பலஸ்தீன் மீதான இலங்கையரின் தூய அன்பை வாழ்நாளில் மறக்கமாட்டேன்
இடமாற்றம் பெற்றுச் செல்லும் பலஸ்தீன தூதுவர் கண்ணீர் மல்க தெரிவிப்பு
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இலங்கையில் வாழும் சகல இன மக்களும் பலஸ்தீன மக்கள் மீது காட்டிய அன்பையும் ஆதரவையும் வாழ்நாளில் ஒருபோதும் மறக்க மாட்டேன் என இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா ஸைத் தெரிவித்தார்.
இலங்கையில் சுமார் பத்து வருட காலமாக கடமையாற்றி தற்போது பாகிஸ்தானுக்கான பலஸ்தீன தூதுவராகச் செல்லும் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா ஸைத் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கடந்த திங்கட் கிழமை கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பலஸ்தீனப் போராட்டத்திற்கு இலங்கை மக்கள் வரலாறு நெடுகிலும் தமது ஆதரவை வழங்கி வந்துள்ளனர். தற்போது காஸா மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள அநீதிகளுக்கு எதிராக இலங்கை மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி தமது கண்டனத்தைப் பதிவு செய்ததுடன் பலஸ்தீன மக்கள் மீதான தமது அளவு கடந்த அன்பையும் இன மத பேதமின்றி வெளிப்படுத்தினர்.குறிப்பாக காஸா சிறுவர்களுக்கான இலங்கை மக்கள் பாரிய நிதிப்பங்களிப்பையும் அண்மையில் வழங்கினர்.
இந்த அழகிய இலங்கைத் தீவில் நான் சுமார் 10 வருட காலமாக வாழ்ந்துள்ளேன். இந்த நாட்டையும் இலங்கை மக்களையும் விட்டுப் பிரிவது மிகவும் கவலையாகவுள்ளது. நீங்கள் என் மீதும் எனது நாட்டு மக்கள் மீதும் வைத்துள்ள அன்பையும் ஆதரவையும் ஒருபோதும் மறக்கமாட்டேன். பலஸ்தீன மக்களுக்கான உங்கள் ஆதரவு என்றென்றும் தொடர வேண்டும்’’ என்றும் தூதுவர் கண்ணீர் மல்க உரையாற்றினார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நாட்டிலுள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள், பலஸ்தீன ஆதரவு செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழுவின் தலைவருமான பிமல் ரத்நாயக்க, உலகளாவிய நீதிக்கான இலங்கை ஊடகவியலாளர்கள் அமைப்பின் சிரேஷ்ட பிரதித் தலைவர் மஹிந்த ஹத்தக ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.
பலஸ்தீன ஒருமைப்பாட்டுக்கான இலங்கைக் குழுவின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், இலங்கைக்கான பலஸ்தீன பிரதித் தூதுவர் ஹிஷாம் அபூ தாஹா, ஈரானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், பாகிஸ்தானுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீத், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதன்போது பலஸ்தீன ஒருமைப் பாட்டுக்கான இலங்கைக் குழு, பேருவளை அப்ரார் பவுண்டேஷன், களுத்துறை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் தூதுவருக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.- Vidivelli