ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் போட்டியிடவுள்ள பிரதான வேட்பாளர்கள் பற்றி விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரை ரணில், சஜித், அநுர எனும் முத்தரப்பு போட்டி நிலவும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் பொது ஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்குவதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேர்தல் களத்தில் நான்கு முனை போட்டியை தோற்றுவித்துள்ளதுடன் தேர்தல் களத்தை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.
சிங்கள மக்களின் வாக்குகள் மேற்படி நான்கு பிரதான வேட்பாளர்களுக்கும் பிரிந்து செல்லும் நிலையில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் எவ்வாறு அமையும் என்பதை இப்போதைக்குக் கூற முடியாதுள்ளது. சில தமிழ் கட்சிகள் தமது தீர்மானத்தை அறிவித்துள்ளன. பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்னும் தனது தீர்மானத்தை அறிவிக்கவில்லை.
இந்நிலையில்தான் முஸ்லிம் தரப்பு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பல தடவைகள் கூடியும் இதுவரை யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை எட்டவில்லை.
எனினும் இவ்விரு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கைகோர்த்துச் செயற்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஜனாதிபதி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார். தத்தமது மாவட்டங்களில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கென பல மில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது வழக்கம் போல சலுகைகளுக்கும் சுயநலன்களுக்கும் முஸ்லிம் எம்.பி.க்கள் அடிபணிய ஆரம்பித்து விட்டார்கள் என்பதையே காண்பிக்கிறது.
முஸ்லிம் காங்கிரஸ் தாம் நிபந்தனைகளுடனேயே சஜித்தை ஆதரிக்கவுள்ளதாக கூறுகிறது. எனினும் அந்த நிபந்தனைகள் என்ன என்பது இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. வழக்கம் போல இம்முறையும் இந்த நிபந்தனைக் கதை வெறும் கண்துடைப்பாகவே அமையப் போகிறதா அல்லது சமூகம் எதிர்நோக்குகின்ற சமகாலப் பிரச்சினைக ளுக்குத் தீர்வைக் கோரப்போகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் ஜனாஸா எரிப்பு ஆகிய தலையாய பிரச்சினைகள் உட்பட முஸ்லிம் சமூகத்திற்கு நீதி கிடைக்க வேண்டிய பல்வேறு விடயங்கள் நம்முன் உள்ளன. எனினும் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்த பொதுவான கோரிக்கைகளை எல்லா வேட்பாளர்களிடமும் முன்வைத்து அவர்களின் நிலைப்பாடுகளை அறிந்து ஆதரவளிக்கும் சாத்தியங்களைக் காண முடியவில்லை. முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் தமது தனிப்பட்ட அரசியல் எதிர்காலம் மற்றும் கட்சியின் நலன் ஆகியவற்றை முன்னிறுத்தியே தீர்மானங்களை எடுக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. அதுமாத்திரமன்றி நாட்டைப் பொருளாதார ரீதியாக தொடர்ந்தும் முன்னேற்ற வேண்டிய கடப்பாடு சகல வேட்பாளர்கள் முன்னும் உள்ளது. இது தொடர்பிலும் முஸ்லிம் கட்சிகள் மிகவும் உறுதியான கோரிக்கைகளை வேட்பாளர்களிடம் முன்வைக்க வேண்டும்.
இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் தமது நிலைப்பாட்டை அறிவிக்க முன்னர், முஸ்லிம் சிவில் சமூக நிறுவனங்கள் முன்வந்து இக் கட்சிகளுக்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நலன்களுக்கு உத்தரவாதமளிக்கின்ற, கடந்த கால இழப்புகளுக்கு பரிகாரம் வழங்கக் கூடிய வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டும் என பரிந்துரைக்க வேண்டும். வழக்கம்போல முஸ்லிம் கட்சிகள் சமூகத்தின் வாக்குகளை அடகு வைத்து தமது நலன்களை அடைந்து கொள்வதற்கு இடமளிக்கலாகாது. மாறாக நிபந்தனைகள் பகிரங்கப்படுத்தப்பட்டு சமூகத்தின் ஒப்புதல் பெற்றப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli