(எம்.வை.எம்.சியாம்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் அந்தக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் நாயகத்துக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
அலி சாஹிர் மௌலானாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று புதன்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிவான் சந்துன் விதானகே இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இதற்கமைய அலி சாஹிர் மௌலானாவை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதை தடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பருக்கு இந்த இடைக்காலத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் இந்த இடைக்காலத்தடையுத்தரவு எதிர்வரும் 11 ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
மனுதாரர் தனது மனுவில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கும் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றதாகவும் எனினும் அந்தக் கூட்டத்தில் தான் பங்கேற்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் எனினும் அந்த தீர்மானத்தை கட்சி தமக்கு அறிவிக்கவில்லை எனவும் மனுதாரர் தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தாம் தீர்மானித்ததாகவும் எனினும் தகுந்த காரணங்கள் இன்றி கட்சியின் உயர்பீடம் தம்மை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்குவதற்கும் தமக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ள நிலையில் கட்சியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அலி ஸாஹிர் மௌலானா ஜனாதிபதியைச் சந்தித்து எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரை அந்தக் கட்சியின் அங்கத்துவத்தில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதேவேளை அலி சாஹிர் மௌலானா அபிவிருத்தி திட்டங்களுக்கான அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சராக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli