கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)
பிரிட்டிஷ்ஷாரின் காலனித்துவத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக இலங்கையில் உள்ள மூவின மக்களும் எவ்வித குரோதமும், பேதமுமின்றி சுதந்திரத்தைப் பெறுவதற்காக முயற்சித்து வெற்றியும் கண்டனர். இதனால் 1948 பெப்ரவரி நான்காம் நாள் இலங்கைக்கு சதந்திரம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைந்த மக்கள் இன்றுவரை தமது சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
சுதந்திரத்துக்குப் பின் பெரும்பான்மைச் சமூகத்தின் பெரும்பான்மையினரின் சிந்தனை மாற்றம் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தையும், வெறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இதனால் தமிழ் சமூகம் பெரும்பான்மைச் சமூகத்திடமிருந்து தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.
ஆரம்ப காலங்களில் சாத்வீகமாகவும், பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் தீவிரமடைந்தபோது அண்டை நாடான இந்தியாவின் உதவி தமிழ் மக்களுக்குத் தேவைப்பட்டபோதுதான் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டு வடக்கும் கிழக்கும் ஒரே இரவில் ஒன்றிணைக்கப்பட்டு கிழக்கில் 34சதவீதமாக வாழ்ந்த முஸ்லிம்கள் 17 வீதமாக்கப்பட்டனர்.
பெரும்பான்மைச் சமூகத்தினரிடமிருந்து தங்கள் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள போராடிய தமிழ் சமூகத்தில் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளைக் கொடுக்க மறுத்த போதுதான் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட வேண்டுமானால் முஸ்லிம் மக்களுக்கான தனி அலகு அல்லது தனி மாகாணத்தின் கோஷம் வலுப்பெற்றது. இச்சமயத்தில்தான் மக்கள் விடுதலை முன்னணி நீதிமன்றம் சென்று கிழக்கு தனியாகப் பிரிக்கப்பட்ட மாகாண சபையாக இயங்க வேண்டுமென்ற கோரிக்கையை வென்றெடுத்தது. இதனால் முஸ்லிம் மக்களுக்கான தனியலகு அல்லது தனி மாகாணம் என்ற சிந்தனை வலுவிழந்து கரையோர மாவட்டம் என்ற விடயம் பேசு பொருளாக மாற்றம் பெற்றது.
ஒரு காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கீழிருந்த வெருகல் முதல் பொத்துவில் வரையிலான பிரதேசங்கள் தனியாக வேறாக்கப்பட்டு அம்பாரை மாவட்டம் என்ற ஒரு மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தாலும் காலப்போக்கில் தெஹியத்தகண்டி, பதியத்தலாவை போன்ற பிரதேசங்கள் அம்பாரை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு சிங்களப் பெரும்பான்மைக்கான அத்திவாரம் இடப்பட்டதுடன் மாவட்டத்தின் சகல செயற்பாடுகளும் சிங்கள மொழியிலும், மாவட்டச் செயலாளராக இன்றுவரை சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தமிழரோ, முஸ்லிமோ வர முடியாத அளவுக்கு மேலாதிக்கம் தலைகாட்டுவதுடன் சிறுபான்மையினரான தமிழர்களினதும், முஸ்லிம்களினதும் நிலபுலன்களும், உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதுடன் நாம்தான் ஆளப்பிறந்தவர்கள் என்ற சிந்தனையிலிருந்து அரசாங்கங்கள் மாறினாலும் அவர்களது சிந்தனை மாறவில்லை. இவ்விடயத்தில் அவர்கள் மிகவும் கவனமாக காய் நகர்த்தி வருகின்றனர்.
இதனால்தான் கரையோர மாவட்டம் என்ற சிந்தனை வலுப்பெற ஆரம்பித்தது. கரையோர மாவட்டம் அமைந்தால் தமிழ்மொழி ஆட்சி மொழியாக வரும் வாய்ப்பைப் பெறும் என்ற நற்செய்தியை மறந்த தமிழ் சமூகம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக மாறி விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக எனது ஒரு கண் போனாலும் பறவாயில்லை மற்றவர்களின் இரு கண்களும் பாதிக்கப்பட்டால்தான் நான் சந்தோஷமடைவேன் என்ற கருதுகோளில்தான் தமிழ் சமூகத்தின் பலரது சிந்தனை உள்ளது. தங்களை ஆதிக்கம் செலுத்தும் வகையில் முஸ்லிம் பெரும்பான்மை அமையக்கூடாது என்ற தொனிப்பொருளில் அவர்களது சிந்தனைப் போக்கு மாற்றம் பெற்று வருகின்றது.
