பிறப்புச் சான்றிதழுடன் வந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி- இஸ்ரேலிய தாக்குதலில் தாயும் இரட்டை குழந்தைகளும் பலி
எம்.ஐ.அப்துல் நஸார்
முகம்மது அபூ அல் கும்சான் எதையும் நம்ப முடியாமல் நடுங்கிய நிலையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். மத்திய காஸாவில் அமைந்துள்ள அல் அக்ஸா ஷுஹதாக்கள் வைத்தியசாலையின் முற்றத்தில் கண்கள் கலங்கி மயங்கிச் சரிந்தார்.
‘நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கின்றேன்’, நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்கின்றேன், நான் அவர்களைப் பார்க்க வேண்டும்’ என அவர் கடந்த செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை அதிகாரிகளிடம் அழுது கொண்டிருந்தார்.
‘எனது மனைவி இப்போதுதான் இரட்டைப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். தயவுசெய்து என்னை அவளைப் பார்க்க அனுமதியுங்கள்’.
சில மணித்தியாலங்களுக்கு முன்னர், பலஸ்தீனத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர், டெய்ர் அல்-பலாஹ்வில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தனது மூன்று நாட்களே ஆன இரட்டையர்களான அய்சல் மற்றும் அசர், (ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்) ஆகிய குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்காகச் சென்றார். ஆனால் அவர் வெளியே சென்றிருந்தபோது, இஸ்ரேலினால் அவரது வீடு தாக்கப்பட்டதாகவும் 28 வயதான அவரது மனைவி ஜுமானாவுடன் இரண்டு குழந்தைகளும் கொல்லப்பட்டதாகவும் தனக்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சீ.என்.என் இல் பணிபுரியும் ஒரு சுதந்திர ஊடகவியலாளரினால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காட்சிகள் அல் அக்ஸா வைத்தியசாலையில் அல் கும்சானைச் சுற்றி டசின் கணக்கானவர்கள் சூழ்ந்து கவலையினைப் பகிர்ந்து கொள்வதையும், அவரை ஆறுதல்படுத்துவதற்காக அங்கு நின்றிருந்த ஆண்கள் முயற்சி செய்வதையும், அவரது நெற்றியில் மெதுவாகத் தடவுவதையும் காட்டுகின்றது.
மற்றொரு காட்சியில், அல் கும்சான், ஜனாஸாத் தொழுகைக்காக வரிசையில் நிற்பதற்கு முன், இறந்தவரின் மூடிய உடல்களுக்கு அருகில் மண்டியிட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. இப்பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் அவரது மனைவி, மற்றும் இரட்டைக் குழந்தைகளுடன் மருந்தாளர் ஒருவர் மற்றும் ஒன்பது மாத குழந்தை உட்பட குறைந்தது 23 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
‘அல்லாஹ் உங்களை சுவர்க்கத்தில் ஒன்றிணைக்கட்டும்’ எனவும் ‘நீங்கள் அவர்களுடன் சுவர்க்கத்தில் மீண்டும் ஒன்றிணைவீர்கள், அவர்களுடன் என்றென்றும் இருப்பீர்கள் எனவும் இமாம் ஒருவர் குறிப்பிட்டார்.
காஸா மீதான இஸ்ரேலின் இடைவிடாத குண்டுத் தாக்குதல்களிலிருந்து கர்ப்பமாக இருந்த தனது மனைவியைப் பாதுகாக்கும் தீவிர முயற்சியில், தனது குடும்பத்தை டெய்ர் அல்-பலாஹில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் பெயர்ந்ததாக அல் கும்சன் சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்தார். இதன்போது குறைந்தது 115 குழந்தைகள் பிறந்து கொல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, ஜுமானா தனது இரட்டைக் குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையில் பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டிருந்தார். அதனை ‘அதிசயம்’ என விவரித்திருந்தார். கடந்த கோடை காலத்தில், இஸ்ரேல்– ஹமாஸ் போர் ஆரம்பமாவதற்கு முன், இத் தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.
‘எப்போதும் ஒன்றாக,’ எனக் குறிப்பிட்டு ஜூலை 2023 இல் அவர்களின் திருமணத்தை அறிவிக்கும் முந்தைய சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
காஸாவை ஆட்சி செய்யும் போராளிக் குழுவான ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியதைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை ஒக்டோபர் 7 ஆந் திகதியன்று ஆரம்பித்தது. இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அன்று குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டுள்ளனர்.
அதன் பின்னர், காஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக 16,400 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 40,000 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், – 92,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மீதான
‘இடைவிடாத’ போர்
ஏராளமான குடும்பங்களை முழுமையாக கொன்று குவித்த, மனிதாபிமான நெருக்கடியை தீவிரமாக்கி, நகரங்களை தரிசு நிலங்களாக மாற்றிய 10 மாத இஸ்ரேலிய தாக்குதலின் பின்னணியில் தங்கள் அன்புக்குரியவர்களை துக்கம் விசாரிக்கக் கூட நேரமில்லாது உயிர் பிழைத்திருக்கும் இலட்சக்கணக்கானவர்களில் அல் கும்சானும் ஒருவராவார்.
பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகவரகமான UNRWA வின் கூற்றுப்படி குறைந்தது 1.9 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பஞ்சம் மற்றும் நோய் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால், இஸ்ரேலின் உதவிக் கட்டுப்பாடுகள் காரணமாக, போரினால் பாதிக்கப்பட்ட காஸா மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாதுள்ளது என்று நிவாரணப் பணியாளர்கள் கூறுகின்றனர். இதனிடையே, இஸ்ரேலிய தாக்குதல்களால் அழிக்கப்பட்ட வைத்தியசாலை கட்டமைப்பில் காயமடைந்த பலஸ்தீனர்களுக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை என சுகாதார அதிகாரிகள் CNN இடம் தெரிவித்தனர். 885 க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் கஸாவிலுள்ள 36 வைத்தியசாலைகளில் அரைவாசிக்கும் குறைவானவை பகுதியளவில் செயல்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நாவின் சிறுவர்களுக்கான முகவரகமான UNICEF காஸாவில் ‘இடைவிடாத’ போர்’ ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தொடர்ந்தும் அச்சத்தை ஏற்படுத்துகிறது’ என எச்சரித்துள்ளது, காஸாவில் குறைந்தது 17,000 அனாதரவான அல்லது பிரிக்கப்பட்ட சிறுவர்கள் காணப்படுவதாகவும் முகவரகம் தெரிவித்துள்ளது.- Vidivelli