சவூதி அரேபிய அரசு மற்றும் UpLink இணைந்து கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு சவால் அறிவிப்பு

0 519

எழுத்துகாலித் ரிஸ்வான்

சவுதி அரேபியாவின் பொருளாதார மற்றும் திட்டமிடல் அமைச்சு மற்றும் ஆற்றல்கள் அமைச்சு, UpLink உடன் இணைந்து, கார்பன் பொருளாதாரத்தை துரிதப்படுத்தும் புதுமையான தீர்வுகளைக் கண்டறிவதை நோக்காக கொண்டு, கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு சவாலை கடந்த வாரம் உத்தியோக பூர்வமாக அறிவித்தது. கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கான உயர்மட்ட அரசியல் மன்றத்தின் (HLPF) போது இச்சவால் அறிவிக்கப்பட்டது.

கார்பன் பிடிப்பு தொழில்நுட்பம், நாவல் கார்பன் பயன்பாட்டு முறை மற்றும் தொழில்துறை ஒருங்கிணைப்பு போன்ற நிலையான மாற்றத்தின் மூலம் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் புதுமையான தீர்வுகளை கொண்ட திட்டங்கள் அல்லது யோசனைகளை சமர்ப்பிப்பதையே இந்த சவாலானது தொழில் துறையினரிடம் வேண்டி நிற்கிறது. இந்த திட்டம் கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டை (CCU) வலியுறுத்துவதோடு, ஒரு நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் இவ்வாறான புத்தாக்க சிந்தனைகள் வகிக்கும் முக்கிய பங்கை வலியுறுத்துகிறது. அத்துடன் சவூதி அரேபியாவின் முக்கிய இலக்குகளில் ஒன்றான 2060 ஆகும் போது நிகர-பூச்சியத்தை அடைதல் என்பதற்கான கார்பன் அகற்றலின் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

நிகர பூஜ்யம் (net-zero) என்பது காபன் உமிழ்வை குறைத்தல் மற்றும் கார்பன் டை ஆக்சைட் உறிஞ்சுதல் நுட்பங்களை செயல்படுத்துவதன் மூலம் மனித நடவடிக்கைகளால் உருவாக்கப்பட்ட பச்சை இல்ல வாயுக்களின் அளவை முற்றிலுமாக அகற்றுவதை  குறிக்கிறது.

சவூதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அசீஸ் பின் சல்மான் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “காலநிலை மாற்றம் மற்றும் நிலைத்தன்மை போன்றன உலகளாவிய பிரச்சினைகளாகும், பிராந்திய ரீதியாகவோ அல்லது சிறிய புவியியல் எல்லைகளுக்குள்ளோ இது பற்றி கலந்துரையாட முடியாது, மாறாக உலகளாவிய ரீதியாக அணுக வேண்டிய பிரச்சனையாகும்.” எனக் கூறினார்.

“சவூதி அரேபியா தனது லட்சிய இலக்கான நிகர பூச்சியத்தை 2060 க்குள் அடைவதற்கான தனது முயற்சிகளை வட்ட கார்பன் பொருளாதார கட்டமைப்பின் மூலம் மேம்படுத்த முயல்கிறது. இக்கட்டமைப்பானது, கார்பன் உமிழ்வின் தாக்கத்தை குறைப்பது மட்டுமல்லாமல், கார்பனை ஒரு மாசு பொருளாக்காமல் பொருளாதார பெறுமதியுடன் கூடிய ஒரு வளமாக மாற்றுகிறது” எனவும் அப்துல் அஸீஸ் பின் சல்மான் அவர்கள் தெறிவித்தார்.

