வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது காணிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும்
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் பிரச்சினை குறித்தும் கவனம் செலுத்துமாறு தொழில் வாண்மையாளர் ஒன்றியம் ஜனாதிபதியிடம் கோரிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்க அதிகாரிகளினால் முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் நசுக்கப்பட்டு உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதாக தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளது.
அத்துடன், இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் செயற்திட்டத்தின்போது வடக்கு, கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்துமாறும் அவ்வமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சனிக்கிழமை மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் பிரமுகர்களை மட்டக்களப்பு “ஈஸ்ட் லகூன்” உல்லாச விடுதியில் சந்தித்தார்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்த தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றிய தவிசாளர் யு.எல்.எம்.என்.முபீன் மற்றும் அவ் அமைப்பின் உபதலைவர் ஜாபீர் நளீமி ஆகியோர் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
முதலில் கருத்து தெரிவித்த தொழில் வாண்மையாளர் ஒன்றியத்தின் தவிசாளர் முபீன் அண்மையில் வடமாகாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ஆகிய நீங்கள் 13 ஆம் திருத்தத்தை பொலிஸ் அதிகாரம் இன்றி நடைமுறைப்படுத்தப் போவதாக கூறி இருந்தீர்கள்.
உண்மையில் இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியதை முஸ்லிம் சமூகம் வரவேற்கிறது.
ஆனால் நான் பின்னால் சொல்லப் போகின்ற பல்வேறு காரணங்களினால் இத்தகைய தீர்வுகள் வழங்கப்படுவது முஸ்லிம்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுமா? என்று அச்சம் முஸ்லிம்களுக்குள்ளே தொடராக இருந்து வருகின்றது. காரணம் இங்கே பதவியில் இருக்கின்ற தமிழ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கிழக்கு மாகாணத்தில், வடமாகாணத்தில் முஸ்லிம்களை நசுக்கும் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றனர்.
தற்போது அரசியல் யாப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பரவலாக்க நடைமுறைகளின் ஊடாக அதாவது பிரதேச செயலகம், கச்சேரி முறைமைகளின் ஊடாக அவ்வதிகாரங்களை பயன்படுத்தியே முஸ்லிம்களின் உரிமைகளை தொடர்ந்துதேச்சியாக இந்த தமிழ் அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.
எனவே இவர்களுக்கு அதிகாரங்களை கொடுக்கின்றபோது அவ் அதிகாரங்களைக் கொண்டு மேலும் முஸ்லிம்களை அவர்கள் நசுக்குவார்கள் என்ற அச்சம் முஸ்லிம்களை பீடித்துள்ளது. எனவேதான் 13வது திருத்தம் அமுல்படுத்தப்படுகின்ற போது முஸ்லிம்களுக்கான தீர்வு என்ன என்ற கேள்வியை அதிமேதகு ஜனாதிபதியாகிய உங்களைப் பார்த்து நாங்கள் கேட்கின்றோம்? இனப்பிரச்சினைக்கான தீர்வை நீங்கள் வழங்க வேண்டும்.
ஆனால் அத்தீர்வு வழங்குகின்ற போது முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முஸ்லிம்களுக்குரிய பொருத்தமான தீர்வையும் நீங்கள் வழங்க வேண்டும் என்று உங்களை மிகத் தாழ்மையாக கேட்டுக்கொள்கிறோம்.
அடுத்த விடயமாக தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புவது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் பாரிய நிலப்பற்றாக்குறையை எதிர்நோக்குகின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 27% வாழ்கின்ற முஸ்லிம்கள் வெறுமனே 46 சதுர கிலோமீட்டர் காணியையே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பிலே 2854 சதுர கிலோமீட்டர் மொத்த காணியில் தமிழ் பிரதேசத்தில் 2808 சதுர கிலோமீட்டர் அவர்களுக்கு உரியதாக காணப்பட நான்கு பிரதேச செயலகங்களைக் கொண்ட முஸ்லிம்கள் வெறுமனே 46 சதுர கிலோ மீற்றர் காணிகளையே பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. இது மொத்த காணி அளவில் 1.5 வீதம் ஆகும்.
2023 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்ட புள்ளி விவர அறிக்கையின்படி முஸ்லிம்களின் விகிதாசாரம் 27% ஆகும் எனவே, 27 வீதத்திற்கு மொத்தமாக முஸ்லிம்களுக்கு 770 சதுர கிலோமீட்டர் காணி உரித்துடையது
ஆனால் மட்டக்களப்பு கச்சேரி திட்டமிட்ட வகையில் முஸ்லிம்களின் காணி உரிமைகளை மறுத்து வெறும் 46 சதுர கிலோ மீட்டருக்குள் அவர்களை முடக்கியுள்ளது.
கடந்த உள்நாட்டு யுத்தத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் 33 கிராமங்களில் இருந்து பலவந்தமாக துரத்தி அடிக்கப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலே அமைந்துள்ள காத்தான்குடி, ஏறாவூர், கல்குடா போன்ற பிரதேசங்களில் குடியேறினர். இதனால் ஏற்கனவே அங்கு நிலவிய காணிதட்டுப்பாடு மேலும் பாரிய தட்டுப்பாட்டை அம் முஸ்லிம் மக்களுக்கு ஏற்படுத்தியது.
