வழக்கம் போல இலங்கையின் முஸ்லிம் அரசியல் கேலிக்கூத்தானதாகவே மாறியுள்ளது. பிற சமூகத்தவர்கள் சிரிக்குமளவுக்கு முஸ்லிம் அரசியலில் கட்சி தாவல்களும் வாக்குறுதி மீறல்களும் மலிந்துள்ளன. கடந்த கால கசப்பான அனுபவங்களிலிருந்து எந்தவொரு கட்சியும் எந்தவொரு அரசியல்வாதியும் பாடம்படித்ததாக தெரியவில்லை.
குறிப்பாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தாம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட கட்சியை விடுத்து வேறொரு கட்சிக்கு ஆதரவு வழங்குவதை தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களத்தில் காண முடிகின்றது. குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு தன்னை ஆதரிப்பவர்களுக்கு அதிகளவு சலுகைகளை ஜனாதிபதி வழங்கி வருகிறார். அபிவிருத்திப் பணிகளுக்கென பல மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளார். நேற்றைய தினம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் அரசியல்வாதிகள் சந்தர்ப்பவாதிகள். சலுகைகளுக்கு விலை போகக் கூடியவர்கள். இவர்களை நம்ப முடியாது என பெரும்பான்மை அரசியல் தலைவர்கள் அடிக்கடி கூறிவருகின்றனர். அந்தக் கூற்றுக்கள் மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளன.
அரசியல்வாதிகளுக்கு தாம் விரும்புபவர்களை ஆதரிப்பதற்கான உரிமை உள்ளபோதிலும் தம்மை பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்து அனுப்பிய கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்படுவது அரசியல் நாகரிகமல்ல. இவ்வாறு மீறிச் செயற்பட்டமைக்காக நஸீர் அகமதின் எம்.பி. பதவியை நீதிமன்றம் செல்லுபடியற்றதாக்கியதை நாம் அறிவோம்.
இவ்வாறான முஸ்லிம் எம்.பி.க்கள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரளவிடமிருந்து பாடம் படிக்க வேண்டும். நேற்றைய தினம் சபையில் உரையாற்றிய அவர் தனது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதாக அறிவித்தார். தனது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் செயற்பாடுகளில் உடன்பாடில்லை என்பதால் அவரது கட்சிக்குரிய எம்.பி.பதவியை தான் வகிக்க முடியாது எனவும் அவர் மிக்க நேர்மையுடன் குறிப்பிட்டார். இதுதான் மிகச் சிறந்த அரசியல் முன்மாதிரியாகும். எனினும் இதுவரை எந்தவொரு முஸ்லிம் எம்.பி.யும் இவ்வாறு தனது பதவியை இராஜினாமாச் செய்துவிட்டு மறு தரப்புக்கு ஆதரவளித்ததாக தெரியவில்லை.
மறுபுறம் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தாம் யாரை ஆதரிப்பது என்பதை அறிவித்துள்ளனர். நிபந்தனைகளுடன் ஆதரிப்பதாக கூறுகின்ற போதிலும் அந்த நிபந்தனைகள் என்ன என்பதை இதுவரை பொது மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற சமகால நெருக்கடிகளுக்கு தீர்வைப் பெற்றுத் தருவதற்கான எந்தவித நகர்வுகளையும் முஸ்லிம் தலைமைகளிடமிருந்து எதிர்பார்க்க முடியவில்லை. மாறாக தமிழரசுக் கட்சியானது பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் கொள்கைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பின்னரே தமது நிலைப்பாட்டை வெளியிட முடியும் என அறிவித்துள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பேரம் பேசுவதற்கான சிறந்த தருணமாக இந்த ஜனாதிபதித் தேர்தலை தாம் பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. எனினும் முஸ்லிம் கட்சிகளிடம் இவ்வாறான எந்தவொரு உறுதியான கொள்கை நிலைப்பாடுகளையும் காண முடியவில்லை என்பது துரதிஷ்டமானதாகும்.
இவ்வாறான நேர்மையற்ற அரசியல் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள முஸ்லிம் இளம் சமுதாயம் இன்று மாற்று அரசியல் சக்திகளை நாடத் தொடங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. இனத்தின் பெயராலும் சமயத்தின் பெயராலும் முன்னெடுக்கப்படும் இந்த அரசியல் வெறும் ஏமாற்று அரசியலே என்பதை அவர்கள் மிகத் தெளிவாக உணரத் தொடங்கியுள்ளனர். அதனால் இம்முறை தாம் மாற்று அரசியல் சக்திகளுக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக பகிரங்கமாகவே கூறிவருகின்றனர். இந்த யதார்த்தத்தை முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமக்குள் நேர்மறையான மாற்றங்களை இக் கட்சிகள் உள்வாங்காதவிடத்து எதிர்காலத்தில் முஸ்லிம் கட்சிகள் காணாமல் போவது மட்டும் நிச்சயம்.- Vidivelli