பல்வேறு காரணிகளால் தமது நாடுகளில் இருந்து வெளியேறிய பல சட்டவிரோத குடியேற்றவாசிகள் அபாயகரமான படகு பயணத்தை மேற்கொண்ட நிலையில் ஆங்கில கால்வாயில் வைத்து அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவ்வாறு செல்பவர்களில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும் போது பலர் உயிரிழக்கின்றனர்.
இந்த நிலையில், கிறிஸ்மஸ் தினத்தன்று அகதிகள் பலர், படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
ஆட்கடத்தல் கும்பல் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் பாதுகாப்பு அங்கி அணியாமல் சாதாரண படகில் பயணம் செய்துள்ளனர். இந்தநிலையில், ஒரு படகு பழுதடைந்ததால் அதில் பயணித்தவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்தனர்.
இதையடுத்து, கடலோர காவல்படையின் உலங்குவானூர்திகள் மூலமாகவும், படகுகளில் சென்றும் அவர்களை மீட்டனர். இதன்படி, ஆங்கிலக் கால்வாயின் 5 இடங்களில் இருந்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 40 அகதிகள் மீட்கப்பட்டனர். இதேபோன்று, கடந்த சனிக்கிழமையன்று பிரித்தானியா நோக்கி சென்ற 16 அகதிகளை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli