முட்டுச் சந்தியில் முஸ்லிம் கட்சிகள்!

0 111

எஸ்.என்.எம்.சுஹைல்

ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பி­லான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளி­யா­கி­யி­ருந்­தது. எனினும், இந்த அறி­விப்பு வெளி­யா­வ­தற்கு முன்­ன­தா­கவே இலங்கை அர­சியல் களத்தில் தேர்தல் களம் சூடு­பி­டித்­து­விட்­டது. குறிப்­பாக முஸ்லிம் பெயர் தாங்­கிய கட்­சி­களின் நிலைப்­பா­டுகள் பற்றி முஸ்லிம் சமூகம் கூடுதல் ஆர்­வம்­கொண்­டி­ருந்­தது.

சமூக நீதிக்­கான கட்சி எனும் பதி­வு­செய்­யப்­ப­டாத தரப்பு தேர்தல் அறி­விப்­புக்கு முன்­ப­தா­கவே அநு­ர­கு­மார திஸா­நா­யக்க தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்­தி­யுடன் கொண்­டி­ருந்த தேனி­லவை முறித்­துக்­கொண்­டது. எனினும், ஐக்­கிய மக்கள் சக்­தியின் கூட்­ட­ணிக்குள் இருந்த முஸ்லிம் காங்­கி­ரசும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் தனது நிலைப்­பாட்டை அறி­விப்­பதை தாம­தப்­ப­டுத்­தி­ன. தேசிய காங்­கி­ர­ஸா­னது அர­சாங்­கத்­திற்கு ஆதரவுக் கரம் நீட்­டி­வந்­தது. அத்­துடன், ஜனா­தி­பதித் தேர்­தலில் தான் போட்­டி­யி­டு­வது தொடர்பில் ரணில் விக்­ர­ம­சிங்க அறி­வித்த காலி கூட்­டத்தில் கலந்­து­கொண்ட அதா­வுல்லாஹ் தான் ரணி­லுக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தற்­கான சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அத்­துடன், ஐக்­கிய மக்கள் சக்­தியின் முஸ்லிம் பிர­தி­நி­திகள் வெவ்­வே­றான நிலைப்­பா­டு­களில் இருந்­தனர். அர­சாங்­கத்தை ஆத­ரிக்கும் முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் ஆரம்­பத்தில் அமை­தி­ காத்­தனர்.

தேர்­த­லுக்­கான தினம் அறி­வித்­ததன் பின்னர், முஸ்லிம் கட்­சி­களின் உயர்­பீ­டங்கள் ஆங்­காங்கே கூட தாம் யாரை ஆத­ரிப்­பது என்று ஆராய்ந்­தனர். எனினும், கடந்த வாரம் வேட்­பு­மனு தாக்கள் இடம்­பெற்­றது. இதற்கு முன்­ப­தாக கடந்த 4 ஆம் திகதி தாருஸ்­ஸ­லாமில் கூடிய மு.கா. சஜித்­துக்கு ஆத­ர­வ­ளிப்­ப­தாக அறி­வித்­தது. 8 ஆம் திகதி சுக­த­தாஸ உள்­ளக அரங்கில் இடம்­பெற்ற ஐக்­கிய மக்கள் கூட்­டணி கட்­சி­களின் ஒப்­பந்­தத்­திலும் மு.கா. தலைவர் கைச்­சாத்­திட்டார். 6 ஆம் திகதி கொழும்பில் கூடிய அ.இ.ம.கா. யாரை ஆத­ரிப்­பது என்ற கட்சி உயர்­மட்­டத்தில் ஆராய்ந்­தாலும் தீர்­மானம் வெளி­யி­ட­வில்லை. இந்­நி­லையில் மாவட்ட மட்­டத்தில் கருத்­த­றிந்த பிறகு 14 ஆம் திக­தி­யன்று சஜித்தை ஆத­ரிப்­ப­தாக அறி­வித்­தது. இந்­நி­லையில் கடந்த 15 ஆம் திகதி வேட்­பு­மனு தாக்கல் இடம்­பெற்ற பின்னர் தேசிய காங்­கிரஸ் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவை சந்­தித்து தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யது.

