காலித் ஹமூத் அல்-கஹ்தானி,
இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர்
சவூதி அரேபிய பட்டத்து இளவரசர், பிரதமர், மற்றும் சவூதி தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்தின் (SDAIA) இயக்குநர்கள் குழுவின் தலைவராகிய முஹம்மத் பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அவர்களின் ஆதரவில், வருகின்ற செப்டம்பர் மாதம் 10-12 ஆம் திகதி வரை மூன்றாவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு (GAIN) இடம்பெறவுள்ளது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் துறை சார் வல்லுனர்கள், சர்வதேச தலைவர்கள் ஒன்று கூடவுள்ள இம் மாநாடானது, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் உள்ள மன்னர் அப்துல் அசீஸ் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.
இந்த உச்சி மாநாடானது முழுவதுமாக சவூதி தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்தால் (SDAIA) ஒழுங்கு செய்யப்பட்டு நடாத்தப்படுகிறது. இம்மாநாட்டின் போது, புத்தாக்க செயற்கை நுண்ணறிவு, நகர்ப்புற வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு, மற்றும் செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை ஆளுமை போன்ற முக்கிய கருப்பொருள்கள் பல தொடர்பாக ஆராயப்படவுள்ளதோடு இவற்றின் மூலம் சமூகம், வணிகம் மற்றும் ஆளுமை ஆகியவற்றில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படவுள்ளது.
Accenture, Oracle,Dell Technologies, Simens, Boston Dynamics, மற்றும் Google Cloud போன்ற தொழில்துறை ஜாம்பவான்களும் இவ்வுச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்
இந்த உச்சி மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமான பேச்சாளர்கள் பங்கேற்கவுள்ளனர். உலகத் தலைவர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களும் இவர்களுள் அடங்குவர். இவர்கள் செயற்கை நுண்ணறிவு சார் கலந்துரையாடல்கள், விவாதங்களை முன்னெடுப்பதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய செயற்கை நுண்ணறிவு சார் முயற்சிகளை இயக்கும் வகையிலான சர்வதேச ஒத்துழைப்புகளுக்கு வழி சமைப்பதோடு, எல்லைகளைக் கடந்த நெறிமுறை புத்தாக்கங்களையும் ஊக்குவிப்பர்.
இந்த உச்சி மாநாட்டில், பொது செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்த கலந்துரையாடல், செயற்கை நுண்ணறிவு சக்தியூட்டப்பட்ட துல்லிய மருத்துவம் குறித்த குழுக் கலந்துரையாடல்கள், நிலையான வளர்ச்சி மற்றும் ஸ்மார்ட் நகரங்களில் செயற்கை நுண்ணறிவின் பங்கு குறித்த பட்டறைகள் போன்ற உயர்மட்ட அமர்வுகளும் நடைபெறவுள்ளன.
சவூதி தரவுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையத்தின் (SDAIA) தலைவர் கலாநிதி அப்துல்லா பின் ஷரப் அல் காம்தி கூறியதாவது:
“மூன்றாவது உலகளாவிய AI உச்சிமாநாட்டிற்கு நாங்கள் தயாராவதன் ஊடாக நாங்கள் ஒரு புதிய சகாப்தத்தில் நுழைகிறோம். இங்கே, AI இனை இப்போது அது என்ன நிலையில் உள்ளது, மற்றும் அது வருங்காலத்தில் எத்திசை நோக்கிச் செல்கிறது, மேலும் நேர்மறையான எதிர்காலத்தை வடிவமைக்க நாம் தீர்க்க வேண்டிய நெறிமுறை சிக்கல்கள் என்பவற்றினூடாக ஆராய்ந்து அனுகவிருக்கறோம். AI இன் திறனை முழுமையாக உணர்ந்து அதன் விளைவுகளை பொறுப்புடன் கையாள்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது.”
பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் தலைமையின் கீழ், அனைவருக்கும் பயனளிக்கும் AI தொழில்நுட்பங்களை உருவாக்க சவூதி அரேபியா அர்ப்பணிப்புடன் இருப்பதாக அவர் மேலும் கூறியதோடு, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க AI எவ்வாறு உதவும் என்பதை ஆராய்வதற்காக, உலகளாவிய தலைவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களை ரியாத்திற்கு வரவேற்பதில் அவர் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
GAIN 2024 உலகளாவிய செயற்கை நுண்ணறிவு புத்தாக்கத்திற்கான ஊக்கியாக இருக்கும் அதே நேரம் பங்கேற்பாளர்களுக்கு 120க்கும் மேற்பட்ட அமர்வுகளில் ஈடுபடவும், தொழில்துறை முன்னோடிகளுடன் உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும், உச்சி மாநாட்டின் போது அறிவிக்கப்படும் புரட்சிகரமான செயற்கை நுண்ணறிவு கூட்டுமுயற்சிகளுக்கு பங்களிக்கவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். மேலும் இம்மாநாட்டின் போது SDAIA மற்றும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவும், அறிவிப்புகள் வெளியிடப்படவும் உள்ளன.- Vidivelli