வேட்பாளர்களின் எதிர்காலத்தை அன்றி நாட்டின் எதிர்காலம் குறித்தே மக்கள் தீர்மானிக்க வேண்டும்
எனக்கு யாருடனும் போட்டி கிடையாது என்கிறார் ஜனாதிபதி
ஏனைய வேட்பாளர்கள் தமது எதிர்காலத்திற்காக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அதேவேளை, நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்காகவே தான் போட்டியிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் அந்த நிலையிலிருந்து நாட்டைக் காப்பாற்றி ஆளுமைமைய வெளிப்படுத்தியுள்ளதால் தனக்கு யாருடனும் போட்டி கிடையாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் ஆரம்பித்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கும் ஆணையை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடம் கோருவதாகவும் தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரேன்ட் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் அல்லது கடன் வழங்குநர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளின் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது எனவும், அவ்வாறு செய்தால் இலங்கைக்கு அந்த நிதியை இழக்க நேரிடும் எனவும் எனவே அனைத்து வேட்பாளர்களும் வாக்காளர்களுக்கு உண்மையை கூற வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
சிலரால் ஊழலைப் பற்றி பேச மட்டுமே முடிகிறது. ஆனால் ஊழலைத் தடுக்க பல சட்டங்களை இயற்றியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மோசடி ஊடாகச் சம்பாதித்த சொத்துகள் தொடர்பாக விசாரிப்பதற்கான சட்டமூலத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:
வேறு எவரும் முன்வராத காரணத்தினால் தான் இன்று நான் ஜனாதிபதியாக செயற்படுகின்றேன். நான் ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்களுக்குள் நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுத்தேன். இலங்கையின் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்றும் கூறினார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து கிரீஸ் மீள 10 வருடங்கள் ஆனது. இந்தோனேசியாவிற்கு 8 வருடங்கள் பிடித்தது. இந்த பிரச்சினையை இலங்கை எவ்வாறு தீர்க்கும் என சிலர் கேள்வி எழுப்பினர்.
ஆனால் இந்த பிரச்சினையை குறுகிய காலத்தில் தீர்க்க முடியும் என்று நான் நம்பினேன். இது தொடர்பில் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடினேன். அதனால் அச்சமின்றி இந்த சவாலை ஏற்றுக்கொண்டேன். ஆனால் என்னை ஆதரிக்க எந்த ஒரு தனிக் கட்சியும் இருக்கவில்லை. பொதுஜன பெரமுனவின் ஒரு குழு எம்முடன் இணைந்தது. மற்றொரு குழு எதிர்க்கட்சிக்கு சென்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குழுவும் எம்முடன் இணைந்தது. சிலர் எதிர்க்கட்சியில் இணைந்தனர். நான் கட்சியொன்றில்லாமல் ஆட்சி அமைத்து இந்தப் பொறுப்பை ஏற்றேன். இப்போது முதற்கட்ட பணிகளை முடித்துவிட்டோம். நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க நாம் இப்போது வழி வகுத்துள்ளோம். அந்தப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
இந்த நாட்டின் பொருளாதார முறைமை சீர்குலைந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். மேலும், வரிச்சுமை அதிகரித்ததால், சிலர் அதனைச் சுமக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதற்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதைச் செய்யாமல் நாட்டின் பொருளாதாரத்தை முன்னெடுக்க முடியவில்லை. நாம் உண்மையைச் சொல்வதற்குத் தயாராக இல்லை என்பதே எமது நாட்டு அரசியலில் உள்ள சிக்கலாகும்.