இவ்­வாறு பாரா­ளு­மன்­றத்தில் ஒன்­றுக்கும் மேற்­பட்ட உறுப்­பி­னர்­களை கொண்­டுள்ள முஸ்­லிம்­கட்­சிகள் தமது ஆத­ரவை குறித்­த­தொரு வேட்­பா­ள­ருக்கு வழங்­கி­யி­ருந்­தாலும் கட்­சிக்குள் இரட்டை நிலைப்­பாடு இருந்து வந்­தது. இதனால் கட்­சி­க­ளுக்குள் பிள­வுகள் ஏற்­பட்­டுள்­ளன.

முஸ்லிம் காங்­கிரஸ்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ர­சுக்குள் தற்­போது உட்­கட்சிப் பூசல் பூதா­க­ர­மா­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி தேர்­தலில் யாருக்கு ஆத­ரவு என்ற நிலைப்­பாடு அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்தே இது வெளிப்­பட்­டுள்­ளது.

சஜித்­துக்கு ஆத­ர­வ­ளிக்கும் நிலைப்­பாட்டை கட்­சியின் உயர்­பீடம் எடுத்­தி­ருந்­தது. 4 ஆம் திகதி கொழும்பில் இடம்­பெற்ற கூட்­டத்­தின்­போது பாரா­ளு­மன்றில் அங்கம் வகிக்கும் ஹக்கீம், ஹரீஸ், பைஸல் காஷிம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். எனினும் அலி­ஸாஹிர் மௌலானா கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை. பின்னர் ஐக்­கிய மக்கள் கூட்­டணி ஒப்­பந்தம் இடம்­பெற்­ற­போது, கட்சித் தலை­வ­ருடன் எம்.எஸ்.தௌபீக் கலந்­து­கொண்­டி­ருந்தார். ஆனால், ஹரீஸ், பைஸல், அலி­சாஹிர் ஆகியோர் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

கடந்த வாரம் மட்­டக்­க­ளப்பு மாவட்ட மு.கா. பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­ஸாஹிர் மௌலா­னாவை சாடி கட்சித் தலைவர் பஸ் கதை ஒன்றை பேசி­யி­ருந்தார். இந்­நி­லையில், வேட்­பு­மனு தாக்­கலின் பிறகு கடந்த வெள்­ளிக்­கி­ழமை அலி­சாஹிர் மௌலானா ரணிலை சந்­தித்து தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இதன் பின்னர் அவர் கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, கட்­சியின் பிரதித் தலை­வர்­களுள் ஒரு­வ­ரான எச்.எம்.எம்.ஹரீஸை கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­து­வ­தாக ஓட்­ட­மா­வ­டியில் திங்­க­ளன்று இடம்­பெற்ற நிகழ்­வொன்­றின்­போது ஹக்கீம் குறிப்­பிட்­டி­ருந்தார். இதன்­படி மறுநாள் செவ்­வா­யன்று, அதா­வது நேற்­று­முன்­தினம் இது தொடர்­பான கடிதம் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கட்­சியின் செய­லாளர் நிஸாம் காரி­யப்பர் அறி­வித்­துள்ளார்.

அக்­க­டி­தத்தில், ‘சஜித் பிரே­ம­தா­ஸவின் தேர்தல் பிர­சாரம் சம்­பந்­த­மாக கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் 2024 ஆகஸ்ட் 16ஆம் திகதி தலை­வரின் தலை­மையில் கூட்­டப்­பட்­டது. அக்­கூட்­டத்தில் அத்­தி­யா­வ­சி­ய­மாக கட்­டா­ய­மாக எல்லா பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இருந்தும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அதில் கலந்து கொள்­ள­வில்லை. அது­மாத்­தி­ர­மல்ல, அன்றில் இருந்து இன்­று­வரை சஜித் பிரே­ம­தா­ஸவின் எந்­த­வொரு தேர்தல் பிர­சா­ரத்­திலும் ஈடு­ப­டு­வதை தொடர்ச்­சி­யாக அவர் தவிர்த்து வந்தார்’ இதனால் ஹரீஸ் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க கடந்த சனிக்­கி­ழமை குரு­நா­கலில் இடம்­பெற்ற சஜித் பிரே­ம­தா­ஸவின் பிர­சார கூட்­டத்­தின்­போது பைஸல் காஷிம் மேடை ஏறி தனது ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். இதன்­போது, ரிஷாத் பதி­யுதீன் மற்றும் ஹக்கீம் ஆகி­யோரும் பைஸலை தட்­டிக்­கொ­டுத்து சஜித்­திடம் பேசினர், அவரே அசட்­டை­யாக கடந்து சென்­றதை காணொ­ளிகள் மூலம் காணக்­கி­டைத்­தது.

இது இப்­ப­டி­யி­ருக்க, கட்சி உறுப்­பி­னர்­களை தனித்­த­னி­யாக சந்­தித்து ரணில் விக்­ர­ம­சிங்க அவ­ருக்கு ஆத­ரவு கோரி­யி­ருக்­கிறார். கட்சித் தலைவராகிய தன்­னிடம் ஆத­ரவு கோர­வில்லை என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­துள்ள ஹக்கீம் இத­னால்தான் தான் சஜித்தை ஆத­ரிக்க தீர்­மா­ன­ித்­த­தாக பிர­சாரக் கூட்­டங்­களில் முழங்கி வரு­கிறார். இது­மட்­டு­மல்­லாமல் கட்­சியை பாது­காக்க வேண்டும் என்­பதே அவரின் கோஷ­மாக இருக்­கி­றது.

அகில இலங்கை
மக்கள் காங்­கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மக்கள் கருத்­து­க­ளை­யெல்லாம் பெற்று பெரும்­பான்மை கருத்தின் அடிப்­ப­டையில் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்­கப்­போ­வ­தாக கடந்த 14 ஆம் திகதி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது. ஐக்­கிய மக்கள் கூட்­ட­ணி­யா­னது பங்­காளிக் கட்­சி­க­ளுடன் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தில் கைச்­சாத்­திட்ட பின்­னரே அ.இ.ம.கா. இவ்­வாறு சஜித்­துக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது.

புத்­தளம், களுத்­துறை, கண்டி மற்றும் திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த இளை­ஞர்கள் ரணி­லுக்­கான ஆத­ரவை வெளிப்­ப­டுத்த கோரி­யி­ருந்­த­ நி­லையில், ஏனைய தரப்­பினர் சஜித்தை ஆத­ரிக்க வேண்டும் என கேட்­டுக்­கொண்­டனர். எனினும், பொரும்­பான்­மை­யானோர் சஜித்தை ஆத­ரிக்க கோரி­ய­மை­யினால் கட்சித் தலைமை தனது இறுதி முடிவை வெளி­யிட்­டது.

இது இப்­ப­டி­யி­ருக்க அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் சார்­பாக கடந்த பொதுத் தேர்­தலில் திகா­ம­டுல்ல ­மா­வட்­டத்­தி­லி­ருந்து கட்­சியின் சொந்த சின்­ன­மான மயில் சின்­னத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற எஸ்.எம்.எம்.முஸர்ரப், அ.இ.ம.க. சார்­பாக முஸ்லிம் தேசியக் கூட்­ட­ணியின் தராசு சின்­னத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி­சப்ரி ரஹீம், அ.இ.ம.கா. சார்பில் ஐக்­கிய மக்கள் சக்­தியின் தொலை­பேசி சின்­னத்தில் அனு­ரா­த­புர மாவட்­டத்தில் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்ற இஷாக் ரஹ்மான் ஆகியோர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை கொழும்பில் ஊடக சந்­திப்­பொன்றை நடத்தி தாம் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவை வெளிப்­ப­டுத்­து­வ­தாக தெரி­வித்­தனர். இவர்கள் ஏற்­க­னவே, பாரா­ளு­மன்­றத்தில் ஆளும் கட்­சிக்கு அவ்­வப்­போது ஆத­ர­வ­ளித்தும் ஆத­ரவை விலக்­கியும் வந்­த­வர்­களே.

தேசிய காங்­கிரஸ்
அதா­வுல்லாஹ் தலை­மை­யி­லான தேசிய காங்­கிரஸ் கடந்த புதன்­கி­ழமை ஜனா­தி­ப­தியை அவ­ரது தேர்தல் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து தனது ஆத­ரவை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­தது. பின்னர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 34 கட்­சிகள் கலந்­து­கொண்ட ரணில் விக்­­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்கும் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்­திலும் கைச்­சாத்­திட்­டது.

ஒற்றை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இருக்­கின்­ற­மை­யினாலோ என்­னவோ, அந்த கட்சி மாத்­திரம் பிள­வு­களில் இருந்து தப்­பித்­துக்­கொண்­டது எனலாம்.

ஏனைய முஸ்லிம் கட்­சிகள்
பதிவு செய்­யப்­பட்­டுள்ள ஏனைய முஸ்லிம் கட்­சி­க­ளான ஜன­நா­யக ஐக்­கிய முன்­னணி (துஆ) அபூ­பக்கர் இன்பாஸ் என்­ப­வரை வேட்­பா­ள­ராக கள­மி­றக்­கி­யி­ருக்­கி­றது. இந்த துஆ கட்­சி­யா­னது முன்னாள் அமைச்­சரும் வடமேல் மாகாண ஆளு­ந­ரு­மான நஸீர் அஹ­ம­து­டை­யது என்­பது பகி­ரங்­க­மா­னது.

எனினும், அவர் ஜனா­தி­பதி ரணி­லுக்கு ஆத­ரவு வழங்கி வருவதும் வெளிப்படையானதே. அத்­தோடு, அஸாத் சாலி தலை­மை­யி­லான தேசிய ஐக்­கிய முன்­னணி (நுஆ) கட்சி ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவை ஆத­ரிக்க தீர்­மா­னித்­துள்­ளது. இது இவ்­வா­றி­ருக்க, நீண்­ட­கா­ல­மாக ராஜ­பக்­சாக்­க­ளோடு உறவை பேணி­வந்த உலமா கட்­சி­யா­னது தனது பெயரை ஐக்­கிய காங்­கிரஸ் என மாற்­றிக்­கொண்டு தற்­போது சஜித்­துடன் கரம் கோர்த்­தி­ருக்­கி­றது. அத்­தோடு, நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் ஐக்­கிய தேசியக் கூட்­ட­மைப்பு (தராசு சின்னம்) என பெயரை மாற்றிக்கொண்டுள்ள முஸ்லிம் தேசியக் கூட்­ட­மைப்பும் இது­வ­ரைக்கும் தமது நிலைப்­பாட்டை அறி­விக்­க­வில்லை.

இதனிடையே, பஷீர் சேகுதாவூதை தவிசாளராகவும் எம்.ரி.ஹஸனலியை செயலாளராகவும் கொண்ட ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் எந்தவொரு தீர்மானத்தையும் இதுவரையில் வெளியிடவில்லை.

பதிவு செய்­யப்­ப­டாத சமூக நீதிக் கட்­சி­யா­னது எந்த தீர்­மா­னத்­திற்கும் வர­வில்லை. எனினும், அநீ­திக்கு எதி­ராக வாக்­க­ளிக்­கு­மாறு கேட்­டுக்­கொண்­டுள்­ளது. சில பதிவு செய்­யப்­ப­டாத கட்­சிகள் ரணி­லுக்கும் சில சஜித்­துக்கும் ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

மு.கா.வுக்குள் பிளவு
எனினும் முஸ்லிம் பிர­தான கட்­சி­க­ளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் தேசிய காங்­கி­ர­சுமே நோக்­கப்­ப­டு­கின்­றன. இதில் தேசிய காங்­கி­ரசை பிரிக்க முடி­யாது. ஏனெனில் அக்­கட்­சிக்கு ஒரே­யொரு பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வம்தான் இருக்­கி­றது. முன்னாள் அமைச்சர் அதா­வுல்­லாஹ்தான் தேசிய காங்­கிரஸ், தேசிய காங்­கி­ரஸ்தான் அதா­வுல்லாஹ்.

