கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் இதுவரை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களைவிடவும் பல அமிசங்களில் வேறுபடுவதாகக் காணப்படுகின்றது. முதலாவதாக, மொத்தம் முப்பத்தொன்பது வேட்பாளர்களைக் களத்தில் குதிக்கவைத்து ஒரு சாதனையை இத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவதாக, இத்தேர்தல் இரு தலைமுறைகளுக்கு இடையிலான ஒரு போராட்டக் களமாக மாறியுள்ளது. மூன்றாவதாக, இலங்கை ஒரு முன்னேற்றகரமான புதிய சகாப்தத்தினுள் புகுமா இல்லையா என்பதை முடிவுசெய்யும் ஒரு சந்தர்ப்பமாகவும் இது தோற்றமளிக்கின்றது. நான்காவதாக, சிறுபான்மைச் சமூகங்கள் சந்தர்ப்பவாத அரசியலையே தொடர்ந்தும் மேற்கொள்வதா அல்லது ஒரே நாட்டுமக்கள் என்ற அடிப்படையில் ஜனநாயக உரிமைகளுடனும் சமத்துவத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகவும் அமைந்துள்ளது. இறுதியாக, வெளியுலகச் சக்திகள் குறிப்பாக அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் தத்தம் நலனுக்காக இத்தேர்தல் நகர்வுகளை மிக உன்னிப்பாகக் கவனித்தவண்ணம் இருக்கின்றன. அவையெல்லாம் ஒருபுறமிருக்க, இக்கட்டுரை இலங்கை முஸ்லிம்களை மையமாகவைத்து இத்தேர்தலில் அச்சமூகத்தின் புத்திஜீவிகளின் பங்களிப்பைப்பற்றிய ஒரு சில கருத்துக்களைச் சமர்ப்பிக்க விரும்புகிறது.
யார் இந்தப் புத்திஜீவிகள்?
பொதுவாக எந்தப் பிரச்சினையையும் பக்கச்சார்பின்றி தெளிவாகவும் யதார்த்தத்துடனும் சிந்தித்துச் செயலாற்றுபவர்களையே புத்திஜீவிகள் எனக் கூறுவர். அதற்காக அவர்கள் படித்துப் பட்டம்பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்பது நியதி அல்ல. அவ்வாறான ஒரு வர்க்கம் சிறிய அளவில் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் தொன்றுதொட்டு இருந்துவந்துள்ளது எனினும், அதன் தாக்கத்தினைச் சமூகம் அனுபவித்தமை குறைவு. அதற்கு உலமாக்களின் மதபோதனைகளும் கட்டுப்பாடுகளும் ஒரு முக்கிய காரணமெனக் கூறலாம். ஆனால் அண்மைக் காலங்களில் அதுவம் 1970களின் பின்னர் உலகியற்கல்வியின் பரவலான ஊடுருவலால் கணிசமான அளவில் புத்திஜீவிகளின் எண்ணிக்கை முஸ்லிம்களிடையே அதிகரித்துள்ளமை கண்கூடு. அதில் ஆண்களும் பெண்களும் அடங்குவர். அறிவுலகின் பல துறைகளிலும் தேர்ச்சிபெற்றுச் சுயமாகச் சிந்தித்துச் செயலாற்றக் கூடிய ஒரு முஸ்லிம் வர்க்கம் இலங்கையின் நாலாபக்கமும் வளர்ந்துள்ளது. இது பெருமைக்குரிய ஒரு விடயம் என்பதைப் பாராட்டும் அதேவேளை, அவர்களின் சிந்தனைத் தாக்கத்தினை முஸ்லிம் சமூகம் அனுபவித்துள்ளதா என்பது சந்தேகமே. ஆனால் அந்தத் தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடிய ஒரு காலகட்டத்தில் இன்று நாடும் நாட்டு மக்களும் அவர்களுள் குறிப்பாக முஸ்லிம்களும் வாழ்கிறார்கள் என்பதையும் அதனால் முஸ்லிம் புத்திஜீவிகளின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதையும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது. அவ்வாறான ஒரு சூழலிலேதான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப்போகிறது.
