கண்டி மற்றும் மாவனெல்லை நகரங்களை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ள பின்னணியில் அரசியல் சூழ்ச்சிகள் இருக்கலாம். அதனால் இச் சம்பவங்கள் குறித்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவு விரிவான விசாரணைகளை நடத்தி சூத்திரதாரிகளைக் கண்டறிய வேண்டும் என பொதுபலசேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன் தெனிய நந்த தேரர் தெரிவித்தார். கண்டி மற்றும் மாவனெல்லையை அண்மித்த பகுதிகளில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நான்கு முஸ்லிம் இளைஞர்கள் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இச் சம்பவங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். மீண்டும் நாட்டில் சிங்கள –முஸ்லிம் இனக்கலவரங்களை ஏற்படுத்துவதற்கான திட்டமிட்ட செயலாகவும் இருக்கலாம். அதனால் இதன் பின்னணியில் உள்ளவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.
ஆட்சியாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் நாட்டின் சட்டத்தினையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறான மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.சமூகங்கள் உணர்ச்சி வசப்பட்டு வன்முறைகளில் ஈடுபடக் கூடாது. மதத்தலைவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் மக்களைச் சரியான பாதையில் வழி நடத்த வேண்டும் என்றார்.
-Vidivelli