அத்தோடு 1999 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பனம்பல ஆணைக்குழுவிற்கு புதிய பிரதேச செயலக கோரிக்கையை முன்வைத்த தமிழ் தரப்பினர் தங்களுக்கான ஒரு புதிய தமிழ் பிரதேச செயலகமாக கோரளை தெற்கு கிரான் பிரதேச செயலகத்தை உருவாக்குகின்ற போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு காணி இருந்த ஒரே ஒரு பிரதேசமான கோரளை மேற்கு ஓட்டமாவடி பிரதேசத்தில் இருந்து ஐந்து கிராமங்களை திட்டமிட்ட அடிப்படையில் இணைத்து தங்களுக்கான பிரதேச செயலகத்தை உருவாக்கிக் கொண்டனர். ஏற்கனவே பலமான காணி தட்டுப்பாட்டை எதிர்நோக்கிய முஸ்லிம்களுக்கு இத்தகைய திட்டமிட்ட செயல் அவர்களின் காணியை உரிமையை மேலும் மிகப்பெரிய சிக்கலுக்கு உள்ளாகியது.
எனவே மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப 770 சதுர கிலோமீட்டர் காணியை நீங்கள் உங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி எமக்கு பெற்றுத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குவதற்காக 1999 ஆம் ஆண்டு பணம்பலன ஆணை குழு அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டது, இவ்வாணைக்குழு இலங்கையின் பல்வேறு பிரதேசங்களுக்கு விஜயம் செய்து ஆறு பிரதேச செயலகங்களை உருவாக்கியது. இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களில் இரண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது.
அதில் ஒன்று கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் ஆகும். இக்கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்டதுடன் அதேவேளை கோரளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் தமிழர்களுக்கான உருவாக்கப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச செயலகங்களில் கிரான் பிரதேச செயலகத்தை உத்தியோகப்பற்றற்ற முறையில் 620 சதுர கிலோமீட்டர் காணியை வழங்கி அப்பிரதேச செயலகத்தை இயங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம் அனுமதி வழங்கியது. அதே வேளை முஸ்லிம்களுக்கு என உருவாக்கப்பட்ட அதாவது 240 சதுர கிலோமீட்டர் காணி பரப்பைக் கொண்ட கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தை அதற்குரிய காணி அளவீட்டினை அளவீடு செய்யாமல் மட்டக்களப்பு கச்சேரி மறுத்து வருவதுடன் இன்று வரை சுமார் 23 வருடங்கள் கடந்தும் இக் கோரளை மத்தி முஸ்லிம் பிரதேச செயலகம் வெறும் ஆறு சதுர கிலோமீட்டருடன் இயங்கி வருகிறது.
அத்துடன், 2000 ஆண்டு இச்செயலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தையும் இதுவரை அமுல்படுத்தாமல் இழுத்தடித்து முஸ்லிம்களின் காணி உரிமையை இந்த மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மறுத்துவருகிறது.
இதுவரையில் 9 அரசாங்க அதிபர்கள் அமைச்சரவை தீர்மானத்தை மறுத்து அரசாங்கத்தின் ஆணைக் குழுவின் சிபாரிசையும் மறுத்து முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள், ஜனாதிபதி, பிரதமர் என பலரை சந்தித்தும் இதுவரை இந்த அநியாயத்துக்கு முடிவு கிடைக்கவில்லை. எனவே உங்களுடைய காலத்திலாவது இந்த பிரச்சினையை தீர்த்து வையுங்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பில் சகலருடனும் கலந்துரையாடி தீர்வை வழங்க எதிர்பார்க்கிறோம். ஏனைய விவகாரங்கள் தொடர்பில் தேர்தல் முடிந்ததன் பின்னால் மீண்டும் வருகை தந்து எல்லோரிடமும் கலந்துரையாடி இதற்கான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த தொழில் வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியத்தின் உப தலைவரான அஷ்ஷெய்க் ஜாபிர் நளீமி,
காத்தான்குடியின் எல்லை பிரச்சினைகள் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன. இவ் எல்லைகள் தொடர்பில் தெளிவான மூன்று வர்த்தமானி அறிவித்தல்கள் இருந்தும் இரண்டு பக்க எல்லைகளிலும் முஸ்லிம்களின் காணி அடாத்தாக ஏனைய பிரதேச செயலகங்களால் கைப்பற்றப்பட்டு நிர்வாகம் செய்யப்படுகிறது. பாரிய காணித்தட்டுப்பாட்டை எதிர்நோக்கும் காத்தான்குடிக்கு இது மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
எனவே இவ் எல்லை பிரச்சினையை தீர்த்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் காத்தான்குடி பிரதேச சபை நகர சபையாக தரம் உயர்த்தப்பட்ட வேளையில் காத்தான்குடியின் காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. அண்மையில் அமுல்படுத்தப்பட்ட “உருமய” வேலைத் திட்டத்தில் காத்தான்குடியில் பாரிய காணிப் பிரச்சினையை எதிர்நோக்கும் முஸ்லிம்களுக்கு தீர்வை பெற்றுக் கொள்ள முடியவில்லை.
எனவே புதிய காத்தான்குடியை ஒரு பிரதேச சபையாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதியை கேட்டுக் கொள்வதோடு அப்பிரதேச சபையுடன் காத்தான்குடிக்கு நெருக்கமாக உள்ள முஸ்லிம் கிராமங்களான பூனொச்சிமுனை, மஞ்சந் தொடுவாய், பாலமுனை போன்ற கிராமங்களையும் இணைத்து புதிய காத்தான்குடி பிரதேச சபை ஒன்றை உருவாக்கித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார்.- Vidivelli