இதனால்தான் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருக்கும் கல்முனை நகரம் தமிழர்களுக்கென்று வேறாகப் பிரிக்கப்பட வேண்டும். நிந்தவூர் பிரதேச சபையின் கீழிருந்த காரைதீவுடன் சாய்ந்தமருதின் மாளிகைக்காடும், சம்மாந்துறையின் கீழிருந்த மாவடிப்பள்ளியும் பிரிக்கப்பட்டு காரைதீவு என்ற பிரதேசசபை உருவாக்கப்பட்டது. சம்மாந்துறை பிரதேசசபையின் கீழிருக்க மனமின்றி நாவிதன்வெளி பிரதேசசபை உருவாக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் முஸ்லிம் சமூகம் இன்னும் விழிப்படைந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு என்ற எட்டு மாவட்டங்களில் பெரும்பான்மையினர் என்று சிறுபான்மைச் சமூகம் ஆட்சிபீடம் ஏறலாம்.
இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களில் 17இல் சிங்கள சமூகமும், எட்டு மாவட்டங்களில் தமிழ் சமூகமும் அதிகாரம் செலுத்தும்போது பத்து வீத முஸ்லிம்களுக்கு ஒரு மாவட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தால் என்ன? என்ற கருத்தை நமது மாபெரும் தலைவர் அஷ்ரஃப் அவர்கள் விதைத்து அதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர அல்லாஹ் அவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கவில்லை.
இப்போதுள்ள முதலாவது சிறுபான்மைச் சமூகம் முஸ்லிம் சமூகத்திற்கு பெரும்பான்மை மாவட்டமோ, பிரதேச சபையோ ஏற்படுத்தப்படக் கூடாது என்ற குறிக்கோளில் கவனமாக செயற்பட்டு வருவதைப் பார்த்தாவது நாம் உணர்வு பெற வேண்டாமா?
முஸ்லிம் சமூகத்தை விழிப்படையச் செய்ய எந்த நடவடிக்கைகளையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளோ, புத்தி ஜீவிகளோ எந்தவித முயற்சிகளையும் செய்வதாகத் தெரியவில்லை. மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களிலும் இவ்வாறான நிறைய பிரச்சினைகள் உள்ளன.
இப்போது நமக்கு நல்லதோர் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. அதுதான் ஜனாதிபதித் தேர்தலாகும். ஜனாதிபதி வேட்பாளர்களில் பிரதானமான மூவர்களான ரணில் விக்கிரமசிங்க, ஸஜித் பிரேமதாச, அநுரகுமார திசாநாயகா ஆகிய மூவரையும் சந்தித்த தமிழ் சமூகம் தங்களுக்கு அரசியல் அமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதற்கான சம்மதத்தையும் பெற்றுள்ளார்கள். அதற்கு மேலதிகமாக தமிழ் வேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவது சம்மந்தமான முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அவர்களுக்குள்ளேயே பத்துக்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்தும் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்று சேர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமோ நமது மாபெரும் தலைவரின் வழிகாட்டலில் ஒருமித்த தலைமைத்துவத்தின் கீழ் பெரும்பாலான முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டிருந்தோம். அல்ஹம்துலில்லாஹ்.
