இலங்கையின் வரலாறு நெடுகிலும் இந்நாட்டின் இருபெரும் தேசிய கட்சிகளும், அவற்றிலிருந்து பிரிந்துபோன கட்சிகளும், பல்வகை மக்களை சம உரிமையுள்ள பிரஜைகளாக நடாத்தாமல் முரண்பாடுகளையும் யுத்தங்களையும் உருவாக்கி, தங்கள் அரசியல் லாபங்களை அடைந்துகொண்டதுடன், அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்தும், தமது நிர்வாகத் திறனின்மை குறித்தும், ஊழல்கள் குறித்தும் வரலாறு நெடுகிலும் மக்களின் கவனத்தை மிகவும் லாவகமாக திசைதிருப்பி வந்துள்ளன.
எனினும் 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியானது, இவ்வாறான நாட்டைக் குட்டிச்சுவராக்கிய சக்திகளை விரட்டியடிக்க வேண்டும், அரசியல் முறைமையில் மாற்றம் வேண்டும், எல்லா இன மக்களையும் சமத்துவமாக நடாத்தும் ஒரு பொறிமுறையை நோக்கி நகர்தல் வேண்டும் என்ற முக்கியமான தீர்மானங்களை நோக்கிய ஒரு பெரும் மக்கள் போராட்டத்திற்கு இட்டுச் சென்றது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், சமூக நீதிக் கட்சி தனது உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளாக பின்வருவனவற்றை மக்களுக்கு முன்வைக்கிறது.
1. கடந்த 76 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து, நம் தாய்த் திருநாட்டை சீரழித்து சின்னாபின்னமாக்கிய அரசியல் சக்திகளுக்கு உங்கள் ஆதரவையும், வாக்குகளையும் வழங்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறது.
2. இந்தத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி, எந்தவொரு கூட்டணிக்கோ, வேட்பாளருக்கோ தமது நேரடி ஆதரவை வழங்காது.
3. அதே நேரம், இந்நாட்டில் ஆட்சியியல் முறைமை மாற்றம் (system change), அரசியல் கலாசாரத்தில் மாற்றம் (change in the political culture) என்பவற்றை இலக்காகக் கொண்டு செயற்படும் ‘மாற்று சக்திக்கு’ உங்கள் வாக்குகளை கட்டாயம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
4. ஆனால் அந்த வாக்கை வெறுமனே ‘இந்த மாற்றங்கள் வரும் என்கிற நம்பிக்கையில்’ மாத்திரம் வாக்களிக்கக்கூடாது. ஏனெனில் இந்த மாற்று சக்தியின் தேவை என்பது சுதந்திர இலங்கையின் பின்னர், பெயர் தெரிந்த, தெரியாத, தங்களது உயிர், உடைமைகள் மற்றும் காலத்தை செலவழித்து இவ்வாறான ஒரு மாற்றத்திற்காக பேசியும் எழுதியும் செயற்பட்டும் வந்த அனைவரதும் ஒரு எதிர்பார்ப்பு. ஆகவே இவ்வாறான ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் ஒரு பாரிய பொறுப்பு எம் அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ளதாக உணர்கிறோம். யாருக்கும் நிபந்தனையற்று ஆதரவு தெரிவிப்பது, ஈற்றில் அதிகாரத்திற்கு வருபவர்களுக்கு மிதமிஞ்சிய அதிகாரத்தை வழங்குவதாகவும், அவர்களின் பொறுப்புக்கூறல் என்ற கடமையிலிருந்தும் அவர்களை விடுவிடுப்பதாகவும் மாற்றிவிடும்.
5. ஆகவே கீழ்குறிப்பிடப்படும் நிபந்தனைகள் உள்ளிட்ட முக்கியமான அரசியல் கோரிக்கைகள் பற்றிய தெளிவான நிலைப்பாடுகளை மக்கள்/வாக்காளர்கள், மாற்றுச் சக்தியிடம் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
அ. தேசிய பிரச்சினைகள்:
1. இனப்பிரச்சினைக்கான தீர்வு: எல்லாத் தேசிய இனங்களையும், அடையாளம் காணப்பட்ட 19 இற்கும் மேற்பட்ட இனக்குழுக்களையும் உள்ளடக்கிய, பொருத்தமான அதிகாரப் பகிர்வை வழங்கும் வகையிலான அரசியல் தீர்வுத் திட்டத்தை வரைய உறுதி பூணல். அதனை நடைமுறைப்படுத்துவதற்காக அனைத்து இலங்கையரையும் உள்ளீர்க்கும் வகையிலான புதிய அரசியலமைப்பின் (new constitution) முக்கியமான உள்ளடக்கத்தை மக்கள் முன் சமர்ப்பித்தல் மற்றும் அதனை உருவாக்குவதற்காக நியமிக்கப்படும் குழுவில் அனைத்து இனக்குழுக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கல்.
