கொவிட் 19 ஜனாஸா எரிப்பு விவகாரம்: மன்னிப்பு கோரி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முடியாது

0 143
  • குற்றவாளிகள் யார் என தெளிவுபடுத்த வேண்டும்
  • சம்பந்தப்பட்டோர் தண்டிக்கப்படல் வேண்டும்
  • முஸ்லிம்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும்
  • உரியமுறையில் நட்டஈடும் வழங்க வேண்டும்
  • குற்றவாளிகளை பாதுகாக்க திரைப்படமும் தயாரிப்பு

(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
கொவிட் தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்லிம் மக்­களை கட்­டாயத் தகனம் செய்­த­மைக்கு மன்­னிப்புக் கோரி அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்து தப்­பித்­துக்­கொள்ள அர­சாங்கம் முயற்­சிப்­ப­தாக எதிர்க்­கட்­சிகள் சாடி­யுள்­ளன.
அத்­துடன், அந்த பல­வந்த தகனம் என்­கின்ற அர­சியல் தீர்­மா­னத்தை எடுத்­தவர் யார் என்­பதை வெளிப்­ப­டுத்தி அவர்­க­ளுக்கு உரிய தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்றும் எதிர்க்­கட்­சி­யினர் வலி­யு­றுத்­தினர்.

மேலும், கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­தோரை எரித்து துன்­பு­றுத்­தி­ய­மையால் பாதிக்­கப்­பட்ட அவர்­களின் குடும்­பத்­தா­ருக்கு உரி­ய­மு­றையில் நஷ்­ட­ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்­தனர்.

கொவிட் தொற்­றுக்­குள்­ளாகி மர­ணித்த முஸ்லிம் சமூ­கத்தின் சட­லங்­களை எரிப்­ப­தற்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கைக்கு மன்­னிப்பு கோரு­வ­தற்கு அர­சாங்கம் எடுத்­தி­ருக்கும் தீர்­மானம் தொடர்பில் நேற்று பாரா­ளு­மன்­றத்தில் விசேட கூற்­றொன்றை முன்­வைத்து எதிர்க்­கட்சித் தலைவர் முதலில் உரை­யாற்­றினார்.

எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ
கொவிட் தொற்றில் மர­ணித்த முஸ்லிம் பிர­ஜை­களின் சட­லங்­களை தகனம் செய்­த­மைக்கு மன்­னிப்பு கோரு­வ­தற்கு அர­சாங்கம் அமைச்­ச­ரவை தீர்­மானம் எடுத்­தி­ருப்­பதை வர­வேற்கிறேன். கோத்­தா­பய ராஜபக்ஷ் அர­சாங்­கத்தில் முஸ்லிம் மக்­களின் மத கலா­சா­ரத்தை சீர­ழித்து, இன­வாத அடிப்­ப­டையில் முஸ்லிம் மக்­களை இலக்­கு­வைத்தே இந்த தீர்­மா­னத்தை அன்று அமைச்­ச­ர­வையில் எடுத்­தனர். இதற்கு தற்­போது அமைச்­ச­ர­வையில் இருக்கும் சிலர் ஆத­ர­வ­ளித்­தனர். என்­றாலும் இந்த நட­வ­டிக்­கையை விட்டு விடு­வ­தற்­காக தற்­போ­தா­வது இடம்­பெற்ற சம்­ப­வத்­துக்­காக மன்னிப்­புக்­கோர எடுத்த தீர்­மா­னத்தை மதிக்­கிறேன்.

அதே­நேரம் கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­களை எரிப்­ப­தற்கு யாரு­டைய அறிக்­கையின் அடிப்­ப­டையில் இந்த பிழை­யான தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது? இதற்கு ஆலோ­சனை வழங்­கி­யது யார்? வழங்­கிய ஆலோ­ச­னையை ஜனா­தி­பதி உள்­ளிட்ட அர­சியல் அதி­கா­ரிகள் ஏன் ஆராய்ந்து பார்க்­க­வில்லை? உலக சுகா­தார நிறு­வ­னத்தின் வழி­காட்­டலை புறந்­தள்­ளி­விட்டு, ஏன் இந்த அநீ­தியை முஸ்லிம் சமூ­கத்­துக்கு செய்­தீர்கள்.

