‘ரிஷாதின் நிதியை இரத்துச்செய்து முஷாரப்புக்கு புதிதாக நிதி ஒதுக்கீடு’ நியாயம் என்னவென சபையில் சஜித் கேள்வி
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ரிஷாத் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை இரத்துச்செய்துள்ள நிலையில் ஆளும் தரப்பு உறுப்பினர் முஷாரப் எம்.பிக்கு புதிதாக 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பது தவறான நடவடிக்கையாகும். தேர்தல் காலத்தில் இவ்வாறு செயற்படுவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தேர்தல் ஒன்று இடம்பெற இருக்கும் சமயத்தில் அரச நிதி பயன்படுத்திக்கொண்டு தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது சட்டவிராேதமான குற்றச்செயலாகும். பாராளுமன்ற உறுப்பினர ரிஷாத் பதியுதீனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதி, அவர் எதிர்க்கட்சியில் எங்களுடன் இணைந்து செயற்பட தீர்மானம் எடுத்த காரணத்தினால் குறித்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியை இல்லாமல் செய்திருக்கிறது.
அதேநேரம் அரச தரப்புக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள பாராளுமன்ற முஷாரப்புக்கு புதிதாக 300 மில்லியன் ரூபா அபிவிருத்திக்கு என ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த பணத்தை இவர்கள் தேர்தலுக்காகவே பயன்படுத்த இருக்கின்றனர்.அரச அதிகாரிகள் இந்த தவறை செய்ய வேண்டாம்.
இந்த நடவடிக்கை முற்றாக சட்டவிரோதமாகும். அதனால் இந்த சட்டவிராேத நடவடிக்கையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொள்கிறோம்.– Vidivelli