துப்பாக்கிகளுடன் கைதான மௌலவி விவகாரம் பின்னணியில் ஆயுத விற்பனை என்று சந்தேகம்
தீவிரமாக விசாரித்து வருகின்றது சி.ரி.ஐ.டி.; பயங்கரவாதம் தொடர்பில் இதுவரை சான்றுகள் இல்லை
(எப்.அய்னா)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலடி சந்தியில் வைத்து ரீ 56 ரக துப்பாக்கிகள், தோட்டாக்கள், மெகஸின் உள்ளிட்ட ஆயுதங்களுடன் 43 வயதான மெளலவி ஒருவர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் ஆயுத விற்பனை சம்பவம் ஒன்று இருப்பது தொடர்பில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.
சி.ரி.ஐ.டி. எனப்படும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்புகள் குறித்து இதுவரை தெளிவான சான்றுகள் எவையும் இல்லை என பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
எனினும் கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் பிறிதொருவருக்கு விற்பனை செய்ய தயாராக இருந்துள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவ்வாறெனில் அது யாருக்கு என்ன நோக்கத்துக்காக விற்பனை செய்யப்படவிருந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகவும், அவ்விசாரணைகளின் நிறைவிலேயே உறுதியான நிலைப்பாட்டுக்கு வர முடியும் எனவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். இதனை விட குறித்த மீட்கப்பட்ட துப்பாக்கிகள் ஏதேனும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அரலகங்வில பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் குழு கடந்த ஜூலை 30 ஆம் திகதி இந்த மெளலவியை கைது செய்ததாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் சட்டப் பிரிவின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர விடிவெள்ளியிடம் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் இந்த சம்பவத்தின் பின்னணி, நோக்கம் உள்ளிட்டவற்றை கண்டறிய, சந்தேக நபரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு (சி.ரி.ஐ.டி.) பொறுப்பேற்று விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் ருவன் குணசேகர மேலும் குறிப்பிட்டிருந்த்தார்.
கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் நாவலடி சந்தியில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மெளலவியை கைது செய்துள்ளனர்.
இதன்போது அவரிடமிருந்து ரீ 56 ரக துப்பாக்கி ஒன்றினையும் 29 தோட்டாக்களையும் ஒரு மெகசினையும் அதிரடிப் படையினர் கைப்பற்றினர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, அப்பகுதியில் அமைந்துள்ள மெளலவியின் சகோதரரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மற்றொரு ரீ 56 ரக துப்பாக்கி, 30 தோட்டாக்கள், மெகசின் மற்றும் வாள் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து மெளலவியின் வீட்டுக்கு சென்ற அதிரடிப் படையினர் அங்கிருந்து, துப்பாக்கிகளை மறைத்து வைக்க பயன்படுத்தும் இரு பிளாஸ்டிக் பைகள் மற்றும் தொலைக் காட்டியை கைப்பற்றினர். இதனைவிட துப்பாக்கிகளை கொண்டு செல்ல பயன்படுத்தியதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள், மேலும் இரு வாகன இலக்கத்தகடுகள் இரண்டையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
இந்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் நோக்கத்தை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், மெளலவியின் சகோதரனை கைது செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தி மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.- Vidivelli