‘இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் நினைவாக ஏற்பாடு செய்திருந்த புலமைப்பரிசில் வழங்குதல் மற்றும் ஓய்வு பெறுபவர்களை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் கொழும்பு -10, டி.ஆர் விஜேவர்தன மாவத்தையிலுள்ள தபாலகக் கட்டிட கேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் ஆற்றிய உரையின் தொகுப்பு’
‘எனக்கு முன்பு இங்கு பேசிய பேராசிரியர் ஜலால்தீன், ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தைப் பற்றி உரையாற்றியதை நான் இங்கு முதலில் குறிப்பிட விரும்புகின்றேன். பிரித்தானியரின் ஏகாதிபத்தியத்திற்கு இந்நாடு உள்ளாகி இருந்த போது, அன்றைய இலங்கை வாழ் மௌலவிமார்கள் ஆங்கிலக்கல்வியை முஸ்லிம்கள் கற்பதில் அச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். அன்றைய எதிர்ப்புகள் காரணமாக ஆங்கிலக்கல்வியில் முஸ்லிம்கள் பின்னடைந்ததாக குறைபட்டார். அது உண்மைதான். ஆனால் அக்காலத்தில் அவர்கள் ஆங்கிலக்கல்வி பற்றி அச்சமடைந்ததற்கு அன்று நியாயம் இருந்தது. ஆங்கிலக் கல்வியென்பது எமது கலாசாரத்தை தாக்கக்கூடியதொன்று என்ற நியாயமான அச்சம் அவர்கள் மத்தியில் காணப்பட்டது. அதனை அடிப்படையாக வைத்தே அவர்களது செயற்பாடுகளும் அமைந்தன. பின்னைய நிகழ்வுகள் அவை அச்சம் கொண்டளவுக்கு ஏற்படவில்லை என்பதே உண்மை என்பதற்கு அவர்களின் எச்சரிக்கைகளும் காரணமாக அமைந்தன என்பது நாங்கள் கண்ட அனுபவமாகும்.
நான் சட்டக்கல்லூரிக்கு செல்ல முன்னர் ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் முழுமையாக ஆங்கில மொழி மூலம் எனது இரண்டாம் நிலை கல்வியைத் தொடர்ந்தேன். கிறிஸ்தவக் கல்லூரியில் ஆங்கிலக் கல்வியைக் கற்றாலும் எனது சமூக, சமய விடயங்களில் இருந்து பிரிந்து செயற்படாதவனாகவே அன்றும் இன்றும் இருக்கின்றேன்.
என்றாலும் பேராசிரியர் மௌலவி ஜலால்தீன் கூறுவது போல், ஆங்கிலக் கல்வி முக்கியமானது. அதனைக் கற்றால் முழு உலகத்துடனும் தொடர்பை எம்மால் இலகுவில் ஏற்படுத்திக் கொள்ள முடியும். இங்கு கொழும்பு மாவட்டத்தின் பின்தங்கிய கல்வி நிலை பற்றியும் பேசப்பட்டது. எமது முஸ்லிம் சமூகத்தின் கல்வி நிலைமை பின்தங்கியதாகவே காணப்படுகின்றது. கொழும்புப் பாடசாலைகளுக்கு புதிதாக நியமனங்களைப் பெற்று கற்பிக்கவரும் ஆசிரியர்களில் குறிப்பிடத்தக்களவிலானோர் இடைநடுவில் சட்டக்கல்லூரிக்கும் வேறு மேற்படிப்பு நிலையங்களுக்கும் செல்லக் கூடியவர்களாக உள்ளனர். அதனால் அவர்கள் நியமனம் பெற்ற பாடசாலைகளின் மாணவர்களது நிலை மிகவும் கவலைக்கிடமானதாக உள்ளது. இது நான் நேரடியாகக் கண்டதொரு விடயம். நான் இங்கு யாரையும் குறைகூறவில்லை. தமது பொறுப்புகளைச் சரிவரச் செய்யாது உதாசீனப்படுத்திவிட்டு தமது முன்னேற்றத்தில் மாத்திரம் கரிசனை காட்டுவது முறையானதல்ல.