இருப்­பினும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ர­ஸா­னது தற்­போது பிள­வு­பட்­டுள்­ளது. ஹக்­கீமும் தௌபீக்கும் சஜித் பிரே­ம­தா­சவை வலு­வாக ஆத­ரித்து வரு­கின்­றனர். எனினும், பைஸல் காஷிம் கொஞ்சம் அமை­தி­யாக இருந்­து­விட்டு கடந்த வாரம் குரு­நாகல் பிர­சார மேடைக்கு எறி­யி­ருந்தார்.

இங்கு அலி­சாஹிர் மௌலானா கட்­சியின் தீர்­மா­னத்­திற்கு எதி­ராக ரணிலை ஆத­ரித்து இருக்­கிறார். இவர், ரணிலை ஆத­ரிப்­ப­தற்­கான கார­ணத்­தையும் தெரி­வித்­தி­ருக்­கிறார். இது இவ்­வா­றி­ருக்க அலி­சா­ஹி­ருக்கு எதி­ராக ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க இருப்­ப­தாக கட்­சியின் செய­லாளர் கடிதம் மூலம் அறி­வித்­தி­ருக்­கிறார்.

வடமேல் மாகாண ஆளு­ந­ராக பத­வி­வ­கிக்கும் நஸீர் அஹமட் முஸ்லிம் காங்­கி­ர­ஸி­லி­ருந்து நீக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்குள் உள்­வாங்­கப்­பட்டார். மட்­டக்­க­ளப்பு மாவட்ட முஸ்லிம் காங்­கிரஸ் அர­சி­யலில் ஹக்கீம் நன்­றாக சது­ரங்க ஆட்டம் ஆடு­கிறார் என்­பது இங்கு தெளி­வா­கி­றது. ஏற்­க­னவே, பஷீர் சேகு­தாவுத் ஓரம்­கட்­டப்­பட்­ட­தையும் இன்று அலி­சாஹிர் தானும் பங்­கிற்கு காய்நகர்த்­தலை மேற்­கொண்­டி­ருக்­கிறார். தற்­போது ஹிஸ்­புல்­லாஹ்வை உள்­ளீர்த்து மேற்­கொள்­ளப்­படும் நகர்­வு­களே இவ்­வா­றான பிளவுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது.

சஜித்தை ஆத­ரிக்க மு.கா. தீர்­மா­னித்­தி­ருந்தும் கட்­சியின் நிலைப்­பாட்­டுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கா­மை­யினால் ஹரீசும் கட்­சி­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருப்­பதாக மு.கா. தெரி­விக்­கி­றது. எனினும், ஜனா­தி­பதி தேர்தல் தொடர்­பி­லான தனது நிலைப்­பாட்டை அவர் இது­வரை பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தவும் இல்லை.

இங்கு முஸ்லிம் காங்­கிரஸ் தலைமை ஏன் சஜித்தை ஆத­ரிக்­கி­றது என்­ப­தற்கு வலு­வான கார­ணத்தை சொல்­ல­வில்லை. கட்­சியை ரணில் விக்­கி­ர­ம­சிங்க உடைக்­கிறார் அதனை பாது­காக்க வேண்டும் என்று ஊர் ஊராக சென்று மு.கா. புராணம் பாடு­கின்றார் ரவூப் ஹக்கீம்.

உண்­மையில் இது ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­வ­தற்­கான தேர்தல். இங்கு ஏன் இவர் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும் என்­பதை கூறி வாக்கு கோர வேண்டும். ஆனால், முஸ்லிம் காங்­கிரஸ் வெறு­மனே கட்சி ரீதி­யாக மக்­களை உசுப்­பேற்­று­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

முஸ்லிம் காங்­கிரஸ் ஜனா­தி­பதித் தேர்­தலில் ஏன் சஜித் பிரே­ம­தா­ஸவை ஆத­ரிக்­கி­றது என்­பதை தெளி­வு­ப­டுத்த வேண்டும். அத்­தோடு, அக்­கட்சி பிர­தான மூன்று கோரிக்­கை­க­ளுடன் சஜித்தை ஆத­ரிப்­ப­தாக கூறி­யி­ருக்­கி­றது. அவை என்ன கோரிக்கைகள், சமூக நலன்சார் கோரிக்­கையா, கட்சி நலன் சார் கோரிக்­கையா என்­பதும் வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.

