மன்னிப்புக் கோரினால் மாத்திரம் போதுமா?

0 167

கொவிட் 19 தொற்­றினால் உயி­ரி­ழந்த முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்­களை எரித்­த­மைக்­காக மன்­னிப்புக் கோரும் தீர்­மா­னத்­திற்கு அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ர­ம­ளித்­துள்ள விவ­காரம் தற்­போது தேசிய அர­சி­யலில் மிகுந்த கவ­ன­யீர்ப்பைப் பெற்­றுள்­ளது.

முதன் முறை­யாக அர­சாங்கம் எத்­தனை முஸ்­லிம்­களின் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டன என்ற உத்­தி­யோ­க­பூர்வ எண்­ணிக்­கை­யையும் வெளி­யிட்­டுள்­ளது. இதற்­க­மைய மொத்­த­மாக 276 ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்­டுள்­ளன. இது ஏறத்­தாள உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்­கைக்குச் சம­னா­ன­தாகும்.

நீர்­வ­ழங்கல் வடி­கா­ல­மைப்பு அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இரண்டு வெவ்­வே­றான ஆய்­வு­களில் கண்­ட­றி­யப்­பட்­ட­தற்­க­மை­வா­கவே நிலத்­தடி நீர் மூலம் கொவிட் வைரஸ் பர­வாது என்ற உண்­மையை இலங்கை அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக நிறு­வி­யுள்­ளது. அதற்­க­மை­வா­கவே தற்­போது கட்­டா­ய­மாக தகனம் செய்­யப்­பட்டமைக்காக முஸ்­லிம்­க­ளிடம் மன்­னிப்பும் கோரி­யுள்­ளது.

தவறை உணர்ந்து மன்­னிப்புக் கோரு­வது வர­வேற்­கத்­தக்க விடயம் என்ற போதிலும் இங்கு இடம்­பெற்­றி­ருப்­பது தவறு அல்ல. மாறாக வேண்­டு­மென்றே முஸ்­லிம்­களைப் பழி தீர்க்க எடுக்­கப்­பட்ட தீர்­மா­னமே கட்­டாய தகனக் கொள்­கை­ என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. அந்த வகையில் இத்­தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்கு கார­ண­மாகவிருந்த நிபுணர் குழு இது விட­யத்தில் எவ்­வாறு பொறுப்­புக்­கூ­ற­லுக்கு உள்­ளாக்­கப்­படும் என்ற கேள்­விக்கு அர­சாங்கம் பதில் தர வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

அந்த வகையில் மன்­னிப்­புக்­கோ­ரு­வ­து­டனும் புதிய சட்­டத்தை இயற்­று­வதன் மூலமும் இக் கொடூர செய­லுக்குப் பின்­ன­ணியின் இருந்­த­வர்கள் தப்­பித்­து­வி­ட­மு­டி­யாது. மாறாக அவர்­க­ளது விப­ரங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்டு அவர்­க­ளுக்கு எதி­ராக குற்­ற­வியல் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என்­பதே ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தி­னதும் கட்­டாய தகனக் கொள்­கைக்கு எதி­ராகப் போரா­டி­ய­வர்­க­ளி­னதும் கோரிக்­கை­யாகும்.

மன்­னிப்­புக்கு அப்பால் சில சம­யங்­களில் நஷ்­ட­யீடு வழங்கி விட­யத்­திற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கவும் அர­சாங்கம் முனை­யலாம். அதற்கும் முஸ்லிம் சமூகம் இணங்­க­லா­காது. எத்­தனை கோடி ரூபா பணத்தை தந்­தாலும் அதன் மூலம் தீயினால் எரித்த வலியை மறக்­க­டிக்­க­லா­காது. 20 வயதுப் பாலகனை எரித்தவர்களிடம் அவர்கள் செய்த தவறுக்காக கை நீட்டிப் பணம் வாங்குவதை நினைத்துப் பார்க்க முடியுமா? நமது உற­வு­களின் சட­லங்­களை எரித்த குற்­றத்­துக்குப் பக­ர­மாக பணத்தைப் பெற்று அதில் நாம் வாழவும் முடி­யாது.

என­வேதான் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் அர­சாங்­கத்தின் மன்­னிப்புக் கோரும் தீர்­மானம் தொடர்­பான பகி­ரங்க பதில் முன்­வைக்­கப்­பட வேண்டும்.
மன்­னிப்புக் கோரி­யதை வர­வேற்­கின்ற அதே­நேரம் கட்டாய தகனம் எனும் தீர்­மா­னத்தை எடுப்­ப­தற்குக் கார­ண­மாக இருந்­த­வர்­களை சட்­டத்தின் முன்­நி­றுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு முஸ்லிம் தரப்பு பகி­ரங்­க­மாக வலி­யு­றுத்த வேண்டும். இதில் அர­சியல் கட்­சிகள், சிவில் சமூக நிறு­வ­னங்கள், உல­மாக்கள் என சக­லரும் கைகோர்த்துச் செயற்­பட வேண்டும்.

பாரா­ளு­மன்­றத்தில் எதிர்க்­கட்­சி­யினர் நேற்­றைய தினம் இது தொடர்பில் தமது கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்­தனர். இது விட­யத்தில் தேவை­யான அர­சியல் சக்­தி­களின் ஒத்­து­ழைப்­பையும் பெற்று முஸ்லிம் சமூகம் தனது நீதிக்கான போராட்டத்தை முன்கொண்டு செல்ல வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான காலம் நெருங்கிவிட்ட நிலையில் முஸ்லிம் சமூகம் தனது வாக்குப்பலத்தை வைத்து பேரம்பேசுவதற்கான சிறந்த தருணம் இதுவேயாகும். வழக்கம் போல முஸ்லிம் அரசியல் கட்சிகள் நமது வாக்குகளை அவர்களது சுயநலன்களுக்காக அடகுவைக்க இம்முறை இடமளிக்க முடியாது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.