அஹ்னாப் ஜஸீம் : அச்சுறுத்துவது யார்? எதற்காக?

0 96

எப்.அய்னா

அஹ்னாப் ஜஸீம், உலக அளவில் மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்கள் உட்­பட பலரால் அறி­யப்­படும் ஒரு பெயர். இளம் கவிஞர், ஆசி­ரி­ய­ரான இவர் உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்னர் அதா­வது அத்­தாக்­குதல் நடந்து ஒரு ­வ­ரு­டத்தின் பின்னர் அத­னுடன் தொடர்­பு­ப­டுத்தி கைது செய்­யப்பட்டார். பின்னர் தன்­னிடம் கற்ற மாண­வர்­க­ளி­டையே அடிப்­ப­டை­வா­தத்தை தூண்டி, பிற மதத்­த­வர்கள் மீது பகைமை உணர்வை தூண்­டி­ய­தாக குற்றம் சாட்­டப்­பட்டார். இந்த குற்­றச்­சாட்டை சாட்­சி­யங்கள் ஊடாக நிரூ­பிக்க முடி­யாமல் போயுள்­ளதை அடுத்து அவர் நீதி­மன்றால் விடு­தலை செய்­யப்­பட்டார்.

ஆனாலும், அஹ்னாப் ஜஸீம் என்ற‌ இந்த இளம் கவி­ஞரை, ஆசி­ரி­யரை இலங்­கையின் பாது­காப்புத் துறை அல்­லது உளவுத் துறை துரத்­திக்­கொண்டே இருக்­கின்­றது. இந்த நிலைமை இலங்­கையின் அர­சி­ய­ல­மைப்பு ஊடாக உறுதி செய்­யப்­பட்­டுள்ள அஹ்­னாபின் தனி மனித சுதந்­திரம், நட­மாடும் சுதந்­திரம் உள்­ளிட்ட அடிப்­படை மனித உரி­மை­களை வெகு­வாக பாதித்­துள்­ளது.
எந்த அள­வுக்கு எனில், அஹ்­னாபை தாண்டி அது அவரது குடும்­பத்­தா­ரையும் குறி­வைத்­துள்­ளது.

அண்­மையில் அஹ்­னாப்பின் சகோ­த­ரர்­களில் ஒரு­வ­ருக்­கு நடந்த திரு­மண வைப­வத்தின் போது, இர­வோ­டி­ர­வாக வீடு புகுந்த பொலிஸார், மற்­றொரு சகோ­த­ரரை பொய்­யான குற்­றச்­சாட்டில் பொலிஸ் நிலையம் வரை அழைத்துச் சென்­றுள்­ள­தா­கவும், இது தொடர்பில் தற்­போது தேசிய பொலிஸ் ஆணைக் குழுவில் முறை­யிட்­டுள்­ள­தா­கவும் அஹ்னாப் ஜஸீமின் சட்­டத்­த­ர­ணி­களில் ஒரு­வ­ரான சஞ்சய் வில்சன் ஜய­சே­கர தெரி­விக்­கின்றார். இது அஹ்­னா­புக்­காக அவ­ரது குடும்­பத்­தாரை துன்­பு­றுத்தும் நட­வ­டிக்­கை­யாக பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அஹ்னாப் ஜஸீம் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு சுமார் 579 நாட்­களின் பின்னர் கடந்த 2021 டிசம்பர் 16 ஆம் திகதி 5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தார்.
கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணி­ய­ளவில், சிலா­வத்­துறை, பண்­டா­ர­வெ­ளியில் அமைந்­துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அவ­ருக்கு எதி­ராக கொழும்பு 8 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்றில் பீ. 44230/20 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை தக­வல்கள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. பின்னர் அதனை மையப்­ப­டுத்தி சட்ட மா அதிபர் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் ஒன்றினை தாக்கல் செய்­திருந்தார்.

இந்த வழக்கு விசா­ரணை செய்­யப்­பட்­ட‌­போது, வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக்க மன்றில் ஆஜ­ரானார். குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீ­முக்­காக சட்­டத்­த­ர­ணி­க­ளான சஞ்சய் வில்சன் ஜய­சே­கர, ஹுஸ்னி ராஜிஹ் ஆகி­யோ­ருடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரா­கி­யி­ருந்தனர்.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி, அஹ்னாப் ஜஸீ­முக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டது. புத்­தளம் – மது­ரங்­குளி பகு­தியில் உள்ள எக்­ஸ­லென்ஸி எனும் பெயரை உடைய பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு தீவி­ர­வாத கொள்­கை­களை ஊட்டி இன, மத, முரண்­பா­டுகள் மற்றும் பகை உணர்­வினை தூண்­டி­ய­தாக அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இந்த நிலையில் அவர் கற்­பித்த பாட­சா­லையின் அதிபர், மாண­வர்கள் என 5 பிர­தான சாட்­சி­யங்கள் ஊடா­கவும் சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டினை நிரூ­பிக்க முடி­யாமல் போனதால், குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 200 ஆவது அத்­தி­யாயம் பிர­காரம், பிர­தி­வாதி தரப்பு நியா­யங்­களை கோரா­ம­லேயே அவரை விடு­வித்து விடு­தலை செய்­வ­தாக கடந்த 2023 டிசம்பர் 12 ஆம் திகதி நீதி­பதி அறி­வித்தார்.

இதனைத் தொடந்து, அஹ்னாப் சார்பில் அநி­யா­ய­மாக தான் கைது செய்­யப்­பட்­ட­மைக்கு எதி­ராக நட்ட ஈடு கோரி விண்­ணப்பம் செய்­யப்­பட்­டது. அந்த விடயம் புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் விசாரிக்­கப்­பட்ட நிலையில், உளவுத் துறையின் தொந்­த­ர­வுகள் அஹ­்னாபை மீள இலக்கு வைக்க ஆரம்­பித்­தன. இதனால் அதி­லி­ருந்து தப்­பிக்க அஹ்னாப் நட்ட ஈட்டு விண்­ணப்­பத்தை மீளப் பெற்­றுள்ளார்.

எனினும் அதன் பின்னரும் அஹ்­னாபை உளவுத்துறை விடு­வ­தாக இல்லை. ஒரு சந்­தர்ப்­பத்தில், வழக்கின் பின்னர் நீதி­மன்றால் அஹ்­னா­பிடம் ஒப்­ப­டைக்க உத்­தரவி­டப்­பட்ட அவ­ரிடம் இருந்து கைப்­பற்­றிய புத்­த­கங்கள் உள்­ளிட்­ட­வற்றை எடுக்க அஹ்னாப் கொழும்பு வந்­துள்ளார். அவ்­வாறு வந்து மீள மன்னார் நோக்கி செல்லும் போது, ஜா –எல பகு­தியில் வைத்து பஸ்­ஸுக்குள் ஏறி­யுள்ள உளவுத்துறை என நம்­பப்­படும் குழு­வி­னரால் தனக்கு அசெள­க­ரி­ய‌ங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தாக அஹ்னாப் கூறினார். அவர்கள் புத்­த­ளத்தை நெருங்­கிய போது, ஏதோ ஒன்­றினை தனது பையில் இட்டு, தன்னை கைது செய்ய முயன்­றதை தான் உணர்ந்­த­தாக அவர் கூறு­கின்றார். இதனை ஒத்த சம்­பவம் ஒன்று மீளவும் தனக்கு பஸ்ஸில் நடந்­த­தாக கூறும் அஹ்னாப், தன்னை மர்ம நபர்கள் பின் தொடர்­வது குறித்து கடந்த பெப்ர­வரி மாதமே சிலா­வத்­துறை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பா­ட­ளித்தும் இது­வரை அந்த முறைப்­பாடு தொடர்பில் திருப்­தி­கர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என கூறு­கின்றார்.

உண்­மையில், அஹ்னாப் ஜஸீமின் கைது தொடர்பில் தொட­ரப்­பட்ட அடிப்­படை உரிமை மீறல் மனு, உயர் நீதி­மன்றில் நிலு­வை­யி­லேயே உள்­ளது. அவ்­வாறு இருக்­கையில், அவ­ரது அடிப்­படை உரி­மை­களை மீறும் வண்ணம் தொடர்ச்­சி­யாக பாது­காப்புத் தரப்­பினர் என நம்­ப­ப்படும் குழு­வினர் நடந்­து­கொள்­வது, ஈற்றில் அஹ்­னாபின் உயிரைக் கூட காவு கொள்­ளலாம். புத்­தளம் மேல் நீதி­மன்ற நட்ட ஈட்டு விண்­ணப்­பத்தை, இவ்­வா­றான பின் தொடர்­வுகள், அழுத்­தங்கள் ஊடாக அஹ்­னாபை மீளப் பெறச் செய்த வெற்­றியால், அடிப்­படை உரிமை மீறல் மனு­வையும் அதே பாணியில் மீளப் பெறச் செய்­வ­தற்­காக இவ்­வாறான அசெ­ள­க­ரி­யங்­களால் அவ்­வ­ழக்­குடன் தொடர்­பு­பட்ட தரப்­புக்கள் ஏதேனும் செய்­கின்­ற‌­னவா என்ற கேள்­வியும் எழாமல் இல்லை. எனவே இவ்­வி­டயம் உட­ன­டி­யாக உயர்நீதி­மன்றின் அவ­தா­னத்­துக்கு கொண்டு செல்­லப்­படல் வேண்டும். அஹ்னாபின் சட்டத்தரணிகள் இடையீட்டு மனு ஒன்றினையேனும் தாக்கல் செய்து விடயத்தை உயர் நீதிமன்றுக்கு சொல்ல வேண்டும்.

நிரபராதி என விடுவிக்கப்பட்ட ஒருவருக்கு, அவரது சகஜமான வாழ்வை கொண்டு செல்ல முடியாமல் இவ்வாறு முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்படுவது சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கையை இழக்கச் செய்யும். எனவே இவ்விடயம் மிக பாரதூரமனதாக் கருதி உடனடியாக தலையீடு செய்யப்பட வேண்டியதாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.