( எப்.அய்னா)
பொலிஸ் மா அதிபர் பதவியில் செயற்பட தேசபந்து தென்னகோனுக்கு உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்தது. அதன்படி தேசபந்து தென்னகோனுக்கு பொலிஸ் மா அதிபராக செயற்படல், அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல், கடமைகளை முன்னெடுத்தல் ஆகியன தடுக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள 09 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் நிறைவுறும் வரை இந்த இடைக்கால தடை அமுலில் இருக்கும் என அறிவித்த உயர் நீதிமன்றம், அக்காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபர் பதவியில் பதில் கடமைகளை முன்னெடுக்க சட்டத்துக்கு உட்பட்டு பொருத்தமான ஒருவரை பரிந்துரைக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவித்தது.
அத்துடன் இந்த 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்த உயர்நீதிமன்றம் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது. அத்துடன் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை எதிர்வரும் 6 வார காலத்துக்குள் எழுத்து மூலம் சமர்ப்பிக்கவும் பிரதிவாதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவித்தது.
இளம் ஊடகவியலாளர் சங்கம், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, சட்டத்தரணி ஏ.எல்.ஆசாத் உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த 09 மனுக்களை கடந்த ஆறு நாட்களாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம் நேற்று காலை 09.30 மணிக்கு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்து,இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது.
நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட தலைமையிலான அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.
இந்த 9 மனுக்கள் தொடர்பிலும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி ஷமில் பெரேரா, ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரத்னம், ஜனாதிபதி சட்டத்தரணி விரான் கொரயா,சிரேஷ்ட சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ,சட்டத்தரணி திஸ்ஸ வேரகொட, மற்றும் சட்டத்தரணி லக்ஷான்டயஸ் ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர்.
மனுக்களின் பிரதான பிரதிவாதியான தேசபந்து தென்னகோன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா ஆஜரானதுடன் ஏனைய பிரதிவாதிகளான அரசியலமைப்பு பேரவையின் நான்கு உறுப்பினர்கள் சார்பில் சட்டத்தரணி எர்மிசா டீகல் மற்றும் சட்டத்தரணி பினுர குணரத்ன ஆகியோரும் அரசியலமைப்பு பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளேயும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
காலி முகத்திடல் போராட்டக்களத்துக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்தியமை தொடர்பான குற்றவியல் வழக்கில் சந்தேக நபராக பெயரிடுமாறு சட்டமா அதிபரால் விசாரணையாளர்களுக்கு ஆலோசனையளிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக தொடர்ந்து பதவியில் இருக்க வேண்டும் என்று சட்டமா அதிபர் திணைக்களம் தற்போது குறிப்பிடுவது ஆச்சரியத்துக்குரியது என இந்த மனுக்கள் மீதான பரிசீலனையின் போது, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மன்றில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அவரது நியமனம் அரசியலமைப்புக்கு இசைவானதல்ல எனவும்,சபாநாயகர் ஜனாதிபதிக்கு குறித்த தீர்மானத்தை முறையற்ற வகையில் அறிவித்தார் எனவும் மற்றொரு மனுதாரருக்காக ஆஜராகிய சட்டத்தரணி வெரகொட சுட்டிக்காட்டினார்.
அரசியமைப்பு பேரவை அனுமதி வழங்காத நிலையில் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக ஜனாதிபதி நியமித்துள்ளதாகவும் இதனூடாக ஜனாதிபதி மக்களின் நம்பிக்கையை மீறியுள்ளார் எனவும் இதன்போது சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ மன்றில் சுட்டிக்காட்டியிருந்த்தார்.
இவ்வாறான நிலையிலேயே, நேற்று இந்த 9 மனுக்களையும் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்த உயர் நீதிமன்றம், மனுதாரர்கள் கோரிய இடைக்கால தடை உத்தரவை வழங்கி, தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக செயற்பட இடைக்கால தடை விதித்தது.- Vidivelli