இப்பரிசளிப்பு விழாவின் போது ஏனைய மாவட்டங்களை விடவும் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களே கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கூடுதலான பரிசில்களைத் தட்டிச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது. இது வரவேற்கத்தக்க விடயம். இங்கு கொழும்பு மாவட்டத்தை மாத்திரம் சிறப்பித்துக் கூறுவது எனது நோக்கமல்ல. சில அசௌகரியங்களுக்கு மத்தியிலும் இப்பெறுபேறுகளை பெற்றுக் கொடுப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகவும் இருக்கிறது.
இன்று நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் எமது சமூகத்திற்கான ஒரு சக்திவாய்ந்த முகவரியை பெற்றுக்கொடுப்பதாகும். மறைந்த எம்.எச்.எம் அஷ்ரஃப் 1971 இல் சீ.ஐ.டியால் கைதுசெய்யப்பட்டார். இற்றைக்கு 53 வருடங்களுக்கு முன்னர் இந்திய, பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் பாகிஸ்தான் தோல்வியுற்று 125 ஆயிரம் பாகிஸ்தானிய இராணுவ வீரர்கள் இந்தியாவில் சரணடைந்திருந்தனர். அப்போது நான் உட்பட சட்டக்கல்லூரி மாணவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக சேவையாளர்கள் பலர் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டமொன்றை கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மைதானத்தில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்தோம். இக் கூட்டம் முஸ்லிம் ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பொதுச்செயலாளராக மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரஃப் இருந்தார். இந்த 125 ஆயிரம் இராணுவ வீரர்களை விடுவித்து யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்பதே எமது கூட்டத்தின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் இலங்கை அரசாங்கம் அவசரகால சட்டத்தின் கீழ் அக்கூட்டத்தை நடாத்த அனுமதி வழங்கவில்லை.
இருந்த போதிலும் நாம் அக்கூட்டத்தை கபூர் மண்டபத்திற்கு மாற்றி இந்த 125 ஆயிரம் பாகிஸ்தான் வீரர்களையும் யுத்தக்கைதிகளையும் இந்தியா உடனடியாக விடுவிக்க வேண்டுமென பகிரங்கமாக கோரிக்கை விடுத்தோம். அதன்பிறகு நாங்கள் 5 பேர் முதலில் கைது செய்யப்பட்டோம். ஆறாவதாக அஷ்ரஃப் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் சட்டக்கல்லூரி மாணவராக இருந்தார். இது 1971ல் நடைபெற்றது. அச்சமயம் நான் சட்டத்தரணியாகி இருந்த போதிலும் 1972ல் தான் சத்தியப்பிரமாணம் செய்தேன். அப்போது நான் முஸ்லிம் ஐக்கிய முன்னணியின் தலைவராக பதவி வகித்துக்கொண்டிருந்தேன்.
இச்சமயம் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் முழுப் பொறுப்பாளனாக நான் முன்னிற்பதாகவும் அவர்களை விடுவிக்கும்படியும் சி.ஐ.டி யிடம் வேண்டிக்கொண்டேன். அதற்கிணங்க அஷ்ரஃப் உட்பட ஐவரும் விடுவிக்கப்பட்டனர். நான் ஏன் இதை இங்கு கூறுகின்றேன் என்றால் 53 வருடங்களுக்கு முன்னரே, அதுவும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உருவாக முன்னரே கொழும்பில் மாபெரும் கூட்டத்தை ஏற்பாடு செய்யக்கூடியவராக மறைந்த தலைவர் அஷ்ரஃப் இருந்தார் என்பதை சுட்டிக்காட்டுவதற்காகும். அவர் செய்த பணிகள் எம்மால் மறக்க முடியாதவை. அதனால்தான் நாம் அவரை இன்றும் நினைவு கூர்கின்றோம்.
மறைந்த செனட்டர் எம்.இஸட்.எம் மசூர் மௌலானாவின் மகன் இனாம் மௌலானா தலைமை வகித்து இக்கூட்டத்தை நடாத்தி செல்கின்றார். அவர் இலங்கைத் துறைமுக அதிகாரசபையின் முஸ்லிம் மஜ்லிஸின் தலைவர் என்ற வகையில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்த மாணவர்களை உற்சாகப்படுத்தி கௌரவித்ததை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. உங்களது முஸ்லிம் மஜ்லிஸினால் நல்ல முக்கிய பணிகள் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. உங்களை உற்சாகப்படுத்துவது எமது கடமையாகும்.
