வஹாபிஸம் தொடர்பில் பிழையான புரிதலுடன் நீதியமைச்சர் பேசுகிறார்
ஐ.எஸ்.ஐ.எஸ்.க்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை என்பது குறித்து விளக்கமளித்திருக்கிறோம் என்கிறது உலமா சபை
(எஸ்.என்.எம்.சுஹைல்)
வஹாபிஸம் தொடர்பாக பிழையான புரிதலுடன் நீதியமைச்சர் விஜயதாஷ ராஜபக்ஸ பேசுவதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் இஸ்லாத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பது தொடர்பில் தாம் ஏற்கனவே நீதியமைச்சருக்கு விளக்கமளித்திருக்கின்றோம் என்றும் ஜம்இயதுல் உலமா தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது வஹாபிஸம் தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ கருத்து வெளியிட்டிருந்தார்.
இது குறித்து நாம் ஜம்இய்யதுல் உலமா சபையிடம் வினவியபோதே அதன் ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்தது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, 2016 ஆம் ஆண்டு நீதியமைச்சராக இருந்த விஜயதாஸ ராஜபக்ஸவை (தற்போதும் நீதியமைச்சர்) நாங்கள் சந்தித்து ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்புக்கும் இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்யை என்பதை விளக்கியிருந்தோம். அதில் இளைஞர்கள் இணைவதை தடுக்க வழிகளை மேற்கொள்ளுமாறு நாம் வலியிறுத்தினோம்.
அச்சந்திப்பு ஜம்இய்யதுல் உலமா மாத்திரம் கலந்துகொண்ட சந்திப்பல்ல, முஸ்லிம் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.
இது விடயமாக போதிய தெளிவுகள் இல்லாமல் ஐ.எஸ்.ஐ.எஸ்.தான் வஹாபிஸம் என்ற பிழையான புரிதலினால் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ அவ்வாறு பேசியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டது. – Vidivelli