்தை அடிப்படையாக்கொண்டே வாக்குகள் பெறப்பட்டன. அத்தோடு இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு அவர்கள் தனிப்பட்ட அரசியல் இலாபங்களுக்காக மக்களை பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால் இம்முறை மக்கள் அதனை புரிந்து கொண்டுள்ளனர். இனவாத அரசியல் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மீது அதிருப்தி ஊழல் மோசடி மிக்க அரசியல் மீது கொண்டுள்ள வெறுப்பு என்பன இவற்றுக்கு மிக முக்கிய காரணமாகும். குறிப்பாக முஸ்லிம் மக்கள் மாத்திமரல்ல தமிழ் மக்களுக்கும் எமக்கு ஆதரவாக நிற்கின்றனர்.
Q: உங்களது ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான மத வன்முறைகள் வெறுப்புப் பிரசாரங்கள் இடம்பெறாது என உத்தரவாதம் தரமுடியுமா?
நிச்சயமாக அவ்வாறு எதுவும் நடக்காது என உறுதி வழங்குவோம். அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழக்கூடிய தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நிலைப்பாடு.அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது .அப்பாவி கத்தோலிக்க மக்கள் கொல்லப்பட்டதுடன் முஸ்லிம் மக்கள் பல்வேறு நெருக்கடிக்கு முகங்கொடுத்தனர். எனவே இது தொடர்பில் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு நிச்சயம் எமது அரசாங்கத்தில் தண்டனை பெற்றுக்கொடுப்போம். அத்தோடு கொவிட் காலப்பகுதியில் பலவந்தமாக முஸ்லிம் மக்களின் ஜனாசாக்கள் எரிக்கப்பட்டன. தற்போது அரசாங்கம் இதற்காக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளது .இருப்பினும் மன்னிப்பு கோருவதன் மூலம் இதனை இலகுவாக கடந்து செல்ல முடியாது. அந்த காலப்பகுதியில் இனவாத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் செய்வதற்கு பயன்படுத்திய உத்தியே இந்த ஜனாசா எரிப்பு விவகாரம். எனவே இந்த தீர்மானத்தை மேற்கொண்ட தரப்பினரை சட்டத்துக்கு முன்னிறுத்துவோம்.
Q: ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நீங்களும் அநுரகுமாரவும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக உரையாற்றியதாக எதிர்க்கட்சிகள் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன. ரவூப் ஹக்கீம் ஒரு கூட்டத்தில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளாரே?
– உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம் மக்களுக்காக அவர்கள் பக்கம் உள்ள நியாயங்களை பாராளுமன்றத்தில் முன்வைத்தோம்.குறிப்பாக 2014 அளுத்கம கலவரம் தொடர்பில் கதைத்தோம்.தைரியமாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு வாழ்வதற்கு உள்ள உரிமையை பெற்றுக்கொடுக்குமாறும் கோரிக்கையை முன்வைத்தோம்.
அடிப்படைவாதம் முஸ்லிம் தாய்மாரின் கருவறையில் இருந்த உருவாகுவதாக கூறப்பட்ட அந்த உரை உண்மையில் இனவாதத்தை தோற்றுவிக்கும் வகையில் முன்வைக்கப்படவில்லை. ரவூப் ஹக்கீம் போன்றவர்களே எமக்குக்கு எதிராக சேறுபூசும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தில் முஸ்லிம் மக்கள் தாக்கப்படும் போதும் அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் யார்? அந்த மக்கள் தாக்கப்படும் போது முஸ்லிம் தலைவர்கள் என்ன செய்தார்கள். தேர்தல் காலங்களில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அரசியல் மாத்திரமே செய்தார்கள். இவர்களின் செயற்பாடுகள் தொடர்பில் நாம் வெட்கப்படுகிறோம்.
கடந்த காலங்களில் அனைத்து மக்களுடன் நான் இணைந்து செயற்பட்டுள்ளேன். முஸ்லிம்களுக்காக நாம் குரல் எழுப்பிய போது என்னை ‘முஹமட் பிமல்’ என அழைத்தனர். அதற்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. நாம் ஒருபோதும் தேர்தலுக்காக அரசியல் செய்யவில்லை.
கொள்கை ரீதியான அரசியலையே செய்கிறோம். முஸ்லிம் மக்களுக்கு எதிராக உதய கம்மன்பில போன்ற தரப்பினர் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட்டபோது நாம் தான் மக்களுக்காக முன்னின்று செயற்பட்டோம்.
Q: இனப்பிரச்சினைக்கான தீர்வு அதிகாரப்பரவலாக்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் தனித்துவமான பிரச்சினைகள் தொடர்பிலும் நீங்கள் விடே கவனம் செலுத்துவீர்களா?
– ஆம். நாம் எமது கொள்கைப் பிரகடனத்தில் இவை பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். சட்டரீதியான அதிகாரங்களைக் கொண்ட பாரபட்சத்திற்கு எதிரான ஆணைக்குழு ஒன்றிணைத் தாபிப்போம். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்துவோம். தமிழர்களின் மொழி உரிமையை அரச நிர்வாகத்தின் ஊடாக உறுதிப்படுத்துவோம். அரச நிர்வாகத்தில் தமிழர் ஒருவர் தமிழ் மொழியில் கேள்வி எழுப்பும் போது அவருக்கு தமிழ் மொழியில் பதிலளிப்பதை கட்டயமாக்குவோம். அத்துடன் மலையக மக்களுக்காக நாம் விசேட வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்போம்.
Q: தேர்தலுக்கு இன்னமும் குறுகிய காலமே உள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கு நீங்கள் கூறும் செய்தி என்ன?
கடந்த காலங்களில் சிங்களவர்களுக்கு எதிராக முஸ்லிம்களிடத்திலும் முஸ்லிமகளுக்கு எதிராக சிங்கள மக்களிடத்திலும் அரசியல் செய்யப்பட்டது. தலைவவர்களின் பேச்சைக்கேட்டும் பயந்து கொண்டும் மக்கள் வாக்களித்தனர். எனவே இந்த அரசியல் கலாசாரம் மாறவேண்டும்.எமது நோக்கமும் இலக்கும் ஒரே இலங்கை என்பதே. குறிப்பாக அரசியல் மற்றும் கலாசாரம் ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம். எனினும் அதனை எற்றுக்குகொண்டு அனைத்து இன மக்களுக்கும் தமது அடிப்படை உரிமைகளை அனுபவிக்கக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவோம். முதல் தடவையாக நாட்டில் அனைத்து மக்களின் வாக்குடன் அநுரகுமார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார். இலங்கையர் என்ற ரீதியில் இம்முறை அனைவவரும் ஒன்றிணைவோம்.- Vidivelli