தனித்­து­வி­டப்­பட்ட ரிஷாட்
அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சி­யா­னது கடந்த பொதுத் தேர்­தலில் கூட்­ட­ாகவும் தனித்தும் என நான்கு ஆச­னங்­களை பெற்­றது. இதில், கட்சித் தலைவர் தொடர்ந்தும் சஜித் பிரே­ம­தாஸ தலை­மை­யி­லான எதிர்க்­கட்சிக் கூட்­ட­ணி­யி­லேயே நீடித்து வரு­கின்றார். எனினும், அக்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இஷாக் ரகுமான், எஸ்.எம்.எம்.முஸர்ரப் மற்றும் அலி சப்ரி ரஹீம் ஆகியோர் ஆரம்பம் முதல் கட்­சியின் நிலைப்­பாட்­டுக்கு மாற்­ற­மா­கவே செயற்­பட்­டு­ வந்­துள்­ளனர். முஸ்லிம் காங்­கி­ர­சுக்­குள்ளும் அவ்­வப்­போது இந்­நி­லைமை தோன்­றி­யி­ருக்­கி­றது. அங்கு மன்­னிப்பு என்ற மந்­திரம் அவ்­வப்­போது வேலை செய்­தி­ருக்­கி­றது.

எனினும், அ.இ.ம.கா. பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­டை­யே­யான முரண்­பாடு இந்த ஜனா­தி­பதித் தேர்தல் அறி­விப்பின் பின்னர் யாரை ஆத­ரிப்­பது என்ற நிலைப்­பாட்டில் தோன்­றி­ய­தல்ல. கட்சி சஜித்தை ஆத­ரிக்க தீர்­மா­னித்­தி­ருக்­கி­றது. அக்­கட்சி சார்­பாக பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வான உறுப்­பி­னர்கள் ரணிலை ஆத­ரிப்­ப­தாக ஏற்­க­னவே அறி­வித்­தி­ருந்­தனர். என்­ற­போ­திலும், வேட்­பு­மனு தாக்கல் செய்­த­பின்னர் அக்­கட்சி உறுப்­பி­னர்கள் மூவரும் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஊடக சந்­திப்பில் தமது நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருக்­கின்­றனர்.
மக்கள் காங்­கி­ரசும் ஏன் சஜித்தை ஆத­ரிக்­கி­றது என்­ப­தற்­கான வலு­வான கார­ணத்தை வெளி­யி­ட­வில்லை. இவர்கள் கட்­சியின் பெரும்­பான்­மை­யி­னரின் விருப்­பின்­பேரில் ஆத­ரவை வெளி­யிட்­டி­ருந்­தாலும், சமூக நலன் கருதி எந்­த­வொரு உடன்­ப­டிக்­கை­யையும் ஐக்­கிய மக்கள் சக்­தி­யோடு செய்­து­கொண்­ட­தாக இது­வரை தெரி­ய­வில்லை.

தலைமைத்துவத்தில்தானா சிக்கல்?
கட்­சி­க­ளுக்குள் முரண்­பா­டுகள் இன்று நேற்று தோன்­றி­ய­தல்ல. 2000 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைமை பொறுப்பை ஏற்­ற­தி­லி­ருந்து கட்­சியை பாது­காப்­ப­தாக கூறியே தொண்­டர்­க­ளிடம் வாக்குக் கேட்கும் நிலையில் ரவூப் ஹக்கீம் இருக்­கிறார். அத்­தோடு, ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசும் கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக பிளவுகளை சந்தித்து வருகின்றது.

அத்தோடு, 18 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்தது முதல், ராஜபக்ச அரசாங்கத்திலும் சரி மைத்திரி அரசாங்கத்திலும் சரி முஸ்லிம்களுக்கு அநீதிகள் இழைக்கப்படும்போதெல்லாம் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்காது அமைதி காத்த இவர்கள் மக்களிடம் மன்னிப்பு கோருவதையே வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

எனவே, இங்கு தலை­மைத்­து­வத்­தில்தான் ஏதோ­வொரு சிக்கல் இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. இப்­படி முஸ்லிம் கட்­சி­களின் பெயரில் ஏமாற்று வியா­பாரம் நடத்­து­வ­தை­விட தேசிய கட்­சி­களில் நேர­டி­யாக இணைந்து இணங்கி ஒத்­து­ழைத்து அர­சியல் மேற்­கொள்ள முடியும் அல்­லவா.