அத்­துடன் தற்­போது கொவிட் சடலம் எரிப்பு தொடர்பில் திரைப்­படம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இத­னுடன் தொடர்­பு­பட்ட அர­சி­யல்­வா­தி­களை பாது­காப்­ப­தற்கே இதனை செய்­தி­ருக்­கி­றார்கள். இதற்­காக வெட்­கப்­ப­ட­வேண்டும்.
அதனால் அர­சாங்கம் மன்­னிப்­பு­க்கோரி மாத்­திரம் இந்த விட­யத்தில் இருந்து தப்­பிக்க முடி­யாது. இந்த தவ­றான ஆலோ­சனை வழங்­கி­ய­வர்­களின் பெயர்­களை சபைக்கு வெளிப்­ப­டுத்த வேண்டும். அதே­போன்று கொவிட் தொற்­றுக்­குள்­ளாகி தகனம் செய்­யப்­பட்ட முஸ்லிம் நபர்­களின் குடும்­பங்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­க­வேண்டும் என்றார்.

ரவூப் ஹக்கீம்
கொவிட்டில் மர­ணித்து தகனம் செய்­யப்­பட்­ட­வர்­களின் பெயர் பட்­டி­யலை அர­சாங்கம் தொடர்ந்தும் மறைக்­காமல் அதனை வெளிப்­ப­டுத்த வேண்டும். எல்­லா­வற்­றையும் செய்­து­விட்டு மன்­னிப்பு மாத்­திரம் கோரி முடித்­துக்­கொள்ள முடி­யாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மேலும், கொவிட் தொற்றில் மர­ணித்­த­வர்­கள் தகனம் செய்­ய­ப்பட்ட விடயம் தொடர்பில் பல தட­வைகள் இந்த சபையில் கேள்வி எழுப்பி இருந்தேன். கொவிட் தக­னத்­துக்­குள்­ளாக்­கப்­பட்ட முஸ்லிம் பிர­ஜை­களின் பெயர் பட்­டி­யலை வழங்­கு­மாறு முன்னாள் சுகா­தார அமைச்­ச­ரிடம் இந்த சபையில் கேட்டேன். அதற்கு அவர், அவ்­வா­றான எந்த தக­வலும் இல்லை என அவர் தெரி­வித்­தி­ருந்தார். இது உண்­மையை மறைப்­ப­தற்கு செய்யும் நட­வ­டிக்கை. அதனால் தக­னத்­துக்­குள்­ளா­ன­வர்­களின் பெயர் பட்­டி­யலை அர­சாங்கம் தர­வேண்டும்.

அர­சாங்கம் எல்­லா­வற்­றையும் செய்­து­விட்டு முஸ்லிம் சமூ­கத்­திடம் மன்­னிப்பு கோரி­விட்டு இதனை முடித்­துக்­கொள்ள முடி­யாது. இதற்கு கார­ண­மா­ன­வர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும். அதே­போன்று பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நட்­ட­ஈடு வழங்­க­வேண்டும். இதற்கு கார­ண­மா­ன­வர்­களின் பெயர் பட்­டி­யலை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்றார்.

முஜிபுர் ரஹ்மான்
தகனம் செய்­த­மைக்கு மன்­னிப்பு கோர அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதன் மூலம் இந்த நட­வ­டிக்கை பல­வந்­த­மாக செய்­யப்­பட்­டது என்­பது உறு­தி­யாகி இருக்­கி­றது என்று கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

மேலும், இது திட்­ட­மிட்டு செய்­யப்­பட்­டுள்­ளது என்­பதை அர­சாங்கம் தற்­போது ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. அதனால் இதனை யார் செய்­தார்கள் என்­பதை அர­சாங்கம் தெரி­விக்க வேண்டும். கொவிட் மரணம் தொடர்பில் உலக சுகா­தார அமைப்பு சுகா­தார வழி­காட்டல் ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தது. ஆனால் அர­சாங்கம் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. அதற்கு பதி­லாக வைத்­தியர் சன்ன பெரேரா தலை­மை­யி­லான குழுவின் அறிக்­கையை மாத்­தி­ரமே பின்­பற்றி வந்­தது. இதுவே, முன்னாள் ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு தேவை­யான தீர்­மா­ன­மா­கவும் இருந்­துள்­ளது.

இதற்கு எதி­ராக அழுத்­தங்கள் எழுந்­தது. இதன்­பின்னர், பேரா­சி­ரியர் ஜெனிபர் பெரேரா தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டது. அதில் பல நிபு­ணர்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டனர். அவர்கள்,நிபந்­த­னை­க­ளையும் வழி­காட்­டல்­க­ளையும் வழங்கி அடக்கம் செய்­வ­தற்கு அனு­மதி வழங்க வேண்டும் என குறிப்­பிட்­டனர். அதன் அறிக்­கைகள் ஆறு மாதங்­க­ளாக வெளி­யி­டப்­ப­டா­ம­லேயே இருந்­தது. இது குறித்து நாம் பாரா­ளு­மன்றில் பல­முறை கேள்வி எழுப்­பி­யி­ருந்தோம்.

பின்னர் கொவிட் தொற்றால் உயி­ரி­ழந்­தோரின் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்­வ­தற்கு இட­ம­ளிக்­கு­மா­று­ இஸ்­லா­மிய நாடு­க­ளி­லி­ருந்து ஜனா­தி­பதி கோத்­தா­ப­ய­வுக்கு கோரிக்கை விடுக்­கப்­பட்­டது. அத­னையும் புறக்­க­ணித்தே செயற்­பட்­டனர். பின்னர் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கான் இந்த நாட்­டுக்கு வருகை தந்­த­போது அவரும் இது­கு­றித்து கோரிக்கை விடுத்­தி­ருந்தார்.

என்­றாலும் இதற்கு கடும் எதிர்ப்பு வர ஆரம்­பித்த பின்னர், சர்­வ­தே­சத்தின் அழுத்­தத்­துக்கு மத்­தியில் அடக்கம் செய்ய அனு­மதி வழங்­கி­னார்கள். மாறாக விஞ்­ஞான ஆய்­வு­களின் மூலம் இந்த அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை. அதனால் அடக்கம் செய்­வ­தற்கு உலக சுகா­தார அமைப்பின் அனு­மதி இருந்தும் அதற்கு அனு­மதி வழங்­காமல் தகனம் செய்ய வேண்டும் என தெரி­வித்­த­வர்கள் யார் என்­பதை அர­சாங்கம் தெரி­விக்க வேண்டும். இவ­ர்கள்தான் இதற்கு பொறுப்பு சொல்ல வேண்டும் என்றார்.

எஸ்.எம்.மரிக்கார்
அர­சாங்­கத்தின் மன்­னிப்பு கோரும் தீர்­மானம் ராஜ­பக்ஷ்­வி­னரை பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்கை. தகனம் செய்ய எடுக்­கப்­பட்ட தீர்­மானம் அர­சியல் தீர்­மா­ன­மாகும். அதனால் இதற்கு கார­ண­மா­ன­வர்கள் யார். அவர்­களை இனம் கண்டு, வெளிப்­ப­டுத்த வேண்டும். அத்­துடன் இதனால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு எடுக்­கப்­போகும் நட­வ­டிக்கை என்ன என்­பதை அர­சாங்கம் தெரி­விக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எம். மரிக்கார் தெரி­வித்தார்.
அத்­துடன், படம் தயா­ரித்­த­வர்கள் ராஜ­பக்­சாக்­களை காப்­பாற்ற முயற்­சிக்­கின்­றனர். இது­வொரு தெளி­வான அர­சியல் தீர்­மா­ன­மாகும். இது குறித்து உரிய விசா­ர­ணைகள் நடத்­தப்­பட வேண்டும்.

ஏ.எல்.எம்.அதா­வுல்லா
கொவிட் மர­ணங்­களை எரித்­தமை தொடர்பில் அமைச்­ச­ரவை மன்­னிப்பு கோரு­வ­தற்கு எடுத்த தீர்­மா­னத்­துக்கு ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு எனது நன்­றியை தெரி­வித்­துக்­கொள்­கிறேன். ஆனால் பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­யாமல் கொவிட் மர­ணங்­களை எரிப்­ப­தற்கு முன்னாள் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த பவித்ரா வன்­னி­யா­ரச்சி வர்த்­த­மானி அறி­விப்­பொன்றை வெளி­யிட்­டிருந்தார். இது பாரா­ளு­மன்ற சிறப்­பு­ரி­மையை மீறும் நட­வ­டிக்கை. இது தொடர்­பாக நான் அன்று கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்தேன் என திகா­ம­டுல்ல மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் தேசிய காங்­கிரஸ் தலை­வ­ரு­மான ஏ.எல்.எம்.அதா­வுல்லாஹ் தெரி­வித்தார்.

மேலும், மன்­னிப்­புடன் இதனை முடிக்­காமல், பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­யாமல் வர்த்­த­மானி அறி­விப்பு வெளி­யிட்­டமை தொடர்பில் அரசாங்கம் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கி­றது என்ற விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அத்­துடன் இந்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக யாருக்கு தண்­டனை கொடுக்­கப்­போ­கிறோம் என்­பதை இந்த பாரா­ளு­மன்றம் தீர்­மா­னிக்க வேண்டும் என்றார்.

லக்ஸ்மன் கிரி­யெல்ல
பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நிவா­ர­ண­ம­ளிப்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது என எதிர்க்­கட்­சி­களின் பிர­த­ம­ கொ­ர­டா­வான லக்ஸ்மன் கிரி­யெல்ல குறிப்­பிட்டார்.
மேலும், அவர்­க­ளுக்கு நஷ்­ட­யீ­டு­வ­ழங்­கு­வது மிகவும் அவ­சி­ய­மா­ன­தாகும். இந்த பிரச்­சி­னையை நிறை­வுக்கு கொண்­டு­வர வேண்டும். இனி­யொ­ரு­போதும் இவ்­வா­றான குற்­றங்கள் இடம்­பெ­றா­தி­ருப்­ப­தற்கு இது வழி­வ­குக்கும் என்றார்.

இம்ரான் மகரூப்
இந்த அமைச்­ச­ரவை தீர்­மா­ன­மா­னது வெறும் கண்­து­டைப்­பாகும். இன்று மன்னிப்பு கோரி அமைச்­ச­ரவை பத்­திரம் சமர்­ப்பித்­த­வர்கள் அன்றும் அர­சாங்­கத்தின் பங்­கு­தா­ரர்­கள்தான். தேர்தல் நெருங்­கும்­போது மக்­களை ஏமாற்ற இப்­ப­டி­யான பத்­தி­ரங்­களை சமர்ப்­பிக்க வேண்டாம் என திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மகரூப் தெரி­வித்தார்.

கொவிட் – 19 தொற்­றுக்­குள்­ளா­கிய 276 முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக தகனம் செய்­யப்­பட்­டது. இதன்­போது, முஸ்­லிம்கள் துடித்­தார்கள், கண்ணீர் சிந்­தி­னார்கள், கதறி அழு­தார்கள், பலரும் மன உளைச்­ச­லுக்கு ஆளா­னார்கள். அர­சாங்­கத்தின் இந்த இழி செயலை நாம் அன்றும் கடு­மை­யாக கண்­டித்தோம்.

கோட்­ட­பாய அர­சாங்கம் வேண்­டு­மென்றே இந்த பல­வந்த ஜனாஸா எரிப்பு நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது. கண்­து­டைப்­புக்கு சில கமி­ட்டி­களை அமைத்து தப்­பிக்க முயற்­சித்­தனர்.

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியும், அமைச்­ச­ர­வையும் இந்த கமி­ட்டி­களின் பரிந்­து­ரையின் படியே ஜனா­ஸாக்­களை எரித்த­தாக கூறி­யது. இது முற்­றிலும் பொய்­யா­னது.

ராஜ­பக்­சாக்­க­ளி­னதும் கடும்­போக்­கு­வாத சக்­தி­க­ளி­னதும் முஸ்லிம் வெறுப்பு செயற்­பாட்டின் ஓர் அங்­க­மா­கத்தான் இந்த ஜனாஸா எரிப்பு இருக்­கி­றது. முஸ்லிம் மக்­களை கஷ்­டப்­ப­டுத்தி அதில் இன்பம் காண்­ப­தற்­கா­கவே இந்த அநி­யா­யத்தை செய்­தனர்.

இந்த துய­ரி­லி­ருந்து மக்கள் இன்னும் மீள­வில்லை. இப்­போது மன்­னிப்பு என்­ற ­பேரில் பூச்­சாண்டி காட்டி அவர்­களை ஏமாற்ற முயற்­சிக்க வேண்டாம்.
பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் சமூகம் மிகத் தெளி­வாக்­கத்தான் இருக்­கி­றது. நீங்கள் நாட்­டில் மூளை முடிச்சு­க­ளி­லெல்லாம் வாழும் முஸ்லிம் மக்­க­ளிடம் வீடு வீடாக சென்று காலில் விழுந்து மன்­றாடி மன்­ணிப்புக் கேட்­டாலும் அவர்­களின் மன வேத­னைக்கு ஈடு செய்ய முடி­யாது.

சிங்கள மக்­களின் பேரா­த­ரவில் ஆட்­சி­ய­மைத்த ஆண­வத்­தி­லேயே ஜனா­ஸாக்­களை எரித்து முஸ்லிம் மக்­களை துன்­பு­றுத்­தி­னீர்கள்.

இந்த அசிங்­க­மான செயற்­பாட்டை சிங்­கள மக்­களே வெறுத்­தனர். நாட்டின் பொரு­ளா­தார வீழ்ச்­சிக்கும் இந்த செயற்­பா­டு­களும் கார­ண­மாக இருந்­ததை சிங்­கள மக்கள் புரிந்­து­கொண்­டனர். இத­னால்தான், கோட்­டாவை அர­கலய போராட்டம் மூல­மாக சிங்­கள மக்­களே விரட்­டி­ய­டித்­தனர்.
இன்று மன்னிப்பு என்ற பெயரில் சிங்­கள மக்­க­ளையும் சிறு­பான்மை மக்­க­ளையும் ஏமாற்ற நினைக்­கி­றார்கள்.

இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்தை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அப்­பட்­ட­மாக அடிப்­படை உரிமை மீறப்­பட்­டுள்­ளது. எனவே, பாதிக்­கப்­பட்ட முஸ்லிம் குடும்­பங்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்டும். அத்­தோடு, இந்த அநி­யா­யத்­திற்கு நீதி வழங்­கப்­பட வேண்டும் என்றார்.

சபை முதல்வர் பதில்
கொவிட் 19 தாக்­கு­தலால் உயி­ரி­ழந்த மக்­களை தகனம் செய்­த­வர்­க­ளிடம் மன்­னிப்பை கோரு­வ­தற்கு அப்பால் அவர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­குதல் மற்றும் விடயம் குறித்த விசா­ரணை நடத்தி முஸ்லிம் மக்­க­ளுக்கு உரிய தீர்­வொன்றை வழங்­குவோம் என எதிர்க்­கட்­சி­யி­ன­ருக்கு சபை முதல்வர் சுசில் பிரே­ம­ஜ­யந்த பதி­ல­ளித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் எரிக்­கப்­பட்­டமை குறித்து அமைச்­ச­ரவை தீர்­மானம் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இது குறித்து எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான், ரவூப் ஹக்கீம், எஸ்.எம்.மரிக்கார் போன்றோர் தெளி­வு­ப­டுத்­து­மாறு கூறி­யி­ருந்­தனர்.
அத்­துடன், அன்று அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள் இதற்கு கை உயர்த்­தி­ய­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்­தனர். உண்­மையில் அன்று நான் அமைச்­ச­ர­வையில் இருக்­க­வில்லை.

கோட்­டாவின் அமைச்­ச­ர­வையில் இருந்­த­வர்கள் தற்­போது ஆளும் கட்­சி­யிலும் இருக்­கின்­றனர், எதிர்க்­கட்­சி­யிலும் இருக்­கின்­றனர்.
எனவே, உங்கள் தரப்பில் உள்­ள­வர்­க­ளிடம் ஏன் அன்று இதற்கு கை உயர்த்­தி­னீ­ர்கள் என்று கேளுங்கள், எங்­க­ளு­டைய தரப்­பி­லுள்­ள­வர்­க­ளி­டமும் நான் கேட்­கிறேன்.

அப்­போது உலக சுகா­தார ஸ்தாப­னத்தில் வழி­காட்­டல்­களே பின்­பற்­றி­யி­ருக்க வேண்டும் என்­ப­துதான் எனது தனிப்­பட்ட நிலைப்­பா­டா­கவும் இருந்­தது.
ஏன் இதனை செய்­தனர், மன்­னிப்பு கோர­லுக்கு பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன தீர்வு வழங்­கு­வது என்­பது தொடர்பில் அமைச்­ச­ர­வையின் கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ருவேன். அத்துடன், சுகாதார அமைச்சு மற்றும் இதனுடன் தொடர்புடைய ஏனைய அமைச்சுகளிடமும் இதனை முன்வைத்து அறிக்கையொன்றை தருகிறேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.