இலங்கை வக்பு நிதியத்தில் 8 கோடி ரூபா இருப்பு!

0 146

றிப்தி அலி

வக்பு நிதியம் என்று அழைக்­கப்­படும் முஸ்லிம் தர்ம நிதி­யத்தில் தற்­போது சுமார் 8 கோடி ரூபா இருப்பிலுள்ள விடயம் தக­வ­ல­றியும் கோரிக்­கையின் ஊடாக வெளி­யா­கி­யுள்­ளது.

இலங்கை வங்­கியில் நடை­முறை மற்றும் சேமிப்பு என 2 வங்கிக் கணக்­கு­களை இந்த நிதியம் பேணி வரு­வ­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­விக்­கின்­றது.

இதற்­க­மைய கடந்த ஜூன் 30 ஆம் திகதி இதன் நடை­முறைக் கணக்கில் 10 இலட்­சத்து 70 ஆயி­ரத்து 526 ரூபா மற்றும் 36 சதமும் முதா­ரபா சேமிப்புக் கணக்கில் 8 கோடி 18 இலட்­சத்து 69 ஆயி­ரத்து 898 ரூபா மற்றும் 69 சதமும் மிகு­தி­யா­க­வுள்­ளது.

இந்­நி­ய­தி­யத்தின் கணக்­க­றிக்­கைகள் வரு­டாந்தம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கூறு­கின்ற போதிலும், கடந்த 2015ஆம் ஆண்­டி­லி­ருந்து 8 வரு­டங்­க­ளாக இதன் கணக்­க­றிக்­கைகள் கணக்­காய்வு செய்­யப்­ப­டாத விட­யமும் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது.

அத்­துடன் குறித்த நிதி­யத்­திற்கு கிடைக்கப் பெறும் நன்­கொ­டையில் பெரும்­பா­லான நிதித் தொகை இது­வரை செல­வ­ளிக்­கப்­ப­டாமல் வங்­கியில் சேமித்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

தக­வ­ல­றியும் கோரிக்­கைக்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் உதவிப் பணிப்­பாளர் என். நிலோ­ப­ரினால் கடந்த 23 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை வழங்­கப்­பட்ட பதிலின் ஊடா­கவே மேற்­படி விட­யங்கள் தெரி­ய­வந்­தன.

1982 ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க திருத்தச் சட்டம் மற்றும் 1962 ஆம் ஆண்டின் 21ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஆகி­ய­வற்றின் ஊடாக திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட 1956ஆம் ஆண்டின் 51ஆம் இலக்க முஸ்லிம் பள்­ளி­வா­சல்கள் தரும நம்­பிக்கைப் பொறுப்­புக்கள் அல்­லது வக்­புகள் சட்­டத்தின் ஊடா­கவே இந்த நிதியம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிதியம் உரு­வாக்­கப்­பட்ட திக­தி­யினை மேற்­படி சட்­டத்தின் ஊடாக அறிந்­து­கொள்ள முடியும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் கூறு­கின்ற போதிலும், அது தொடர்­பி­லான எந்தத் தக­வலும் சட்­டத்தில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

 

இதே­வேளை, சபை­யொன்­றினால் நிர்­வ­கிக்­கப்­படும் இந்த நிதி­யத்­தினை முகா­மைத்­துவம் செய்யும் பொறுப்பு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்­கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பா­ள­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

பள்­ளி­வாசல், முஸ்லிம் தரும நம்­பிக்கைப் பொறுப்­புக்கள் ஆகி­ய­வற்றின் வரு­டாந்த நிகர வரு­மா­னத்தின் 6 சத­வீ­தமும், முஸ்லிம் சியா­ரங்­களின் வரு­டாந்த நிகர வரு­மா­னத்தின் 10 சத­வீ­தமும் நன்­கொடை என்ற அடிப்­ப­டையில் இந்த நிதி­யத்­திற்கு வழங்­கப்­பட வேண்டும்.

பள்­ளி­வாசல் கட்­டி­டங்­களின் பரா­ம­ரிப்பு மற்றும் மறு­சீ­ர­மைப்பு, முஸ்­லிம்கள் அல்­லது ஏனைய பிரி­வி­னரின் வறு­மைக்­கான நிவா­ரணம், முஸ்­லிம்கள் அல்­லது ஏனைய பிரி­வி­னரின் கல்வி முன்­னேற்றம், பொது­வாக இஸ்­லாத்தின் முன்­னேற்றம், முஸ்­லிம்கள் அல்லது ஏனைய பிரிவினரின் வேறு நன்மை பயக்கும் நோக்கங்கள், நிதியத்தின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளுக்கு ஏற்படும் செலவுகளுக்கான கொடுப்பனவு ஆகிய 6 பிரிவுகளின் கீழ் மாத்திரமே இந்த நிதியத்திலுள்ள பணத்தினை செலவு செய்ய முடியும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.