நமது தலைமைத்துவம் எப்போது எம்மைவிட்டு மறைந்ததோ அன்றிலிருந்து நமக்குள் பிரிவுகள் தோன்ற ஆரம்பித்தது. அடுத்து வந்த தலைமைத்துவத்தின் அரவணைப்பு இன்மையாலும், சுயநலப்போக்கு மிகைத்தமையாலும் ஒன்றாக இருந்த கட்சி ஆறாகப் பிரிந்து முஸ்லிம் சமூகம் சீரழிந்துகொண்டு வருகிறது. “தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன்” என்பதற்கொப்ப பல பேருக்கு தலைமைத்துவப் பேராசை பிடித்துள்ளது. இந்த நிலைமைகளை சீர்படுத்த அல்லது சமாதானப்படுத்த தொண்டு நிறுவனங்கள் யாருமே முன்வருவதில்லை. இந்நிலை நீடித்தால் நமது சமூகம் அதல பாதாளத்தில் விழும் காலம் வெகு தூரத்திலில்லை. இதனைத் தவிர்க்க ஜம்இய்யதுல் உலமா, சூறா சபை, ஊடகவியலாளர் ஒன்றியம், பள்ளிவாசல் சமூகம், புத்தி ஜீவிகள் மற்றும் பல்கலைக்கழக சமூகம் என்பன கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வருவது காலத்தின் கட்டாயமாகும்.
அதுவரை முஸ்லிம் அரசியல் வாதிகள் காத்துக் கொண்டிருக்காது அவர்கள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைந்து நமது சமூகத்திற்கான தென்கிழக்கு மாகாணம் அல்லது மாவட்டம் ஒன்றையாவது பெற்றுக் கொள்ள பேரம் பேசும் சக்தியைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இப்போதுள்ள கள நிலவரப்படி பிரதான இரு வேட்பாளர்களுக்குப் பின்னால் ஒரு சில கட்சிகள் அணிதரள்வதாக அறியக் கிடைக்கின்றது. இவர்கள் யாரோடு கூட்டுச் சேர்ந்தால் என்ன? நமது சமூகத்தின் தேவைகளான நிர்வாக அலகு, பதவியுயர்வுகளில் பாரபட்சம், நூறாண்டுகளுக்கு மேலாக உறுதிப் பத்திரத்தை வைத்துள்ளவர்களின் காணிகள் திட்டமிட்டு அபகரித்தல், காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, கல்முனை, பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை போன்ற பிரதேசங்களில் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கான நிவாரணம், வட பகுதியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான மீள் குடியேற்றம், கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளில் காட்டப்படும் பாகுபாடு, நிர்வாக சேவைகளில் சித்தியடைந்த முஸ்லிம்களை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கைளில் ஈடுபடுதல் போன்ற எந்தக் கோரிக்கைகளையாவது அந்த வேட்பாளர்களிடம் கூறி நிவாரணம் பெற்றுத்தர பேரம்பேசி வாக்குறுதிகளைப் பெற்றீர்களா? அல்லது சுயநலமாகச் சிந்தித்து அமைச்சுப் பதவிகளை அலங்கரிக்க பேரம் பேசியுள்ளீர்களா? என்பனவற்றை சமூக்திற்கு முன் அறியத்தாருங்கள். இதுவே நீங்கள் இந்த சமூகத்திற்குச் செய்யும் பேருபகாரமாக அமையும்.
கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களே!
உங்களுக்கிடையேயுள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்று பட்டு நமது சிறுபான்மை மக்களுக்கான அடையாளமாக தென்கிழக்கு மாவட்டம் ஒன்றை உருவாக்கித்தர வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்தால் என்ன? இது சாத்தியப்படும் பட்சத்தில் இன்றுவரை உங்களில் பலரின் மீது சுமத்தப்படுமட் குற்றச்சாட்டுக்களிலிருந்து விமோசனம் பெறவும், உங்களை தங்கள் தலைமேல் சுமந்து கொண்டாடவும் மக்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கமல்லவா? நாம் அனுபவிக்கும் கஷ்டம் நமக்குத்தானே தெரியும். முயற்சித்துப் பார்க்கலாமே! சிந்தித்து செயல்படுங்கள்.
நீங்கள் விரும்பினால் உங்களை ஒரு இணக்கப்பாட்டின் கீழ் குடையின் கீழ் ஒரு பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவர நமது பிரதேசத்திலுள்ள பலர் முன்வரக் காத்திருக்கின்றனர்.
உங்களின் சாதகமான சமிக்ஞை கிடைக்குமாயின் துணிந்து இம்முயற்சியில் இறங்க ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருவீர்களா?
பொருத்தமான சந்தர்ப்பம் கைநழுவ விட்டு விடாதீர்கள். அல்லாஹ் நாடினால் நிச்சயம் நடக்கும்.- Vidivelli