கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுபோன்று செப்டம்பர் மாதம் இருபத்தொன்றில் நடைபெறுமானால் அந்தத் தேர்தலின் முடிவு இந்த நாட்டின் சுதந்திரத்துக்குப் பிற்பட்ட அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பைத் தவறவிட்டால் இலங்கை தொடர்ந்தும் இன்று அனுபவிக்கும் நெருக்கடிகளைவிடவும் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் நிர்ப்பந்தம் ஏற்படலாம்.
இந்தச் சிந்தனையை மையமாகக்கொண்டு குறிப்பாக முஸ்லிம் வாக்காளர்களைப் பற்றியும் அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள ஒரு முக்கியமான மாற்றத்தைப்பற்றியும் எதிர்வரும் தேர்தலில் அவர்களின் பங்களிப்பைப்பற்றியும் சில கருத்துக்களை இக்கட்டுரை முன்வைக்கின்றது. இது ஒரு தூரத்துப்பார்வையாயினும் இலங்கை முஸ்லிம் சமூகத்தைப்பற்றியும் அதன் வரலாறுபற்றியும் நீண்டகாலமாக அவதானித்த ஓர் ஆய்வாளனின் ஆழமான பார்வை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
கடந்த ஏழரை தசாப்தங்களாக நீடித்துவரும் இலங்கையின் ஜனநாயக அரசியலில் முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் ஒரு பார்வையாளியாக இருந்திருக்கின்றதேயன்றி பங்காளியாக இருக்கவில்லை என்று கூறுவது பொருந்தும். இக்கூற்று பலருக்கு அதிர்ச்சியைத் தரலாம். ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்கள் பங்குபற்றி பல தொகுதிகளில் வென்று மந்திரி சபைகளிலும் அங்கத்துவம்பெற்ற நாங்கள் பங்காளிகளல்லாமல் வெறும் பார்வையாளர்களா? இது ஒரு நியாயமான கேள்வி என்பதை மறுக்கவில்லை. ஆனால் பங்களிப்பு என்பது வெறுமனே தேர்தலில் வாக்களிப்பதோடும் அமைச்சர்களாவதோடும் பூர்த்தியாகும் ஒரு களியாட்டவிழா அல்ல. அதற்கும் அப்பாலே சென்று நாடளாவிய ரீதியில் இலங்கையின் அரசியல், பொருளாதார, கலாச்சார, ராஜதந்திரத் துறைகளில் எழுந்த பிரச்சினைகளைப்பற்றியும் அவற்றிற்கான தீர்வுகளைப்பற்றியும் ஆக்கபூர்வமான பங்களிப்புகளை எந்த அளவுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களோ நிபுணர்களோ செய்துள்ளனர் என்று நோக்கின் அது மிகமிகக் குறைவு என்பது புலனாகும். ஆனால் முஸ்லிம் சமூகத்துக்காகச் சில தலைவர்கள் அளப்பரிய சேவை செய்துள்ளனர் என்பதை மறுக்கவில்லை. இதிலிருந்து புலப்படுவது என்னவெனில் முஸ்லிம்களின் அரசியல் ஒரு வியாபார அரசியல் என்பதே. யார் ஆண்டாலும் எந்தப் பிரச்சினைகள் எப்படி நாட்டைப் பாதித்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை, எங்களின் காரியம் நிறைவேறினால் போதும் என்ற மனப்பாங்கே முஸ்லிம் அரசியலின் தாரக மந்திரமாக இதுவரை இருந்து வந்துள்ளது. அந்த மனப்பாங்கிற்குச் சில தவறான இஸ்லாமிய மதபோதனைகளும் உறுதுணையாக இருந்துள்ளன.