ஜனாதிபதித் தேர்தல்
ஏற்கனவே குறிப்பிட்டதுபோன்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டபடி செப்டம்பர் 21ல் ஏதும் பாரதூரமான அசம்பாவிதங்கள் இல்லாமல் நடைபெறுமானால் அதன் முடிவு ஒன்றில் இந்த நாட்டை ஒரு புதியசகாப்தத்துக்குள் நுழைக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம், அல்லது பழைய குருடி கதவைத்திறடி என்பதுபோல் பல தசாப்தங்களாக நடைமுறைப்படுத்தப்பட்டுத் துருப்பிடித்த ஓர் அரசியற் கலாச்சாரத்தினுக்குள் அதன் பண்பாடற்ற ஆட்சிக் குணாதிசயங்களுடன் தொடர்ந்தும் இயங்கவைக்கலாம். இந்த நாடும் இந்நாட்டு மக்களும் இந்த அளவுக்குப் பாரியதொரு பொருளாதார நெருக்கடிக்குள் வாழவேண்டியதற்கு அடிப்படைக் காரணம் அந்த அரசியற் கலாசாரமும் அதன் ஆட்சிப்பண்புகளும் என்பதை இளம் சந்ததியொன்று தெளிவாக உணர்ந்துள்ளதையே 2022ல் நடைபெற்ற அரகலயக் கிளர்ச்சி உலகுக்கு உணர்த்தியது. அந்தக் கிளர்ச்சியின் அடுத்த கட்டமாக அமையப்போகின்றது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்.
முக்கோணப் போட்டி
இந்தத் தேர்தலிற் குதித்துள்ள அத்தனை வேட்பாளர்களுள் மூவரைத்தவிர மற்ற அனைவரும் தனக்கு மூக்குப்போனாலும் எதிரிக்குச் சகுனப்பிழை என்பதற்கிணங்க தாங்கள் விரும்பாத ஒருவர் வெற்றிபெறுவதைத் தடுப்பதற்காக வாக்குகளைப் பிரிக்கும் நோக்கில் குதித்துள்ளார்களே ஒழிய அவர்களே வெல்லுவதற்காக அல்ல.
ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக ஆகிய மூவருக்கிடையிலேதான் இப்போட்டியின் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும். இவர்களுள் முதலிருவரும் பழமை விரும்பிகள். அதாவது, நாட்டின் அரசியற் கலாச்சாரமும் அதன் ஆட்சிப் பண்புகளும் மாறாதிருக்க வேண்டுமென விரும்புபவர்கள். ஏனெனில் அவர்கள் அந்தக் கலாசாரம் வளர்த்த அரசியல்வாதிகள் என்பது மட்டுமல்ல அதே கலாச்சாரத்தின் அசிங்கமான பண்புகளே இத்தேர்தலிலும் தங்களுக்கான ஆதரவாளர்களைத் திரட்டுவதற்குப் பயன்படுவதை உணர்வர். இவ்விருவருமே அரசியலை ஒரு வியாபாரமாகக் கருதுபவர்கள். தமது ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் விலைபேசி வாங்குவதற்கு நடைமுறையிலுள்ள அரசியற் கலாச்சாரம் பெரிதும் பயன்படுகின்றது. இந்த வலைக்குள் முஸ்லிம் அரசியல்வாதிகள் சிக்கியுள்ளார்கள் என்பதை வாசகர்களுக்கு விளக்கத் தேவையில்லை. ஆனால் அனுர குமார திசாநாயக என்ற மூன்றாமவர் அந்தக் கலாச்சாரத்தையே மாற்றுவதற்காக ஓர் இளைய தலைமுறையின் போராளியாகப் பெரும்பான்மைச் சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து களமிறங்கியுள்ளார். இம்மூவரினதும் பிரச்சாரத்தை விரிவாக விளக்குவதற்கு இக்கட்டுரையின் நீளம் இடம் தராது என்பதால் அவற்றுள் ஒரு விடயத்தைமட்டும் கட்டுரையின் முக்கிய நோக்கத்தை முன்வைத்து விரிவாக ஆராய்வது பொருந்தும்.
அரசியற் கலாசாரமும் ஆட்சிமுறைப் பண்பாடுகளும்
சுருக்கமாகக் கூறினால், ஜனநாயகம் என்ற பெயரில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வளர்ப்பதே ஆட்சியின் அடிப்படை இலட்சியமாகக்கொண்டு அதற்கேற்றவாறு ஆட்சிமுறையின் தார்மீகப் பண்புகளையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஆட்சிபீடத்தில் தொடர்ந்தும் அமர்ந்திருப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளின் தொகுப்பே சுதந்திர இலங்கையின் அரசியல் வரலாறு. அந்தக் கலாச்சாரமே இன்றைக்கு இந்த நாட்டின் இன ஒற்றுமையைச் சீர்குலைத்து, பொருளாதாரத்தையும் சீரழித்து, பாரிய கடன்சுமைக்குள் நாட்டையே அடகுவைக்கும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்துள்ளது. ஊழல்கள் நிறைந்த நிர்வாகமும் நீதிவழுவும் நெறிமுறைகளுமே, இன்றைய அரசியற் கலாச்சாரத்திலே ஆட்சிபுரியும் பண்புகளாக மிளிர்கின்றன. இது ஒரு சாக்கடை அரசியல். இதனை வேருடன் பிடுங்கி எறிந்துவிட்டு ஒரு புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்காதவரை இலங்கைக்குச் சுபீட்சம் இல்லை என்பதே இன்றைய யதார்த்தம்.
முப்பத்தொன்பதிலே ஒன்று
முற்றிலும் ஆண்களாக முப்பத்தொன்பது வேட்பாளர்கள் குதித்துள்ள இத்தேர்தற் களத்திலே அனுர குமர திசாநாயக என்ற ஒருவர் மட்டுமே இந்தச் சீரழிந்த அரசியற் கலாச்சாரத்தை சமூகப்புரட்சிமூலம் துடைத்தெறியாதவரை இலங்கைக்கு விடிவுகாலம் இல்லை என்பதை அவர் களம் இறங்கிய முதல் நாளிலிருந்தே கூறிவருவது முஸ்லிம்களின் காதுகளுக்குக் கேட்கவில்லையா? இந்த நச்சுக் கலாச்சாரம் நீக்கப்படதவரை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அவர்களுள் சிறுபான்மை இனங்களுக்கும் அவற்றுள் முஸ்லிம்களுக்கும் செழுமை கிட்டாது என்பது ஏன் இன்னும் ஒரு புரியாத புதிராக முஸ்லிம்களுக்குத் தோன்றுகிறதோ? காரணம் அவர்கள் தமது அரசியல் தலைவர்களின் மகுடியில் மயங்கிக் கிடப்பதே.
சாக்கடை வளர்த்த முஸ்லிம் அரசியல்
மேற்கூறிய சாக்கடை அரசியலின் செல்லப்பிள்ளைகளாக வளர்க்கப்பட்டவர்களே இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் என்பதை மிக மனவேதனையுடன் குறிப்பிட வேண்டியுள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலிலே பச்சோந்திகளாக மாறி எவருடன் இணைந்தால் பேரின்பம் காணலாம் என்று கனவுகாணும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்களும் ஊடகக் காணொளிப் பேட்டிகளும் சாக்கடையின் துர்மணத்தையே வீசுகின்றன. தலையிலே தொப்பியுடன் தாடியும் வளர்த்துக்கொண்டு அல்லாஹ்வின் நாமத்தையும் அவனது தூதரின் வாய்மொழிகளையும் உச்சரித்தவண்ணம் முஸ்லிம் சமூகத்தை விலைபேசி விற்கும் இத்தலைமைகளின் நாடகம் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கேனும் புரியவில்லையா? நிச்சயமாகப் புரிந்திருக்கும். ஆனால் அவர்கள் இச்சந்தர்ப்பத்தில் மௌனிகளாக இருப்பதேன் என்பதுதான் புரியவில்லை.
முஸ்லிம் புத்திஜீவிகளே!
அதிகாரத்தின்முன் உண்மையைத் துணிந்து கூறுவதுதான் ஓர் அறிவாளிக்கு இலக்கணம். இது இன்றைய இலங்கையின் ஆண் பெண் அடங்கிய அத்தனை முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் தெரியாத ஒரு மந்திரமல்ல. ஆனால் தெரிந்திருந்தும் நீங்கள் ஏன் மௌனிகளாக இருக்கிறீர்களோ? உங்கள் சமூகத்தின் போலித் தலைமைகளின் முகமூடியைக் கிழித்தெறிந்து அவர்களின் சுயரூபத்தை அவர்களால் ஏமாற்றப்படும் மக்களுக்கு வார்த்தைகளாலும் எழுத்துக்களாலும் உங்களால் காட்டமுடியாதா? இது உங்களின் சமூகத்தொண்டு மட்டுமல்ல, காலத்தின் கட்டாயமும்கூட.
