றிப்தி அலி
இலங்கைக்கும் அரபுலகிற்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்புக்கான வலுவான ஆதாரமாக திகழும் குதிரை மலை சியாரம் இன்று கவனிப்பாரற்று காணப்படுகின்றது.
இது போன்ற பல சியாரங்களை பராமரிக்கத் தவறிய முஸ்லிம் சமூகம், தனது வரலாற்று தொல்லியல் அடையாளங்களை காப்பாற்ற மறந்து நிற்கின்றதா என்ற கேள்வியும் எழுகிறது.
மன்னாருக்கும் புத்தளத்துக்கும் இடையிலுள்ள வட மேற்கு கரையில் வில்பத்து தேசிய பூங்காவிற்கு அருகிலேயே இந்த குதிரை மலை அமைந்துள்ளது. அதாவது, வில்பத்து காட்டினை ஊடறுத்துச் செல்லும் புத்தளம் –- மன்னார் வீதியின் மேற்குப் பக்கத்திலேயே இந்த மலை காணப்படுகின்றது.
இலங்கையின் வட மேல் கடற் பகுதியிலிருந்து பார்க்கும் போது தென்படக்கூடிய ஒரேயொரு மலை குதிரை மலை தான் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
குதிரை மலை குடாவை அண்மித்ததாக முத்துப்பார்கள் இருந்ததாகவும் தொன்மைக் காலம் முதல் இங்கு அரபு மற்றும் பாரசீக வணிகர்கள் குதிரை மற்றும் முத்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்த இயற்கைத் துறைமுகத்தை அவர்கள் “ஜபலுல் பர்ஸ்” (குதிரை மலை) என்று அழைத்துள்ளதாக அரபு இஸ்லாமியத் துறையின் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்றிய கே.எம்.எச்.காலீதின் தனது “இலங்கை முஸ்லிம்களின் வரலாறு (1986)” எனும் நூலில் குறிப்பிடுள்ளார்.
இதேவேளை, உரோம வரலாற்றாசிரியரான பிளினி, குதிரை மலையை ஹிப்பரஸ் என அழைத்ததாகவும் இதுவொரு கிரேக்க மொழிச் சொல்லாகும் என வரலாற்றாய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரிய அளவில் குதிரை வர்த்தகம் இங்கு நடைபெற்றதாலும் கடலில் இருந்து பார்க்கும்போது இந்த மலை படுத்திருக்கும் குதிரை போல் தோற்றமளித்ததாலும் இதற்கு குதிரை மலை எனப் பெயர் வழங்கப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கப்பல்கள் திசையினை அறிந்துகொள்வதற்காக அரேபியர்களினால் இந்த மலையில் அமைக்கப்பட்டிருந்த கரை விளக்குகள், மினாராக்கள் என அழைப்பட்டாதாக ஓய்வுபெற்ற பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தனது “புத்தளம் முஸ்லிம்கள்: வரலாறும் வாழ்வியலும் (2009)” எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக “இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாறு” எனும் தலைப்பில் விடிவெள்ளி பத்திரிகையில் ஓய்வுபெற்ற பேராசிரியர் அனஸ் தொடர்ச்சியாக எழுதி வந்த பத்தியில் இந்த குதிரை மலை தொடர்பில் விரிவாக எழுதியுள்ளார்.
இலங்கையின் முதலாவது சிவில் சேவை அதிகாரியான கற்பிட்டியினைச் சேர்ந்த சைமன் காசிச்செட்டி 1834ஆம் ஆண்டு வெளியிட்ட நூலில் குதிரை மலைக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த மலை தற்போது கடலரிப்புக்கு உள்ளாகி அதன் தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையினை கடந்த வாரம் நாம் மேற்கொண்ட கள விஜயத்தின் போது நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இப்பிரதேசம் மலை என்று கூறப்பட்டாலும் பொதுவாக நாம் காணும் மலைக்குரிய அடையாளங்கள் எதனையும் இங்கு காண முடியவில்லை. குதிரை மலை முழுக்க செம்பு நிற மண் காணப்படுகின்றது. விஜய மன்னனினால் இலங்கையில் முதலாவதாக உருவாக்கப்பட்ட இராச்சியமான தம்பபண்ணி என்ற சொல்லின் தமிழ் மொழிபெயர்ப்பு செம்பு நிற மண்ணாகும்.
இப்புவியியல் பிரதேசத்துக்கு மாத்திரமே சொந்தமான சில குட்டையான மரங்களையும் இங்கு காண முடிந்தது. இந்த மலையிலிருந்து 60–70 அடி பள்ளத்திலேயே கடற்கரை காணப்படுகின்றது. இக் கடற்கரையோரத்தில் பெரிய இஸ்லாமிய அரபுக் குடியிருப்புக்களைக் கடலோடியான அனியஸ் லொக்கமஸ் கண்டதாக வரலாற்றாசிரியரான பிளினி கூறியுள்ளார்.