அதே சமயம் இலங்கையின் திரிபுபடுத்தப்பட்ட ஜனநாயக ஆட்சிமுறையும் கட்சி அரசியலும் அந்த மனப்பாங்கை தனது பிரிவினை அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதையும் வலியுறுத்த வேண்டியுள்ளது. அந்த வரலாற்றை விரிவாக விளக்க இக்கட்டுரையின் நீளம் இடமளிக்காது. சுருக்கமாகச் சொன்னால், ஜனநாயகம் என்ற போர்வைக்குள் நடைமுறையிலிருந்ததோ சிங்கள பௌத்த பேரினவாதம். அந்தப் பேரினவாத அரசியல் அமைப்பு பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு இன அமைதியைக் குலைத்ததையும் அதனால் ஒரு போரே உருவாகியதையும் யாவரும் அறிவர். ஆனால் அந்த அமைப்பின் உள்நாட்டுத் தோற்றமும் வெளியுலகத் தோற்றமும் முரணானவை. முஸ்லிம்களுக்குச் சலுகைகளை வழங்கி அரவணைத்ததன்மூலம் இன ஒற்றுமையைப் பேணுவதான ஒரு போலி முகத்தை அந்த ஆட்சி வெளியுலகுக்குக் காட்டியது. இந்தப் போலி அரவணைப்பின் நிழலிலே வளர்ந்ததே முஸ்லிம்களின் வியாபார அரசியல். ஆனால் காலவோட்டத்தில் அந்த அரவணைப்பைக் கைவிட்டு முஸ்லிம்களையும் ஓர் எதிரியென பேரினவாதம் கணிக்கத் தொடங்கவே வியாபார அரசியலும் அத்தோடு காலாவதியாகி விட்டது. 1990வரை தனிப்பட்ட முஸ்லிம் அரசியல் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த அரசியல் அதன் பின்னர் முஸ்லிம் கட்சிகள்மூலம் தொடரப்பட்டு இன்றைக்கு இரண்டுமே வலுவிழந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. பாமர முஸ்லிம்களும் இந்தத் தலைவர்களின் பின்னாலேயே மந்தைகள்போன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று எந்த விபரமும் தெரியாது தலைவர்கள் சொன்னதுபோன்று வாக்களிக்கலாயினர். அந்த நிலை இன்று மாறிவிட்டது.
அதை விளக்குவதற்கு முன்னர் இன்னுமொரு விடயத்தை நோக்குவோம்.
அதாவது, அரசியல் பௌத்தத்தின் நிழலிலே நாட்டின் நிர்வாகமும் பொருளாதாரமும் சீர்குலையத் தொடங்கின. சுருக்கமாகச் சொன்னால் இன்றையப் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம் கடந்த இரண்டு வருடங்களுக்கும் முற்பட்டது. எவ்வளவோ இயற்கை வளங்களுடனும் பொதுநல அபிவிருத்தியுடனும் சுதந்திரம் அடைந்த இந்த நாடு, ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக வளர்சிபெற்ற நாடெனப் புகழ்பெற்றிருந்த இலங்கை, இன்று வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்பட்டதும் இறுக்கமுடியாத கடனுக்குள் சிக்கியதும் அரசாங்கங்களின் ஊழல்மலிந்த நிர்வாகக் கேட்டினாலும் சுயநல வேட்கையினாலும் இனங்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியினாலுமேயன்றி வேறு காரணங்களால் அல்ல. இந்தச் சரிவினை நேரடியாக உணர்ந்து அனுபவித்துக் கசந்த ஓர் இளம் சிங்கள பௌத்த சந்ததிதான் 2022ல் அரகலய என்ற வரலாற்று முக்கியத்துவம்பெற்ற கிளர்ச்சியில் இறங்கியது. நாட்டின் ஆட்சி அமைப்பையே மாற்று! நாடாளுமன்றப் பிரதிநிதிகளே வெளியேறு! என்ற கோஷங்களுடன் இன, மத, மொழி வேறுபாடுகளைக் களைந்தெறிந்து காலிமுகத் திடலிலே ஆரம்பமாகிய அரகலய ஒரு பிரதமரையும் ஜனாதிபதியையும் பதவி துறக்கச்செய்தபின் தற்காலிகமாக நாடாளுமன்றத்தினரால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு ஜனாதிபதியால் படைகொண்டு ஒழிக்கப்பட்டது. ஆனாலும் அரகலய ஆரம்பித்த ‘அமைப்பையே மாற்று’ என்ற கோரிக்கைதான் எதிர்வரும் தேர்தலின் முடிவினைத் தீர்மானிக்கப் போகின்றது என்பதை முஸ்லிம் வாக்காளர்கள் உணர வேண்டும்.
