கண்டி – திகன வன்முறைகள்: விசாரணை அறிக்கையை வெளிப்படுத்த வேண்டும்
முஜிபுர் ரஹ்மான் சபாநாயகரிடம் கோரிக்கை
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மனித உரிமைகள் ஆணைக்குழு இதுவரை அந்த அறிக்கையை வெளியிடவில்லை. அதனால் இது தொடர்பாக தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
நாட்டில் இருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்கள் அனைத்தும் அரசியலமைப்பு பேரவையின் கீழே செயற்படுகின்றன. அரசியலமைப்பு பேரவையினாலே அந்த ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றனர். பேரவையின் தலைவர் என்றவகையில் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பாக தேடிப்பார்க்கும் பொறுப்பு சபாநாயகர் என்றவகையில் உங்களுக்கு இருக்கிறது.
அதன் பிரகாரம் எமது நாட்டில் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழு இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டது. ஆனால் கலவரம் இடம்பெற்று 6 வருடங்கள் கடந்துள்ள போதும் அது தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
எனவே அரசியலமைப்பு பேரவையின் தலைவர் என்ற வகையில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக தேடிப்பார்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.- Vidivelli