செயற்படுத்த முடியாத
உறுதிமொழிகள்
தற்போதிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ வங்குரோத்துக்கு ஆளாகிக்கிடந்த பொருளாதாரத்தை தானே முன்வந்து கட்டியெழுப்பி விட்டதாகவும் அவரையே மீண்டும் பதவியில் அமர்த்திவிட்டால் 2048ல் இலங்கையை ஒரு நவீன தொழில்நுட்ப ஏற்றுமதித் தளமாக்கிச் சுவர்க்கபூமியாக மாற்றுவதாகவும் எல்லா அரசாங்க ஊழியர்களுக்கும் தலா 25,000 ரூபா சம்பள உயர்வு வழங்குவதாகவும் தோட்டத் தொழிலாளிகளுக்கு அதிகப்படியான குறைந்த பட்சவேதனம் வழங்குவதாகவும் உறுதிமொழிகளை அள்ளிவீசுகிறார். இவை அனைத்தும் ஏன் சாத்தியமாகாது என்பதை பொருளியல் அடிப்படையிலும் இன்று இலங்கையின் பொருளாதார மீட்சியில் முக்கிய பங்கேற்றிருக்கும் சர்வதேச நாணயநிதியின் கட்டுப்பாடுகளின் அடிப்படையிலும் விளக்கமுடியுமெனினும் கட்டுரையின் நீளத்தைக் குறைப்பதற்காக அதனைத் தவிர்த்து வாசகர்கள் விரும்பினால் வேறொரு கட்டுரையில் அந்த முயற்சியை மேற்கொள்வது நன்று.
ரணிலை எதிர்த்துப் போராடும் இரண்டாவது நபர் சஜித். அவரும் அவருடைய தளபதிகளும் ரணிலின் வரிகள் ஏழைமக்களின் வாழ்வில் ஏற்படுத்திய பொருளாதார வறுமையை மையமாகவைத்தே தமது பிரச்சாரப் பவனியை நடத்துகிறார்களே அன்றி அவர்களிடம் மாற்றுப் பரிகாரம் ஏதும் உருப்படியாக இல்லை. சர்வதேச நாணயநிதியுடன் வரிப்பளுவைக் குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் நவீன தொழில் நுட்பங்களையும் வெளிநாட்டு முதலீடுகளையும் கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம் என்றும் கூறுகிறார்கள். அதைத்தானே ரணிலும் சொல்கிறார்?
ஆனால் அனுரவின் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை இவற்றிலிருந்து வேறுபடுகின்றது. அவரது கட்சியின் பொருளாதாரக் கருத்துக்களைச் சுருக்கமாக நோக்கின் அக்கட்சியும் சர்வதேச நாணயநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதோடு உள்நாட்டு உற்பத்தித் துறையை எவ்வாறு மேம்படுத்தி அதன் தேவைகளுக்கு ஏற்ப சந்தைப் பொருளாதாரச் சக்திகளையும் வெளிநாட்டு முதலீடுகளையும் வழிப்படுத்தி வெளிநாட்டுப் பொருளாதாரத் தாக்கங்களின் சீர்கேடுகளைக் குறைத்து ஒரு ஸ்திரமான நிலையை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது. அதிலே பல நன்மைகள் உண்டென்பதை இக்கட்டுரை ஆசிரியர் உணர்கின்றார். முஸ்லிம் புத்திஜீவிகளும் இதனை விளங்கிக்கொண்டு முஸ்லிம் வாக்காளர்களுக்கு அதன் யதார்த்தத்தை உணர்த்தவேண்டும். ஒட்டுமொத்தத்தில் அனுரவின் கட்சியின் நிலைப்பாட்டில் பல சிறந்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.
இலங்கையின் இன்றைய நிலையில் ஆட்சியின் பண்புகளை மட்டுமல்ல சந்தையின் பண்புகளையும் மாற்றவேண்டி உள்ளது. தடையற்ற சந்தைப் பொருளாதாரம் என்ற போர்வைக்குள் மாபியாக்களின் ஊடுருவலை ஏன் ஆட்சியிலுள்ளவர்களே கண்டும் காணாததுபோல் இருக்கின்றனர்? இல்லையென்றால் ரூபாவின் மதிப்பு ஏறியபோதும் ஏன் பொருட்களின் விலைகள் சரிய மறுக்கின்றன? மாபியாக்களின் எடுபிடிகளையும் ஒழிப்பதாக அனுரவின் கட்சி கூறுவதை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
ஒட்டுமொத்தமாக, எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் புத்திஜீவிகளின் பணி மகத்தானது. அவர்கள் நாட்டின் யதார்த்த நிலையையும் வேட்பாளர்களின் ஏமாற்று வார்த்தைகளையும் முஸ்லிம் வாக்காளர்களுக்கு உணர்த்துவதே அவர்கள் தமது தாய்நாட்டுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாகும்.– Vidivelli