ஸ்திரத்தன்மை இல்லாமல் ஒரு நாடு முன்னேற முடியாது. பங்களாதேஷில் நடைபெறும் விடயங்களை தொலைக்காட்சியில் பார்த்தபோது, இந்த நாட்டைக் பொறுப்பேற்றிருக்காவிட்டால் எமது நாட்டின் கதி என்னவாக இருந்திருக்கும் என்று சிந்தித்தேன். பங்களாதேஷ் பிரதமருக்கு விலகுமாறு கூறப்பட்டாலும் நிர்வாகத்தை ஏற்க எந்த நிறுவனமும் இருக்கவில்லை. இராணுவம் தலையீடு செய்ய முயன்றாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். முஹம்மது யூனுஸை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டம் பிரதமராக வருவதற்கு எம்.பி.யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அந்த நிலை எமது நாட்டுக்கு வந்தால் என்ன நடக்கும்? எமது நாடு அதிர்ஷ்டகரமான நாடு. எப்படியாவது ஒரு அரசாங்கத்தை உருவாக்கினோம். அதனால்தான் இன்று ஜனாதிபதி தேர்தலை நடத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் எதிர்காலத்தையே நீங்கள் தீர்மானிக்க வேண்டும். இந்தப் பாதையில் தொடர்ந்து முன்னேறி அபிவிருத்தியடைந்த நாடாக மாறப்போகிறோமா? நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு நிவாரணம் வழங்கப் போகிறோமா? இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கப் போகிறோமா? இல்லையேல் பழைய அரசியலில் ஈடுபட்டு பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைந்து வரிசை யுகத்திற்கு செல்லப் போகிறோமா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
முகங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நாட்டைக் காப்பாற்றும் வலிமையும், கொள்கையும் தங்களுக்கு இருக்கிறதா இல்லையா என்பதை தான் மக்கள் தீர்மானிக்க வேண்டும். இந்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களின் எதிர்காலத்தையன்றி நாட்டின் எதிர்காலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தைத் தான் தீர்மானிக்க வேண்டும். இங்கிருந்து படிப்படியாக முன்னேறுவதா, நாட்டின் பிரச்சினைகளை பலத்துடன் தீர்ப்பதா அல்லது 2022இல் இருந்த நிலைக்கு செல்வதா என்பதை முடிவு செய்ய வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனும், எமக்கு கடன் வழங்கும் நாடுகளுடனும் செய்துள்ள ஒப்பந்தங்கள் எதனையும் மீற முடியாது. தற்போதுள்ள இந்த இலக்குகள் மற்றும் வரையறைகளை மாற்ற முடியாது. அப்படி செய்தால் எமக்கு நிதி கிடைக்காது. அந்த நிலையில் நமது நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடையும்.
பல்வேறு கட்சிகளும் வெவ்வேறு வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமில்லை. அந்த நிலையில் வெட் வரியை அதிகரிக்க நேரிடும். அதுதான் யதார்த்தம். உண்மையைச் சொல்லி நாட்டைக் காப்பாற்றத் தயாரா, பொய் சொல்லி ஆட்சியைப் பிடிக்கத் தயாரா என்பதைச் சிந்திக்க வேண்டும். எனவே, அரசாங்கம் ஆரம்பித்துள்ள இந்த வேலைத் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்க மக்கள் ஆணையை கோருகிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
அடுத்த 05 வருடங்களில் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம். அதை செயலில் நிரூபித்துள்ளேன். இம்முறை மட்டுமல்ல, 2001ஆம் ஆண்டிலும் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்ட நாட்டையே நான் பொறுப்பேற்றேன். அப்போதும் அந்த பொறுப்பை நிறைவேற்றி இருக்கிறேன். எனவே, இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் திறன் என்னிடம் உள்ளது.
ஆனால் ஏனைய வேட்பாளர்கள் வாக்குறுதிகளை மட்டுமே கொடுக்கிறார்கள். அந்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றுவது என்று அவர்களிடம் கேட்க வேண்டும். பழைய அரசியல் முறையில் செயற்பட்டதாலேயே இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, நாட்டு மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தேன்.
– சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். அதை செயல்படுத்த வேண்டும். இந்த உடன்படிக்கையை நாம் கடைப்பிடித்தால், எமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது. மாற்றுத் திட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் அவற்றை வெளியிட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகள் மற்றும் நியதிகள் மாற்றப்படாது. அவர்கள் ஒவ்வொரு நாடுகளுக்குமான அளவுகோள்களை கொண்டுள்ளனர். யாராவது எதையாவது இலவசமாகக் கொடுக்க முன்வந்தால், VAT வரியை 25% ஆக அதிகரிப்பதன் மூலம் அதை ஈடுசெய்யலாம் என்று எண்ணினால், புள்ளிவிவரங்களை சீரமைக்க முடியும் என்று நினைத்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுகளை எட்டலாம். ஆனால் இந்த அளவீடுகள், வருமான அளவு மற்றும் செலவு அளவுகளை எவராலும் மாற்ற முடியாது என்றார். – Vidivelli