மேலும், சவூதியின் மேற்குறிப்பிட்ட இலக்கை 2060 இல் அடையவும், உலகளவில் கார்பனின் பொருளாதார பயன்பாட்டை முழுமையாகப் பெறவும், முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து இந்த உலகளாவிய கார்பன் பிடிப்பு மற்றும் பயன்பாட்டு சவாலை சவூதி தொடங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய சவாலை ஏற்றுக்கொள்வதன் மூலம், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான முயற்சிகளில் செல்வாக்குமிக்க மாற்றங்களை சவூதி முன்னெடுத்து வருவதாகவும், கூட்டு முயற்சிகள் மற்றும் முன்னோடியான கண்டுபிடிப்புகள் மூலம் நாளைய பிரச்சனைகளை இன்றைய தீர்வுகளாக மாற்றுவதற்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்த சவால் ஒரு வாய்ப்பாக அமைகிறது என்பதை அவர் வலியுறுத்தினார்.

சவூதி அரேபியாவின் பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் அலிப்ராஹிம் கூறியதாவது: சவூதி அரசு ஒரு நியாயமான, ஒழுங்கான மற்றும் நடைமுறையான ஆற்றல் மாற்றத்தில் ஆர்வமாக உள்ளது அத்தோடு கார்பன் பொருளாதார கட்டமைப்பின் முன்னேற்றத்தை நோக்கி செயல்படுகிறது. கார்பன் பொருளாதாரத்தில் உள்ள புத்தாக்கங்கள் தொடர்பான இந்த சவாலின் மூலம், குறிப்பிட்ட புத்தாக்க முயற்சிகளை மேலும் முன்னேற்றமடையச் செய்ய துணையாக அமையும் புதிய தீர்வுகளை அவர்கள் எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

அனைத்து கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனையாளர்கள், மற்றும் நிறுவனங்களையும் புதிய ஆக்கபூர்வமான தீர்வுகளைக் கொண்டு வருமாறு தாங்கள் ஊக்குவிப்பதாகவும் கூறினார். சில சமயம் தற்காலத்தை பொருத்தமட்டில் அவர்களது புத்தாக்க யோசனைகளை நடைமுறைப்படுத்த நீண்டகாலம் எடுப்பதாக தோன்றினாலும், எதிர்காலத்தில் பொருந்தக்கூடியதாகவும் செயல்படக்கூடியதாகவும் இருக்கும் யோசனைகளையும் எதிர்பார்ப்பதாகவும் அலிப்ராஹிம் அவர்கள் கூறினார்.

சமர்ப்பிக்கக் கூடிய புத்தாக்க திட்டங்கள், எந்தளவு பொருளாதார நலன்களை ஈட்டித்தரக் கூடியன, எந்தளவு எதிர்காலத்தில் வளர்ச்சியடையக் கூடியன, பண ரீதியான முதலீடுகளை மற்றும் நிதியை ஈட்டித் தரக் கூடிய வள்ளமை மற்றும் சந்தையில் அந்தந்த திட்டங்களின் பெருமானம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்யப்படும். இந்த சவாலில் வெற்றி பெறுபவர்கள் சிறந்த கண்டுபிடிப்பாளர்களாகக் கருதப்பட்டு,  நிறுவனர்கள், CEOக்கள் மற்றும் இயக்குநர்கள் போன்ற தலைவர்களுக்கான சிறப்புத் திட்டமான UpLink Innovation Ecosystem இல் இணைத்துக் கொள்ளப்படுவர். வெற்றியாளர்களுக்கு CHF 300,000 வரையான பரிசுத் தொகை வழங்கப்பட்டு அவர்களால் முனமொழியப்பட்ட திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கான ஆதரவையும் பெறுவார்கள்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்து சவூதி அரேபியா நீண்ட காலமாக பங்காற்றி வருகிறது. பாரிஸ் உடன்படிக்கை மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டிற்கு இணங்க, கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும் அகற்றுவதற்கும் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சுற்று கார்பன் பொருளாதார கட்டமைப்பை சவூதி அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த சவாலானது செப்டம்பர் 12, 2024 அன்று நிறைவடைகிறது, மேலும் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள் தங்கள் திட்டங்களை, யோசனைகளை சமர்ப்பிக்க கீழுள்ள இணையத்தை நாடளாம்: https://uplink.weforum.org/uplink/s/uplink-issue/a00TE0000080E1a/carbon-capture-and-utilization-challenge?activeTab=Challenge-Overview

Leave A Reply

Your email address will not be published.