நீங்கள் மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குகின்றீர்கள், இப்தார் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துகின்றீர்கள், ஜனாஸாக்களை அடக்கம் செய்ய உதவிகள் செய்கின்றீர்கள். இவ்வாறு மறைந்த எம்.எச்.எம் அஷ்ரஃப், சமூகத்தில் தேவையுடைய ஆயிரக்கணக்கான மக்களை இனம் கண்டு அவர்களுக்கு உதவக்கூடியவராக இருந்தார். அதை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். நாங்கள் முதலில் அல்லாஹ்விற்கு நன்றியுடையவர்களாக இருப்பதோடு அஷ்ரஃபுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளோம். அவரது உறுதியான நிலைப்பாடு இல்லாவிடின் இத்தகையதொரு இலக்கை எட்டியிருக்க மாட்டோம். அதிக எண்ணிக்கையான குடும்பங்கள் அவரால் அதிகம் பயனடைந்துள்ளனர்.
முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் அஷ்ரஃபுக்கு முன்னர் முஸ்லிம் சமூகத்தில் இருந்த பல தலைவர்கள் குறித்து பேராசிரியர் ஜலால்தீனும் சகோதரர் நகியாவும் இங்கு எடுத்துக்கூறினர். டொக்டர் ராசிக் பரீட், கலாநிதி டீ.பீ. ஜாயா, டொக்டர் எம்.சி.எம். கலீல், கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் ஆகியோரின் வரிசையில் மர்ஹூம் அஷ்ரஃப் வந்தாலும் நான் அவரை ஒரு தனித்துவம் மிக்க, மிகவும் பலம் வாய்ந்த முஸ்லிம் தலைவராகப் பார்க்கின்றேன்.
வடமாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள். இருந்தும் நாங்கள் தமிழர்களை எதிர்க்கவில்லை. அதிகாரப்பரவலுக்கு ஆதரவானவர்கள் நாம். நாட்டைப் பிரிப்பதை எதிர்ப்பவர்கள். இந்த நாடு இரண்டாக பிளவுபடுவதற்கு நாம் ஒருபோதும் இடமளியோம். நாட்டைப் பிளவுபடுத்த மர்ஹூம் அஷ்ரஃப் ஆதரவளிக்கவில்லை. அதனால் வடக்கில் இருந்து விரட்டப்பட்டோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் அதற்காக கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டார்கள். காத்தான்குடியில் ஒரே இரவில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இஷா தொழுகையின்போது சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இவை அழியா வடுக்கள்.
இன்று நாட்டில் மிகவும் படுமோசமான பொருளாதார நெருக்கடி காணப்படுகின்றது. நீதி நேர்மையற்ற ஆட்சியாளர்களால் தான் நாடு இந்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இருந்து நாடு மீட்சி பெற வேண்டும். அதற்காக அனைத்து மக்களும் பேதங்களுக்கு அப்பால் ஐக்கியப்பட வேண்டும்.
இந்த சூழலில் நாம் தமிழ் சமூகத்திற்கு கூறுவது யாதெனில் நாங்கள் உங்களுக்கு விரோதமானவர்கள் அல்லர். உங்களுடன் நாம் எப்பொழுதும் ஒன்றுபட்டு இருக்கின்றோம். ஆனால் நீங்கள் அரசியல் அதிகாரம் தமிழ் மக்களுக்கு மாத்திரம் தான் என்று கூறுகின்றீர்கள். இதுவே ஐயங்களுக்கு வித்திட வைக்கிறது. அதனால் ஒரே ஒரு மாற்றம் தான் நீங்கள் செய்ய வேண்டும். நாம் யாவரும் தமிழ் பேசும் சமூகத்தினர். தமிழ் பேசும் சமூகத்தினருக்கானது என மாற்றிக்கொண்டால் யாவரும் ஐயங்களுக்கு அப்பால் சமத்துவதுடன் வாழலாம்.– Vidivelli