ஐ.சுபைதர்
பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் பெற்றுள்ள சிறுபான்மைக்கட்சிகளுள் முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல தேசிய காங்கிரஸ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பதென இன்னும் தீர்மானத்திற்கு வரவில்லை. இது தொடர்பில் மக்கள் கருத்தறியும் கூட்டங்களை முஸ்லிம் பிரதேசங்களில் இக்கட்சி நடத்தி வருகின்றது.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் கடந்த 2020 பொதுத் தேர்தல் பெறுபேறுகளை வைத்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்குப்பலம் தொடர்பாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2020 பொதுத் தேர்தல் முடிவுகளின்படி அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கு 4 பாராளுமன்ற பிரதிநிதித்துவங்கள் கிடைத்தன. வன்னியில் அதன் தலைவர் றிசாத் பதியுதீன், அநுராதபுரத்தில் இஷாக் றஹ்மான், அம்பாறையில் எஸ்.எம்.எம்.முஸர்ரப், புத்தளத்தில் அலிசப்ரி றஹீம் ஆகியோர் அந்தப் பாராளுமன்றப் பிரதிநிதிகளாவர்.
2020 பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் மட்டும் தனித்துப் போட்டியிட்டு 43,319 வாக்குகளைப் பெற்றது. இதில் 18,389 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி.யாகத் தெரிவானார்.
வன்னி, அநுராதபுரம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து இக்கட்சி போட்டியிட்டது. வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 37,883 வாக்குகளைப் பெற்றது. இதில் 28,362 விருப்பு வாக்குகளைப் பெற்ற கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன் எம்.பி.யானார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் 49,298 விருப்பு வாக்குகளைப் பெற்ற இஷாக் றஹ்மான் எம்.பி. யானார். திருகோணமலை மாவட்டத்தில் இக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட அப்துல்லாஹ் மஹ்ரூப் 36,647 விருப்பு வாக்குகள் பெற்றார் எனினும் எம்.பியாகவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 28,362 வாக்குகளைப் பெற்றது. இங்கு கட்சியின் தவிசாளர் அமீர் அலி போட்டியிட்ட போதிலும் வெற்றி பெறவில்லை.
புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசும், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இணைந்து தேசிய முஸ்லிம் கூட்டணி என்ற கட்சியில் போட்டியிட்டு 55,981 வாக்குகளைப் பெற்றன. இதில் 33,509 விருப்பு வாக்குகள் பெற்ற அலிசப்ரி றஹீம் பாராளுமன்ற உறுப்பினரானார்.
தற்போது இக்கட்சியின் நிலைமை 2020ஐ விட வெகுவாக மாற்றமடைந்துள்ளது. இக்கட்சியின் 4 பாராளுமன்ற உறுப்பினர்களுள் தலைவர் றிசாத் பதியுதீனைத் தவிர ஏனைய மூவரும் இக்கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை.
தற்போது இக்கட்சிக்கு உறுதியான எண்ணிக்கையில் கூறக்கூடிய வாக்குகள் வன்னி மாவட்டத்தில் அதன் தலைவர் பெற்ற விருப்பு வாக்குகள் 28,362 மட்டுமே. இதிலும் கூடுதல் அல்லது குறைவுகள் இருக்கலாம்.
அம்பாறை மாவட்டத்தில் 18,389 விருப்பு வாக்குகள் பெற்ற எஸ்.எம்.எம்.முஸர்ரப் எம்.பி தற்போது கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. இந்நிலையில் இம்மாவட்டத்தில் கட்சியின் முன்னைய வாக்குத்தளத்தில் சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
அநுராதபுரம் மாவட்டத்தில் 49,298 விருப்பு வாக்குகளைப் பெற்ற இஷாக் றஹ்மான் எம்.பி. தற்போது கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. இவர் பெற்ற வாக்குகள் பெரும்பாலும் அவரது சொந்த வாக்குகள் என்ற கருத்து நிலவுகின்றது. இதன்படி இக்கட்சிக்கு அநுராதபுரம் மாவட்டத்தில் பலமான வாக்குகள் குறைவு என்றே கூறப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து போட்டியிட்டன. இந்த இணைவில் தான் அப்துல்லாஹ் மஹ்ரூப் 36,647 விருப்பு வாக்குகளைப் பெற்றார். இக்கட்சி தனித்து நிற்கும் போது இந்தளவு எண்ணிக்கையான வாக்குகள் கிடைக்கும் என்பதற்கான சாத்தியங்கள் இல்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி 28,362 வாக்குகளைப் பெற்றுள்ள போதிலும் இவை மொத்தமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்குகள் அல்ல. ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களின் வாக்குகளும் இதில் உள்ளன.
புத்தளம் மாவட்டத்தின் 55,981 வாக்குகளுள் முஸ்லிம் காங்கிரசின் வாக்குகளும் உள்ளன. இதில் 33,509 விருப்பு வாக்குகள் பெற்ற அலிசப்ரி றஹீம் எம்.பி தற்போது கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே இந்த மாவட்டத்திலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வாக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளமைக்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன.
எனவே, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மொத்த வாக்கு வங்கி தற்போதைய சூழ்நிலையில் ஒரு இலட்சத்திற்கும் குறைவாயிருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. நான்கு எம்.பி.க்களில் மூவரை இக்கட்சி இழந்துள்ளமை நிச்சயம் அதன் வாக்குப் பலத்தில் தாக்கம் செலுத்தும். தனி ஒருவராக இருக்கும் கட்சியின் தலைவர் இந்த ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிக்கப் போகிறார்? அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க என்ன வியூகங்களை வகுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.- Vidivelli