இனி முஸ்லிம் வாக்காளர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒரு முக்கியமான மாற்றத்தை நோக்குவோம். மந்தைகளைப்போன்று தலைவர்களின் விருப்பப்படி வாக்களித்து ஏமாந்த பாமர முஸ்லிம்களல்ல இன்று வளர்ந்துள்ள வாக்காளர்கள். கடந்த சில தசாப்தங்களாக முஸ்லிம் சமூகத்தில் ஏற்பட்ட கல்வி விழிப்புணர்வு ஒரு புத்திஜீவிகள் சமுதாயத்தை உருவாக்கியுள்ளது. அதில் ஆண்களும் பெண்களும் அடங்குவர். கல்வியாளர்களும், துறைசார் பதவியாளர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் மலிந்துள்ள இவ்விளஞ் சமுதாயத்தில் எதையும் அலசி ஆராயும் தகைமை வளர்ந்துள்ளதால் அரசியல் மற்றும் மதத் தலைவர்களின் விருப்பத்துக்கு இணங்க வாக்களிப்பர் என எதிர்பார்ப்பது மடமை. இன்று வாழும் முஸ்லிம் பெற்றோரின் அரசியல் பகுத்துணர்வுக்கும் அவர்களின் பெற்றோர்களின் அரசியல் பகுத்துணர்வுக்குமிடையே ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தையும் அரகலய ஏற்படுத்திய தாக்கத்தையும் பின்னணியாகக் கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நோக்குவோம்.
ஜனாதிபதித் தேர்தல் களத்திலே பல வேட்பாளர்கள் குதித்துள்ளபோதிலும் மூவர் முன்னணியில் நிற்கின்றனர் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ, சஜித் பிரேமதாஸ, அனுர குமார திசாநாயக ஆகியோரே அம்மூவருமாவர். இந்த மூவருள் தேசிய மக்கள் சக்திக் கூட்டணியின் தலைவர் திசாநாயக மட்டுமே நாட்டின் அரசியல் கலாச்சாரத்தையே சமூகப் புரட்சிமூலம் ஒழித்து ஊழலற்ற ஆட்சியொன்றை நிறுவி சகல இனங்களும் சம உரிமையோடும் கௌரவத்துடனும் வாழும் ஒரு ஜனநாயக அமைப்பைக் கொண்டுவருவேன் எனவும், பொருளாதாரத்துறையிலே சர்வதேச நாணய நிதியுடன் பேச்சுவார்த்தை மூலம் சில சிபார்சுகளை முன்வைத்து உள்நாட்டு உற்பத்திச் சக்திகளுக்குப் போதிய ஊக்கமளித்து, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலதனங்களை நாட்டின் தேவைக்கேற்ப வழிப்படுத்தி, இன்றைய வங்குரோத்து நிலைக்குக் காரணமாய் இருந்தோரையும் சட்டத்தின்முன் நிறுத்தி நியாயம் வழங்குவேன் எனத் தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகிறார். அவரது கூற்று அரகலயவின் எதிரொலி. அது விழிப்புற்ற ஓர் இளம் சமுதாயத்தின் உரிமைக் குரல். அவருக்கும் அவரது கூட்டணிக்கும் பெரும்பான்மை இனத்தினரிடையே அடிமட்ட ஆதரவு பெரும்பான்மையாக உண்டெனக் கருத்துக்கணிப்புகள் கூறினாலும் அவர் தனது வெற்றி சகல இனங்களினதும் கூட்டுமுயற்சியாக அமைய வேண்டுமென விரும்புகிறார். இங்கேதான் முஸ்லிம்களின் விழிப்புற்ற இளம் சமுதாயத்தின் பங்களிப்பு இன்றியமையாததாக விளங்குகிறது.
