தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு பதிலளிக்காத பள்ளிவாசல் தலைவரை தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை முஹையதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் மற்றும் அப்பள்ளிவாசலின் தகவல் அதிகாரி ஆகியோருக்கே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் றிப்தி அலி தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேற்கொண்ட மேன் முறையீட்டினை அடுத்தே இந்த உத்தரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு இடம்பெறவுள்ள குறித்த மேன் முறையீடு தொடர்பான விசாரணையில் ஆஜராகுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் கடந்த ஜூலை 24ஆம் திகதி தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவினால் குறிக்கப்பட்ட திகதியில் நடைபெறவுள்ள அதன் அமர்வில் பள்ளிவாசல் தலைவர் பங்கேற்காவிடினும், இந்த மேன் முறையீடு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படலாம் என அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆணைக்குழு முன்னால் தோன்றுவதற்கு தவறுகின்ற அல்லது மறுக்கின்ற தகவல் அதிகாரி மற்றும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரிக்கு எதிராக ஆணைக்குழுவினால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என 2016ஆம் ஆண்டின் 12ஆம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 39ஆவது பிரிவில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கல்முனை முஹையதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட காணிகளின் விபரங்கள், அதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள், இப்பள்ளிவாசலின் கீழுள்ள கடைகள், அதன் மூலம் கிடைக்கும் வருமானங்கள், இப்பள்ளிவாசலின் வரவு மற்றும் செலவு போன்ற விடயங்களைக் கோரி ஊடகவியலாளர் றிப்தி அலியினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல் கோரிக்கை மற்றும் மேன் முறையீடு ஆகியவற்றுக்கு குறித்த பள்ளிவாசலின் நிர்வாக சபையினால் இன்று வரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.
1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க வக்பு சட்டத்தின் கீழ் வக்பு சபையில் இப்பள்ளிவாசல் பதிவுசெய்யப்பட்டுள்ளமையினால் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் 43ஆவது பிரிவின் கீழ் இப்பள்ளிவாசல் ஒரு பகிரங்க அதிகாரசபை எனத் தெரிவித்தே இந்த மேன் முறையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, கல்முனை முஹையதீன் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலுக்கு வக்பு சபையினால் கடந்த ஜுலை 24ஆம் திகதி புதிய நிர்வாகம் நியமிக்கப்பட்டு, புதிய தலைவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli