அனீக்
“நாளைய ஜுமுஆ குத்பாவில் பலஸ்தீன் மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹு தஆலாவிடம் பிரார்த்திக்குமாறு சகல கதீப்மார்களையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கிறது.”
கடந்த ஆறு மாத காலத்திற்கு மேலாக ஒவ்வொரு வியாழக்கிழமையும் சமூக ஊடகங்களில் காணக்கிடைக்கும் வேண்டுகோள் இது! கடந்த ஒக்டோபர் மாதத்தில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு நாடுகளின் முஸ்லிமல்லாத நிறுவனங்களும், தனிநபர்களும் மனிதப் பேரவலத்தை நிறுத்துமாறும், மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் தமது அரசுகளையும், ஐக்கிய நாடுகள் சபையையும் கோருவதோடு நிறுத்தி விடாது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு உதவும் வர்த்தக நாமங்களைக் கொண்ட வியாபாரப் பொருட்களையும் பகிஷ்கரிக்குமாறும் அழைப்பு விடுத்த வண்ணமிருக்கின்றனர்.
ஆனால், இலங்கை முஸ்லிம்களை வழிநடத்தும் ஜம்இய்யதுல் உலமாவோ வெறுமனே குனூத் நாஸிலாவோடும், உலக அமைதிக்கான துஆவோடும் தனது கடமையைச் சுருக்கிவிட்டது கவலைக்குரியது.
எது தேவை?
“ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்துகொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.” (புகாரி 6011) என இறைத் தூதர் உலக முஸ்லிம்களின் ஒற்றுமையை வலியுறுத்தி அதன் பிரதிபலிப்பை அடிக்கோடிட்டு காட்டியிருக்கிறார்கள். ஆனால், வெறுமனே குனூத் நாஸிலாவில் ‘பலஸ்தீனத்தை யூதர்களிடமிருந்து பாதுகாப்பாயாக! காஸாவை பாதுகாப்பாயாக!’ என இறைஞ்சுவதாலும், உலக அமைதிக்காக குத்பாவில் துஆ கேட்பதாலும் இந்த ஓருடல் -ஓருள்ளம் என்ற நிலை ஏற்படாது. அரபு மொழி பரிச்சயமில்லாதவர்கள் வெறுமனே ‘ஆமீன்’ கூறுவார்களேயொழிய பலஸ்தீனின் யதார்த்த நிலை மற்றும் தமது கடப்பாடு என்னவென்பதை உணர மாட்டார்கள்.
சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு தெவட்டகஹ பள்ளிவாயலுக்கு முன்னால் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து இஸ்ரேலிய அடக்குமுறைக்கெதிரான ஆர்ப்பாட்டமொன்று சமூக செயற்பாட்டாளர்களால் ஏற்பாடாகியிருந்தது. ஆனாலும் அதனைத் தொடர்ந்தான செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித செய்திகளையும் காணக்கிடைக்கவில்லை. இவ்வாறு வெறுமனே கூடினோம், ஆக்ரோஷமாக கோசங்கள் முழங்கினோம், கலைந்தோம் என்றில்லாமல் முறையாகக் கட்டமைக்கப்பட்ட விழிப்பூட்டல் மற்றும் வழிகாட்டல்களையே பலஸ்தீன் விடயத்தில் இலங்கை முஸ்லிம் சமூகம் வேண்டிநிற்கிறது.
பலஸ்தீன் பிரச்சினையின் ஆரம்பம், 1948க்கு முன்னரான அதன் நிலை பற்றிய அறிவூட்டல் இலங்கை முஸ்லிம்களுக்கு சென்றடைய வேண்டும். இதற்கான முன்னெடுப்பை அல்லது முன்னெடுப்புக்கான ஆதரவை ஜம்இய்யதுல் உலமா மேற்கொள்ள வேண்டும். இது சமூக ஊடகங்கள் மூலமாகவோ அல்லது உள்ளூர் மயப்படுத்தப்பட்ட பள்ளிவாசல் பிரச்சாரங்கள் மூலமாகவோ இடம்பெறலாம். குறிப்பாக இமாம்களும் முஅத்தின்களும் அறிவூட்டப்பட வேண்டும். ஏனெனில், பலஸ்தீன் வெறுமனே முஸ்லிம்கள் மாத்திரம் வாழ்ந்த பூமியல்ல. கிறிஸ்தவர்களும், யூதர்களும் முஸ்லிம்களோடு இரண்டறக் கலந்த ஒரு நாடு. இஸ்ரேல் எனும் தேசத்தை நிறுவுவதன் ஒரு பகுதியாக ஸியோனிச சிந்தனை கொண்டவர்களால் இவ்ஒற்றுமை சீர்குலைக்கப்பட்டது. குனூத் நாஸிலாவில் யூதர்களிடமிருந்து பலஸ்தீனைக் காப்பாற்றுவாயாக!’ என நாம் கேட்பது ஒரு விதத்தில் அவர்களை அவர்களது சொந்த பூமியில் இருந்து விரட்டும் படுபாதக செயல் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் பல்வேறு தரப்பினரும் இஸ்ரேலிய அடக்குமுறைக்கெதிரான தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர். இவ்வாறு பிற மதத்தவர்கள் அடக்குமுறைக்கெதிராக நிகழ்வுகளை நடாத்தும் போது இலங்கை முஸ்லிம்களை வழிகாட்டும் அமைப்பு என்ற ரீதியில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பங்கேற்று இஸ்லாம் காட்டித்தந்திருக்கும் சகவாழ்வு, மனித நேயம், அடக்குமுறைக்கு எதிரான நிலைப்பாடு மற்றும் ஒற்றுமை தொடர்பில் விளக்கமளிப்பது பொருமத்தமானதாயிருக்கும். உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகளோடு இணைந்து போர் நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்காக அழைப்பு விடுப்பதிலும் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது.
எல்லாவற்றிற்கும் மேலாக பலஸ்தீன் மற்றும் இதர நாடுகளில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் அடக்குமுறைகள், ஆக்கிரமிப்புக்களின் போது ஒரு முஸ்லிமாக நாம் எவ்வாறு எதிர்வினையாற்ற வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டலையும், ஒரே உம்மத்தாக உணர்வது என்பதன் அர்த்தம் என்ன அது எவ்வாறு எமது ஈமானை அதிகரிக்கும் என்பது பற்றியும் விழிப்பூட்டுவதும் அகில ஜம்இய்யதுல் உலமாவின் கடமையாகும்.
ஆயிரம் வணக்கவாளிகளை விட ஓர் அறிவாளி ஷைத்தானுக்கு எதிராக பலம்பொருந்தியவராவார்! எமது வணக்கவாளிகளை அறிவூட்டி அவர்களை வலுவூட்டுவோம்.- Vidivelli