2. பொருளாதாரத் தீர்வு: சர்வதேச நாணய நிதியத்தினை எவ்வாறு கையாள்வது என்று வெளிப்படையாக முன்வைத்தல். நாடு எதிர்நோக்கியிருக்கும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்கான நடைமுறைச் சாத்தியமான பொருளாதார மீட்பு வேலைத்திட்டத்தினை தெளிவாக முன்வைத்தல்.
3. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல்: கடந்த 46 வருடங்களாக இந்த நாட்டின் பொருளாதாரம், அரசியல், மனித உரிமைகள், தேசிய ஒற்றுமை போன்ற அனைத்து விடயங்களையும் சீரழித்ததில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு பெரும் பங்குள்ளது. இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை எமது நாட்டிற்குப் பொருத்தமற்றதும் மிகவும் ஆபத்தானதும் என்றும் ஆரம்பத்திலேயே இனம்காணப்பட்ட ஒன்றாகும். எனவே இதனை ஒழிப்பது என்பது ஒவ்வொரு தேர்தலின் போதும் பிரதான பேசு பொருளாகவும், வாக்குறுதிகளாவும், தேர்தல் ஒப்பந்தங்களாவும் இருந்து வந்துள்ளது. எனவே இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையினை ஒழிப்பது குறித்தும் எவ்வளவு காலத்தில் ஒழிப்பது என்பது குறித்தும் தெளிவாக முன்வைக்க வேண்டும்.
4. சமூக, சமய, கலாசார உரிமைகள்: ஒவ்வொரு சமூகத்திற்குமான அல்லது ஒவ்வொரு இனத்திற்குமான தனித்துவமான சமூக, சமய, கலாசார உரிமைகளையும் பண்பாட்டுத் தனித்துவங்களையும் உத்தரவாதப்படுத்தல். இதன் மூலம் பன்மைத்துவத்தையும், பல்வகைமையையும் பேணிப் பாதுகாத்தல். இவ்விவகாரத்தில் தம்மால் ஏற்கனவே கடந்த காலத்தில் கட்சியாகவோ அல்லது கூட்டணியாகவோ முன்வைக்கப்பட்டுள்ள சமூக, சமய, கலாசார உரிமைகள் குறித்த சர்ச்சைக்குரிய நிலைப்பாடுகளில் மாற்றங்கள் இருந்தால், புதிய நிலைப்பாடுகளை மக்களிடம் முன்வைத்து தெளிவுபடுத்தல். சகல தனியார் சட்டங்கள் மற்றும் சமூக சமய கலாசார உரிமைகள் சார்ந்த விடயங்கள் குறித்த கொள்கைகளை வகுப்பதாக இருந்தால், அந்தந்த சமூக, சமய தரப்பினரின் கலந்தாலோசனையுடன் கூடிய பங்கேற்பை உறுதிசெய்யும் பொறிமுறையை முன்வைத்தல்.
5. தேசிய கல்விக் கொள்கை: முன்மொழியப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கைச் சட்டகம் (National Educational Policy Framework) தொடர்பான தெளிவான நிலைப்பாட்டினை முன்வைத்தல். அதில் அவசியப்படும் மாற்றங்கள், மீளாய்வுகளை சுட்டிக்காட்டுதல்.
6. சட்டத் திருத்தங்கள்:
I. சட்டவாக்கத்தின் பின்னரான நீதித்துறை மீளாய்வினை (Post Enactment Judicial Review) அறிமுகம் செய்தல். இலங்கையின் அரசியலமைப்பில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகளை பாதிக்கும் வகையில், நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களின் மூலம், பல அடிப்படை மனித உரிமை மீறல்கள் அரசி இயந்திரத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் அச்சட்டத்தின் வலிதான தன்மையை நீதிமன்றத்தில் எக்காலத்திலும் கேள்விக்குட்படுத்தக்கூடிய நீதித்துறை மீளாய்வினை அறிமுகம் செய்தல் வேண்டும். அத்தோடு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் போன்ற மிலேச்சத்தனமான சட்டங்களை இல்லாதொழித்தல் வேண்டும்.
II. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒன்றுக்கொன்று முரண்பாடுகள் ஏற்படக்கூடிய (conflict of interest) கடமைகளான ‘அரசாங்கத்திற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் மக்களுக்கான பொது வழக்கறிஞராக (public prosecutor) இருத்தல் என்பன காணப்படுவதனால், சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து பொது வழக்கறிஞர் அலுவலகத்தை (office of public prosecutor) பிரித்து அதனை தனியொரு சுயாதீனமான அலுவலகமாக (office of independent prosecutor), 1994 மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாண காணாமலாக்கப்பட்டோர் ஆணைக்குழு மற்றும் 1998 அகில இலங்கை காணாமலாக்கப்பட்டோர் ஆணைக்குழு அறிக்கைகளின் முன்மொழிவின் படி நடைமுறைப்படுத்தல்.