நாடு நலம்பெறாமல் நாட்டு மக்கள் நலம்பெற முடியாது. எனவே நாட்டின் ஆட்சிமுறையும் ஆட்சியினரும் சீரற்றுக் கிடக்கையிலே எவ்வாறு முஸ்லிம்கள் நலம்பெற முடியும்? நாங்கள் எங்கள் உரிமைகளுக்காகப் போராடுவோம் என்று முஸ்லிம் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் தம்பட்டம் அடிப்பது ஓர் ஏமாற்று வித்தை என்பதை இனியாவது உணரவேண்டும். எனவேதான் நாட்டின் மீட்சிக்காகப் ேபாராடும் போராட்டத்தில் முஸ்லிம்கள் பார்வையாளர்களாக நின்று வேடிக்கை பார்க்காமல் பங்காளிகளாக மாறவேண்டும். அந்தப் பங்காளிகளே இன்று முஸ்லிம்களிடையே உருவாகியுள்ள புத்திஜீவிகளின் சமுதாயம்.
ஜனாதிபதி விக்கிரமசிங்ஹ ஒரு பழைய உத்தியையே முஸ்லிம்களின் வாக்குகளைக் கவர்வதற்காகக் கையாளுகின்றார். அதாவது முஸ்லிம் தலைவர்களுக்குப் பதவிகளும் சன்மானங்களும் வழங்கி அவர்களின் ஆதரவை விலைகொடுத்தேனும் வாங்கிவிட்டால் அவர்களிள் தொகுதி மக்கள் மந்தைகள்போன்று தலைவர்களின் சொற்கேட்டு வாக்களிப்பர் என்பது சென்றகால உத்தி. கிழக்கிலே பிரச்சார மேடைகளில் முழங்கும் பச்சோந்தி முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியின் கைக்கூலிகளோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு ஜனாதிபதிக்குப் புகழாரம் சூட்டுவது இந்த உத்தியின் பிரதிபலிப்பே. அது இனிமேலும் செல்லுபடியாகாது. ஏனெனில் வாக்காளர்களின் தகைமையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. தகைமைவாரியான அந்த மாற்றம் வாக்கு எண்ணிக்கையில் தொகைவாரியான மாற்றத்தை ஏற்படுத்துவது நிச்சயம்.
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் எதிர்வரும் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தைத் தோற்றுவிக்கும் வாய்ப்பினைக் கொண்டுவரும் எனக் கூறப்பட்டது. ஏனெனில் பெரும்பான்மை இனத்தினரிடையே அதுவும் அதன் இளம் சமுதாயத்தினரிடையே தற்போது நடைமுறையிலிருக்கும் ஆட்சிமுறையின் பம்மாத்து நாடகம் அம்பலமாகி விட்டது. அதன் தீய விளைவுகளை அந்தச் சமுதாயம் நேரிலே கண்டு அனுபவித்துள்ளது.
ஆகையால் அமைப்பு மாற்றம் வேண்டும் என்ற ஒரு புதிய அலை தென்னிலங்கையில் வீசத் தொடங்கிவிட்டது. அந்த அலையில் எதிர்நீச்சல் போடுவது ஆபத்தானது.
முடிவாக, முஸ்லிம் வாக்காளர்களுக்கோர் உருக்கமான வேண்டுகோள். ஏற்கனவே சுட்டிக்காட்டியதுபோல் தேசிய மக்கள் சக்திக் கூட்டணியைத்தவிர மற்ற எந்தக் கட்சியோ கூட்டணியோ அல்லது தலைவனோ அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தத் தயாரில்லை. அந்த மாற்றம் ஏற்படாமல் முஸ்லிம் இனத்துக்கு மட்டுமல்ல எந்தச் சிறுபான்மை இனத்துக்கும் விடிவுகாலம் இல்லை. எனவே எதிர்வரும் தேர்தலைப் பகிஷ்கரிப்பதும், சிறுபான்மையோர் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துவதும் அமைப்பு மாற்றமே வேண்டாம் என்பது போல் இல்லையா? இது ஒரு திட்டமிட்ட சதியா அல்லது விஷமிகளின் திருவிளையாடலா? முஸ்லிம்களே! புதிய அமைப்பின் பங்காளியாகுங்கள்.- Vidivelli