குதிரை மலையில் இஸ்லாமிய ஞானப் பெரியார்கள் அடக்கம் பெற்ற மகிமைக்குரிய சியாரங்கள் இருந்துள்ளன. இதனால், குறித்த மலை ஒரு புனிதத் தலமாக மதிக்கப்பட்டு அங்கு தரிசித்து வருவது வழக்கமாக இருந்தது என ஏ.என்.எம். ஷாஜஹானினால் எழுதப்பட்ட “புத்தளம் வரலாறும் மரபுகளும் (1992)” எனும் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இக்கடற்கரையில் இன்று எஞ்சியுள்ளது ஒரேயொரு சியாரமாகும். முறையாக பராமரிக்கப்படாமையினால் இந்த சியாரம் சேதமாக்கப்பட்டுள்ளதை எமது கள விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது.
இந்த மலைப் பிரதேசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நல்லடியாரின் பெயரை இதுவரை நிச்சயிக்க முடியவில்லை. எனினும், சுந்தர வாவாப்பிள்ளை ஒலி தர்ஹா அல்லது குதிரை மலை சாஹிபு என பண்டைய காலத்து புலவர்களினால் இந்த சியாரம் அழைக்கப்பட்டதாக புத்தளத்தினைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும், ஆய்வாளருமான இஸட் ஏ. ஸன்ஹிர் தெரிவித்தார். எழுத்தாளர் ஷாஜஹானின் மருமகனான இவர், குதிரை மலைக்கான எமது கள விஜயத்திலும் பங்கேற்றிருந்தார்.
கரைத்தீவினைச் சேர்ந்த வரகவி செய்கு அலாவுதீன் புலவர் மற்றும் குறிஞ்சிப்பிட்டியில் வாழ்ந்த புலவர் அசனா மரைக்கார் செய்கு இஸ்மாயில் போன்ற பல புலவர்கள் இந்த மலையினையும் அங்குள்ள சியாரத்தினையும் புகழ்ந்து கவி பாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குதிரை மலைப் பகுதியால் பயணிக்கும் கப்பல்கள் யாவும் அத்துறைமுகத்தில் கட்டாயம் தங்கி அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இறை நேசச் செல்வரின் பேரில் “பாற் கிச்சடி” எனும் பாங்கான உணவைத் தயாரித்து, பிரார்த்தனைகளின் பின்பு அதைப் பகிர்ந்தளித்துச் செல்வது வழக்கமாக இருந்துள்ளது என ஷாஜஹானின் புத்தளம் வரலாறும் மரபுகளும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமது கடற் பிரயாணத்தில் தடங்கல்கள் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்புடன் போய்வர ஆசிர்வாதத்தைப் பெறலாம் என்ற நம்பிக்கை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயிரம் வருடங்கள் வாழ்கின்ற ஒரு மக்கள் கூட்டத்திற்கு சொல்லிக் கொள்ள ஒரு மலை, ஒரு ஆறு, ஒரு அருவி, ஒரு கடல், ஒரு குளம், ஒரு குகை, ஒரு பள்ளத்தாக்கு இல்லாமலா போய்விடும். அதன் அடிப்படையிலேயே அரபு – முஸ்லிம் பாரம்பரியத்தின் இலட்சியமாகவும் இலக்காகவும் இன்றும் நிலவும் ஒரு தொன்மைச்சான்றே குதிரை மலையாகும் என ஓய்வுபெற்ற பேராசிரியர் அனஸ் கூறுகின்றார்.
எனினும், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க தொன்மைச்சான்றை பாதுகாக்க இலங்கை முஸ்லிம் சமூகம் தவறிவிட்டது என்பது மிகவும் கவலையளிக்கின்றது.
குதிரை மலையில் அடக்கம் செய்யப்பட்டிருப்பவர் ஒரு முஸ்லிம் என்ற விடயம் எமது நாட்டில் வாழ்கின்ற ஏனைய சமூகத்தவர்களுக்கு தெரிந்துள்ளது. இதனை எமது கள விஜயத்தின் போது நேரடியாக உணர முடிந்தது. இந்த மலையினைப் பார்வையிட வந்திருந்த ஏனைய சமயத்தவர்கள், இந்த சியாரம் தொடர்பில் எம்மிடம் கேட்டறிந்து கொண்டனர்.
எனினும், இது தொடர்பில் போதிய தகவல்களை எம்மால் வழங்க முடியாமல் போனமை மிகவும் வருத்தமளிக்கின்றது. இலங்கையிலுள்ள சியாரங்களை பாதுகாத்து பாரமரிக்கும் பொறுப்பு வக்பு சபையிடம் காணப்படுகின்றது.
இதற்காக உருவாக்கப்பட்ட வக்பு நிதியத்தில் பல கோடி ரூபாய் பணம் உள்ளது. எனினும், இந்த சியாரம் தொடர்பான எந்தவொரு தகவலும் வக்பு சபையில் இல்லை என்ற தகவல் எமது தேடலின்போது தெரியவந்தது.
கொள்கை மற்றும் இயக்க வேறுபாடுகளை மறந்து குதிரை மலையிலுள்ள சியாரத்தினை பாதுகாத்து பராமரிக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும். இதன் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் வலுவான வரலாற்றினை பாதுகாக்க முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்துமில்லை.- Vidivelli