7. சிறுபான்மை இனங்கள் மீதான பாரபட்சங்கள்: எண்ணிக்கைச் சிறுபான்மை இனங்கள், எண்ணிக்கைச் சிறுபான்மை என்ற ஒரே காரணத்திற்காக வளப்பங்கீடுகள், அரச உயர் பதவி நியமனங்கள் போன்ற அம்சங்களில் காட்டப்படும் பாரபட்சங்களை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்தல். அதேவேளை எண்ணிக்கைப் பெரும்பான்மையினருக்கும் அநீதியிழைக்கப்படக் கூடாது. இந்த அடிப்படையில் சம வாய்ப்பை உறுதிசெய்யும் வகையில் கொள்கைகளையும் பொறிமுறைகளையும் வகுத்தல்.
8. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம்: பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் பாராளுமன்றம், ஏனைய அரச அதிகார கட்டமைப்புக்களிலும் குறைந்தது 25% ஆக உறுதிப்படுத்தல்.
ஆ. ஏனைய பிரச்சினைகள்:
1. போர்காலத்தில் ஏற்பட்ட இழப்புக்களை மதிப்பீடு செய்து, நியாயமான முறையில் உரிய இழப்பீடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல். பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தல், காணா மலாக்கப்பட்ட மக்கள் குறித்த நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளல் மற்றும் யுத்தத்தினால் இழக்கப்பட்ட காணிகளை உரிய மக்களுக்கு மீள வழங்குதல்.
2. கொவிட் தொற்று காலத்தில் இடம்பெற்ற கட்டாய ஜனாஸா மற்றும் பூதவுடல் எரிப்புக்கான காரணங்களை
ஆராய்ந்து, நாட்டைத் தவறான முறை யில் வழிநடாத்திய தரப்பினரைக் விசாரணைக்குட்படுத்துதல். இதன் காரணமாக பாதிக்கப்பட்ட அனைத்து சமூக மக்களுக்கும் உரிய நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொடுத்தல்.
3. அறபு, இஸ்லாமிய நூல்கள் மீதான இறக்குமதியைத் தடை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தை ரத்து செய்தல். இதன் விளைவாக நிலவும் அல்குர்ஆன் இறக்குமதித் தடையையும் முடிவுக்குக் கொண்டு வருதல்.
4. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்தல். குறிப்பாக மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவு தொடர்பில் 03.03.2000 இல் வெளியிடப்பட்டு 13.07.2000 இல் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட பன்னம்பலன ஆணைக்குழுவின் சிபாரிசுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துதல்.
5. சுனாமி பேரனர்த்தம் ஏற்பட்டு 20 வருடங்கள் நிறைவுறுகின்ற நிலையில், இவ்வளவு நீண்ட காலமாக வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படும் அம்பாறை மாவட்டம் நுரைச்சோலை சுனாமி வீட்டுத் திட்டத்தை உரிய பயனாளிகளுக்கு வழங்குதல்.
6. புத்தளம் மாவட்டம் நுரைச்சோலை அனல் மின் நிலையத்தினால் ஏற்படும் சூழலியல் மற்றும் சுகாதார பாதிப்புகளுக்கான தீர்வுகளை முன்வைத்தல்.
7. மலையகத் தமிழ் மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களைக் கடந்த நிலையில் எமது நாட்டில் ஏனைய பிரஜைகளுக்குரிய அடிப்படை வசிப்பிடம், கல்வி, சுகாதார, நிர்வாக மற்றும் தொழில்வாய்ப்புக்கள் என்பவற்றை உரிய முறையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பின்தங்கிய நிலையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். இதற்குப் பிரதான காரணியாக இருப்பது, அவர்களுக்கு நில உரிமை மற்றும் சமமான பிரஜாவுரிமை மறுக்கப்பட்டு வருவதாகும். எனவே இம்மக்களுக்கான இம்மக்களை கௌரவமான சமூகமாக வாழ வைப்பதற்கான தேவையான சமமான பிரஜாவுரிமை மற்றும் நில உரிமையினை வழங்குவதற்கான முன்னெடுப்பக்களை மேற்கொள்ள வேண்டும்.
மற்றும் இதுபோன்ற விடயங்கள்.
எனவே சமூக நீதிக் கட்சி, மக்களிடம், நாட்டைக் குட்டிச் சுவராக்கிய சக்திகளுக்கு எதிராக உங்கள் வாக்குகளை வழங்குமாறு கேட்டுக்கொள்வதோடு, மாற்றுச் சக்தியிடம் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளைத்தீர்ப்பதற்கான விரிவான திட்டங்கள் இருக்கின்றனவா என்று உங்கள் பிரதேசத்தில் அல்லது தேசிய மட்டத்தில் உள்ள மாற்றுச் சக்தியின் பிரதிநிதிகளிடம் உறுதிப்படுத்திக் கொண்டு அல்லது அதனைக் கொண்டு வருவதற்கான அழுத்தங்களை வாக்களிக்க முன்னர் பிரியோகித்து வாக்களிக்கும் ஒவ்வொருவரும், இந்தத் தேர்தலில் பங்காளிகளாக மாறி உங்கள் வாக்குகளை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.– Vidivelli