முஸ்லிம் காங்­கி­ரசும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் ஏன் சஜித்தை ஆத­ரிக்­கின்­றது என்­ப­தற்­கான வலு­வான கார­ணத்தை முஸ்­லிம்­க­ளுக்கு இன்னும் தெளி­வு­ப­டுத்­த­வில்லை. அத்­தோடு, தேசிய காங்­கி­ரசும் தேசிய ஐக்­கிய முன்­னணி (நுஆ) யும் ரணிலை ஆத­ரிக்­கி­ற­மைக்­கான காத்­தி­ர­மான பதி­லையும் தெரி­விக்­க­வில்லை. ஐக்­கிய தேசிய கூட்­ட­மைப்பு (முஸ்லிம் தேசிய கூட்­ட­மைப்பு), நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­ன­ணியும் ஐக்கிய சமாதான கூட்டமைப்பும் மௌனம் கலைக்க வேண்டும். இது­போக, சமூக நீதிக் கட்சி ஏன் ஒதுங்கிப் போகிறது என்பதும் புரியவில்லை.

ஜனா­தி­பதி வேட்­பாளர்கள் தமது கொள்கை பிர­க­ட­னத்தை வெளி­யி­ட முன்பே முஸ்லிம் கட்­சிகள் சில யாரை ஆத­ரிப்பது என்ற நிலைப்­பாட்­டிற்கு வந்­தி­ருக்­கி­றது. அவர்­களின் செயற்­திட்டம் என்­ன­வென்று அறி­யாமல் எந்த நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் குறித்த ஜனா­தி­பதி வேட்­பா­ளரை ஆத­ரிக்­கி­றார்கள் என்­பது வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும். அத்­துடன், முஸ்லிம் சமூ­கத்தை முன்­வைத்து மேற்­கொள்­ளப்­படும் ஒப்­பந்தம் வெளிப்படைத்தன்மையுடையதாக அமைய வேண்டும்.

முஸ்லிம் கட்­சிகள் தேர்தல் காலங்­களில் முன்­னு­தா­ர­ண­மற்ற அர­சியல் கலா­சா­ரத்­தையே நாட்­டுக்கு காட்டி நிற்­கி­ன்றன. இங்கு கட்­சி­க­ளுக்குள் இருக்கும் பிரச்­சி­னை­க­ளையும் கட்­சி­க­ளுக்­கி­டை­யே­யான பிரச்­சி­னை­க­ளையும் வைத்து, அர­சி­யல்­வா­திகள் முஸ்லிம் சமூத்தை கூறு­போட முற்­ப­டு­வ­தையே அவ­தா­னிக்க முடி­கி­றது.

மு.கா. தலை­வரும் அ.இ.ம.கா. தலை­வரும் மேடை­களில் தற்­போது கைகளை கோர்த்­துக்­கொண்டு நிற்­பதை பார்க்­கிறோம். இது நாக­ரி­க­மா­ன­தொன்­றாக கரு­து­கிறோம். எனினும், அடுத்து வர­வி­ருக்கும் பாரா­ளு­மன்றத் தேர்­தலில் இதை காண­மு­டி­யுமா என்­பது கேள்­விக்­கு­றிதான்.

அத்­தோடு, ஜனா­தி­பதித் தேர்தல் குறித்து முஸ்லிம் கட்­சி­களின் நிலைப்­பா­டு­க­ளையும் கட்­சி­க­ளுக்குள் இருக்­கின்ற முரண்­பா­டு­க­ளையும் பார்க்­கு­மி­டத்து இக்கட்சிகள் எந்த திசையையும் நோக்கி நகர முடியாது முட்டுச் சந்திக்குள் முடங்கிக் கிடப்பதாகவே தெரிகிறது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.