(எப்.அய்னா)
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். பெளஸிக்கு 10 வருடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட இரு வருட சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் (27) தீர்ப்பளித்தது. அத்துடன் 4 இலட்சம் ரூபா அபராதமும் விதித்தது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தொடர்ந்த வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த தீர்ப்பை வழங்கினார்.
தேசிய கலந்துரையாடல், சகவாழ்வு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் தொடர்பிலான இராஜாங்க அமைச்சராக ஏ.எச்.எம். பெளஸி இருந்த போது, திடீர் அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கு என நெதர்லாந்தினால் வழங்கப்பட்ட ஒரு கோடியே 97 இலட்சம் ரூபா பெறுமதியான சொகுசு ஜீப் வண்டியை தனது சொந்த தேவைகளுக்காக பயன்படுத்தியமை, அதற்காக அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு அழுத்தம் கொடுத்தமை, அவ்வாகனத்தின் பராமரிப்புக்கு என 10 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பொது நிதியை செலவிட்டமை உள்ளிட்ட 4 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தான் குற்றவாளி என ஏ.எச்.எம். பெளஸி ஏற்றுக்கொண்டதை அடுத்தே அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
தீர்ப்பை அறிவித்த நீதிபதி நவரத்ன மாரசிங்க, 62 வருட அரசியல் அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரிடம் இருந்து இத்தகைய செயற்பாடுகளை எதிர்ப்பார்க்க முடியாது எனவும், எனவே அதனை பாரதூரமாக காண்பதாகவும் குறிப்பிட்டார். எனினும் முதல் சந்தர்ப்பத்திலேயே குற்றத்தை ஒப்புக்கொண்டமை, அவரின் வயது (86 வருடங்கள்) ஆகியவற்றை கருத்தில் கொண்டு இலகு தண்டனையை அறிவிப்பதாக கூறி ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனையை நீதிபதி அறிவித்தார். அத்துடன் ஏ.எச்.எம். பெளஸியின் கைவிரல் ரேகை பதிவுகளும் பெறப்பட்டன.
முன்னதாக கடந்த 2022 ஏப்ரல் 29 ஆம் திகதி, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தாக்கல் செய்த இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கிலிருந்து, அப்போதைய கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்கவினால் ஏ.எச்.எம். பெளஸி விடுவிக்கப்பட்டிருந்தார்.
குற்றவியல் சட்டத்தின் 186 ஆவது அத்தியாயத்துக்கு அமைய, மீள வழக்குப் பதிவு செய்ய முடியும் என்ற நிபந்தனையின் கீழ், குறித்த வழக்கை முன் கொண்டு செல்ல தீர்மானமில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, பிரதான நீதிவானுக்கு அறிவித்த நிலையிலேயே அவர் வழக்கிலிருந்து அப்போது விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையிலேயே மீள ஏ.எச்.எம். பெளஸிக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், முதல் சந்தர்ப்பத்திலேயே அவர் குற்றத்தை நேற்று முன் தினம் (27) ஒப்புக்கொண்டார்.
இந்த வாகன பயன்பாடு ஊடாக அரசாங்கத்துக்கு 10 இலட்சத்து 73 ஆயிரம் ரூபா நட்டத்தை பெளஸி ஏற்படுத்தியதாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அப்போதைய கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிலபிட்டிய முன்னிலையில் கடந்த 2016 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதன் முதலாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அப்போதைய இராஜாங்க அமைச்சர் பெளஸி 10 இலட்சத்து 73 ஆயிரம் ரூபா நட்டம் ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்ததாக நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு நெதர்லாந்தினால் குறித்த ஒரு கோடியே 97 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் வண்டியானது அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அவசர அனர்த்த நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்காக நெதர்லாந்தினால் வழங்கப்பட்டதாக நீதிவானிடம் சுட்டிக்காட்டியிருந்த இலஞ்ச ஊழல் ஆணைக் குழு அதிகாரிகள், எனினும் அந்த ஜீப்பானது 2011 முதல் 2014 வரையிலான காலப்பகுதியில் ஏ.எச்.எம். பெளஸியினால் தனது சொந்த தேவைகளின் நிமித்தம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதன்படி அவருக்கு எதிராக நான்கு குற்றச் சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கானது இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli