ஹிஜாப் அணிந்த 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: நாளை மீளவும் விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணைக் குழு
(எப்.அய்னா)
ஹிஜாப் அணிந்து வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட அதிபர்கள் செய்த முறைப்பாடு மீது நாளை மீண்டும் விசாரணை நடாத்தப்படவுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி இந்த விசாரணைகள் இடம்பெற்ற போதும், மனித உரிமைகள் ஆணைக்குழு முறைப்பாட்டில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பரீட்சை திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளுக்கு சமுகமளித்திருக்கவில்லை. இதனையடுத்து இந்த விசாரணைகளுக்காக நாளை 19 ஆம் திகதிக்கு ஆஜராக பிரதிவாதிகளுக்கு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அதிபர் சேவை தரம் 2 இல் இருந்து தரம் ஒன்றுக்கு தரமுயர்த்துவதற்கான வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை இரு தினங்களில் நடாத்தப்பட்டிருந்தன. முதல் நாள் 6 மணி நேரம் பரீட்சை எழுதியுள்ள பரீட்சார்த்திகள் மறு நாள் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும் போது, இறுதி 20 நிமிடங்களுக்குள் அங்கு வந்த அதிகாரிகளின் அசெளகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பரீட்சார்த்திகளின் அடையாள அட்டைகளை பெற்று அவர்களது பரீட்சை அனுமதிச் சீட்டுடன் வைத்து புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்றுள்ளனர்.
கொட்டாஞ்சேனை மத்திய கல்லூரியில் நடந்த இந்த பரீட்சையில் 7 ஆம் இலக்க பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்களே இந்த அநீதிக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந் நிலையில், வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சை பெறுபேறுகள் கடந்த ஜூன் 5 ஆம் திகதி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெறுபேறுகளை பரீட்சித்த போது, ஹிஜாப் அணிந்து பரீட்சைக்கு தோற்றிய முஸ்லிம் அதிபர்கள் 13 பேரினதும் பெறுபேறுகள் வெளியிடப்படாமல் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.- Vidivelli