இலங்கையில் உள்ள அனைத்து மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தை ஒரு முகப்படுத்தி, அதன் தராதரத்தை நிலையான ஒரு அமைப்பின் கீழ் கொண்டுவந்து மாணவர்களும் நாடும் பயன் பெறக் கூடிய வகையில் மாற்றும் நடவடிக்கைகளில் இலங்கை அரசும் குறிப்பாக கல்வி அமைச்சும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதன் முதல் கட்டமாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கேற்ப கல்வி அமைச்சின் ஆலோசனையின் அடிப்படையில் இலங்கை முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம், துறைசார் பேராசிரியர்கள், கல்விமான்கள், உலமாக்கள், பல்வேறு சமய நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட மத்ரஸா பாடத் திட்ட குழு ஒன்றை நியமித்து ஒரு பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது.
இதன் அடுத்த கட்டமாக தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை மீளாய்வு செய்யும் குழு ஒன்றை கல்வி அமைச்சு இப்போது நியமித்துள்ளது.
இக்குழுவின் தலைவராக தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், ஓய்வு நிலைப் பேராசிரியருமான, மெளலவி மருதமுனை எம்.எஸ்.எம். ஜலால்தீன் கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பின்வரும் ஆறு பேரும் ஏனைய அங்கத்தவர்கள் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மஹரகம தேசிய கல்வி நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் கலாநிதி எஸ். ஏ. டீ. சமரவீர. அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதானி, கலாநிதி மெளலவி அஹ்மத் அஸ்வர், அக்கரைப்பற்று வலய கல்விப்பணிப்பாளர் ஏ.எம். றஹ்மத்துல்லா (நளீமி), பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர், மெளலவி எம்.எல்.எம்.ஹனீபா, கிழக்கு பல்கலைக்கழக அறபு மொழித்துறை தலைவர், மெளலவி ஐ.எம். தாலிப் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், குழுவின் செயலாளராக கொழும்பு ஹமீத் அல்ஹுஸைனியா பாடசாலை அதிபர் எம். ஆர். எம். றிஸ்கி நியமிக்கப்பட்டுள்ளார்.
இக் குழுவின் முதலாவது அமர்வு இன்று கல்வி அமைச்சில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli