எஸ்.எல்.எம். சானாஸ்
சிங்களவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வந்த ராஜபக்ஷாக்களின் இனவாத முழக்கங்கள் பொருளாதார சீரழிவுடன் ஓய்விற்கு வந்துள்ளது. நாடு அதல பாதாளத்திற்குள் விழ ஊழல், துஷ்பிரயோகம் செய்த அதே பங்களிப்பினை, இனவாதமும் ஆற்றியிருக்கின்றது. போர் முடிவோடு பொருளாதார சுபீட்சத்தினை நோக்கி சிங்களவரின் கவனம் திரும்பி சமன்பாடு மாறுபடுவதைத் தவிர்க்க ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான இனவாத நாட்டியம், உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு பிசு பிசுத்துப் போயுள்ளது.
நுகர்வு பொருட்களுக்கு வழங்கப்படும் ஹலால் தரச்சான்றிதழை மையமாக வைத்து 2012 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பலசேனா செயலாளரினால் ஆரம்பிக்கப்பட்ட வன்பேச்சுக்கள் மாட்டிறைச்சி வியாபாரம், முஸ்லிம் தனியார் சட்டம் முஸ்லிம்களின் சனத்தொகை வளர்ச்சி, புர்கா என்ற பட்டியலோடு விஸ்தரிக்கப்பட்டது. முஸ்லிம்களின் வியாபாரத்தை சிங்களவர் பகிஷ்கரிக்க பலவந்தப்படுத்தப்பட்டதோடு பாரம்பரிய முஸ்லிம்கள் மட்டுமே இந் நாட்டிற்கு உவப்பானவர்களாக சித்தரிக்கப்பட்டார்கள்.
ஜேர்மனிய யூதன் ஒருவனால் மாத்தறைப் பிரதேசத்தில் ஞானசாரருக்கு வழங்கப்படும் அலுவலகமும் அதன் திறப்பு விழாவில் அந்நாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தா பங்குபற்றுவதும் திருப்பு முனையாக மாறுகின்றது. தொடர் வன் பேச்சுக்களுக்கான முதல் அறுவடை அளுத்கம நகர் எரியூட்டப்படுவதன் மூலம் ஈட்டப்படுகின்றது.
2015 ஜனாதிபதி தேர்தலில் மஹிந்தவின் தோல்விக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் தான் காரணமென மெதமுலனவில் இனவாதத் தீ பற்ற வைக்கப்படுகின்றது. மலட்டு கொத்து மலட்டுத் தன்மை தரும் ஆடைகள் போன்ற உணர்திறன்மிக்க தலைப்புக்கள் பலசேனா அணியினரினால் அறிமுகப்படுத்தப்பட்டு முஸ்லிம் சமூகம் வெறுப்பேற்றப்பட்டது. பதிலுக்கு புத்தர் சிலைகளை சேதமாக்கும் நிகழ்வுகளினால் ஸஹ்ரான் குழுவினர் சிங்களவரைப் பீதிக்குள்ளாக்கினர். இவ்விரு அடிப்படைவாதக் குழுக்களும் முன்னாள் ஆட்சியில் நிதி வழங்கப்பட்டு போஷிக்கப்பட்டதை (மொசாட் உலகிற்கு கற்றுக் கொடுத்த பாடத்தை) அநுரகுமார பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
முஸ்லிம்களுக்கெதிரான இடைவிடாத இனவாத பேச்சுக்களும் நல்லாட்சிக்குக் காரணமான சிறுபான்மையினர் மீதான காழ்ப்புணர்ச்சியும் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் மொட்டுக் கட்சியை வெற்றிவாகை சூடச்செய்ததுடன், இரண்டுபட்டிருந்த நல்லாட்சியாளர்கள் மிரட்டப்பட்டு திகனக் கலவரமும் மூட்டப்பட்டது. இதேவேளை 2019 ஜனாதிபதித் தேர்தலின் இறுதிப் பெறுபேற்றை மாற்றியமைக்கும் வாக்குப் பலம் பற்றியும் இங்கு தீவிரமாக ஆராயப்படுகின்றது.
நல்லாட்சிக்குள் ஜனாதிபதி பிரதமர் கயிறிழுப்பு, குட்டி வல்லரசின் அன்றைய அரசு மீதான அதிருப்தி பாதுகாப்புத் தரப்பிற்குள் தமக்கிருந்த செல்வாக்கு ஆகியவற்றைச் சூத்திரதாரிகள் கச்சிதமாக ஒருங்கிணைத்திருக்க வேண்டும். சுருங்கக் கூறின் ஹொலிவுட் சினிமா பாணியில் சிறந்த இயக்குனர், நடிகர்களின் பங்களிப்போடு 2019 ஈஸ்டர் தினத்தில் இத்திரைப்படம் வெளியிடப்படுகின்றது.
மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு கத்தோலிக்கர்கள் ஆளாக்கப்பட்ட அதேவேளை, முஸ்லிம் சமூகம் இத்தாக்குதல் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்ததாக செய்த விஷமப் பிரசாரம் இனங்களுக்கிடையில் பாரிய விரிசலை உருவாக்கியது. நியூஸிலாந்தின் கிரிஸ்சேர்ச் நகர பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் போது அந்நாட்டின் பிரதமர் ஜெஸிந்தா வெளிப்படுத்திய மனிதநேய அணுகுமுறை முழு உலகிற்கும் எடுத்துக்காட்டாக இருக்கையில் எமது ஆட்சியாளர்கள் இங்கு வைராக்கியத்தைப் பரப்ப அந்நாட்டின் படுகொலைகளை ஒருதுரும்பாகப் பாவித்தமை ஈனச்செயலே.
‘முஸ்லிம்களுக்கெதிராக உங்கள் கைகளைத் தூக்க வேண்டாம்’ என உணர்ச்சி ததும்ப கத்தோலிக்கர்களிடம் வேண்டி இரத்தக் களரியைத் தடுத்ததுடன் பிராந்திய தீவிரவாதத்தை இங்கு காலூன்றச் செய்யும் ஷியோனிஸ்டுகளின் சதியையும் முறியடித்த மெல்கம் ரன்ஜித்திற்கு முழு நாடும் கடமைப்பட்டுள்ளது.
இதையடுத்து ரத்ன தேரரின் மாளிகாவைச் சூழ்ந்து ஆடிய நாடகம் தனிப்பட்ட பாதுகாப்பின் நிமித்தம் தருவிக்கப்பட்டிருந்த வாள்களை வைத்துக்காட்டிய ஜிஹாத் பூச்சாண்டி, (வாளால் விளைந்த மதம் இஸ்லாம் எனும் பழியை மெய்ப்பிக்கவும்) வைத்தியர் ஷாபியின் விவகாரம் என பல்முனை தாக்குதலால் எமது சமூகம் நிலை குலைந்து போனது. எமது சமையலறையில் காணப்பட்ட கறைபடிந்த சக்திகள் கூட பிரதான தொலைக்காட்சிகளின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தன. இத்தாக்குதலின் பின்னணியை வெளிக்கொணரத் தீவிரமாக முயன்ற குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அன்றைய பணிப்பாளர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டனர்.
குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாகவும் மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அரபுலகினால் வழங்கப்பட்ட ஒரு கோடி டொலர் பற்றி அன்றோ அது குறித்த மக்களைச் சென்றடையாதது பற்றி இன்றோ சிங்கள மீடியாக்களும் பௌத்த பீடங்களும் வாய்திறக்கவில்லை.
கொவிட் காலத்திலும் விட்டுவைக்கப்படாத முஸ்லிம் சமூகம் வேண்டுமென்றே கொரோனாவை பரப்புவதாக முன்னாள் விவசாய அமைச்சர் ஒருவர் குற்றம் சாட்டியதோடு அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் முஸ்லிம்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
ஸஹ்ரானின் தீவிரவாத போதனைகள் பற்றி முஸ்லிம் அமைப்புகளால் விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் தட்டிக்கழிக்கப்பட்டமை இத்தீவிரவாதியை சட்டரீதியாக மடக்க எத்தனித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவர் (கத்தோலிக்கர்) சட்டத்தின் பிடியில் தந்திரமாக சிக்க வைக்கப்பட்ட விவகாரம், பலசேனா செயலாளர் ஜனாதிபதி மன்னிப்பின் மூலம் சிறைவாசத்திலிருந்து விடுவிக்கப்பட்டது என அனைத்தும் 2019 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்ததே.
‘நாட்டின் பாதுகாப்பு பேராபத்தில்’ என்ற தோற்றப்பாடு, களனி ரஜமகாவிஹாரையில் தோன்றிய அபூர்வ நாகம்? பற்றிய பிரதம துறவியின் (பேராசிரியர் ஒருவர்) புரட்டு, மரணத் தறுவாயில் (மரண மஞ்சக) ஈடேற்றம் பெற மொட்டுவை ஆதரிக்க தேரர் ஒருவர் (பல்கலைக்கழக விரிவுரையாளர்) வலியுறுத்தியது, எளிய வியத்மக தொழில் சார் நிபுணர்களின் போலி மேடைப்பேச்சுகள் என்பன கோத்தாவின் தேர்தல் வெற்றியை உறுதி செய்தன.
நாட்டில் இடம்பெற்ற இன வன்முறைகளால் அக்கினிப் பிளம்பாக்கப்பட்ட எமது சொத்துக்கள் ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் ஒரு பகுதியையும் நாசமாக்கியுள்ளது. போர் முடிவோடு ஆரம்பித்த இனவாத பரப்புரைகளால் அந்நிய முதலீடுகள் அயல் நாடுகளை நோக்கி நகர்ந்தன. திகன கலவரத்தை அடுத்து சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் கண்டிப்பிரதேசம் மாத்திரம் இழந்த வருமானம் 900 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. ஜனாஸா எரிப்பினைத் தொடர்ந்து மத்திய கிழக்கு எம்மை விட்டும் தூரமானதால் ஏற்பட்ட பொருளாதார இழப்பைக் குறைத்து மதிப்பிட முடியாது. இக்காலப்பகுதியில் நாட்டில் தலைவிரித்தாடிய ஊழல், கொலைக் கலாசாரம், போதைப் பொருள் மாபியா போன்ற தலைப்புக்கள் ‘தேசத்தை நேசிப்போம்’ ‘இஸ்லாமிய பயங்கரவாதம்’ எனும் மாயைகளைக் கொண்டு மறக்கடிக்கப்பட்டன.
1915, 1958, 1983 ஆண்டுகளின் கலவரங்களுக்கு அடிப்படையாகக் சம்பவங்கள் தற்செயலாக இடம்பெற்றிருந்தாலும், போர் முடிவிற்கு பின் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்களுக்கான காரணங்கள் முன்னரே சோடிக்கப்பட்டிருந்தன. ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதலையடுத்து, திவயின பத்திரிகை வைத்தியர் ஷாபி தொடர்பாக வெளியிட்ட ஒரு போலிச் செய்தியானது, முழு நாட்டையும் எரிக்க திரை மறைவில் மேற்கொண்ட ஒரு முயற்சியே.
வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் (Hate Speech) தடைசெய்யும் சட்டம் பற்றி நல்லாட்சிக் காலத்தில் பேசப்பட்டாலும், அன்றைய தலைவர்களுக்கும் ராஜபக்ஷவினருக்குமிடையில் நிலவிய கள்ள உறவு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அத்தடை அமுலாகியிருந்தால் அதனைத் தொடர்ந்த அனர்த்தங்கள் நடைபெறாமலிருக்க வாய்ப்புகள் இருந்தன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு நீதி கேட்டு போர்க்கொடி தூக்கியிருக்கும் கத்தோலிக்கர்களிடம் அரசியல் சித்து விளையாட்டுக்கள் எதுவும் பலிக்கவில்லை. சமூக செயற்பாட்டாளர்களான சிரன்த அமரசிங்க, செஹான் மாலக கமகே போன்றவர்கள் இத்தாக்குதல் தொடர்பாக பகிரங்கக் கருத்துக்களைத் தெரிவித்து வருவதோடு, பௌத்த இனவாதிகளுக்கு கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வரும் கத்தோலிக்கர்கள். குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரி (மஹமொலகரு) அல்லாஹ்தான் என தனது இறுதி அஸ்திரத்தை ஏவிய ஞானசாரருக்கு, ‘முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும் வணங்குவது ஒரு கடவுளைத் தான்’ எனும் தலைப்பில் சிரன்த தரப்பால் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு அவரின் வாயடைக்கப்பட்டது. இத்தாக்குதல் பற்றி மட்டும் தெரிந்து கொண்டு நிற்காமல் இனங்களுக்கிடையேயான மோதல்கள் கடந்த கால இலங்கை இந்திய (மொட்டுவை பொதுச் சின்னமாக கொண்டுடிருக்கும்) அரசுகளால் திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்டதை செஹான் புட்டு வைத்திருக்கிறார். எமது சமூகத்தின் புத்திஜீவிகள் இவர்களோடு கைக்கோர்க்க பின்னிற்பதாகவும் தீவிரவாதம் பற்றிப் பேசத் தயங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படும் விடயம் குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும்.
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலும் (செப்டெம்பர் 11) ஈஸ்டர் தாக்குதலும் அரசியல் பின்னணிகளைக் கொண்டிருந்ததோடு, ஒரே விதமான விளைவுகளை ஏற்படுத்தியது. சில வெளிநாட்டு ஊடகங்கள் இலங்கையின் இத்தாக்குதலை Mini September Eleven Attack என வர்ணித்திருந்தன.
அமெரிக்காவில் இது இஸ்லாமோபோபியாவை உயிர் பெறச் செய்து உலகெங்கும் பரவச் செய்தது.
குறுகிய காலத்தில் அந்நாட்டின் புத்திஜீவிகள் பின்லாடன் குழுவினர் இத்தாக்குதலை தனியாக நடாத்தவில்லை என ஒப்புவித்ததுடன் இச்சம்பவத்தில் அமெரிக்க உளவுத்துறையும் இஸ்ரேலிய யூதர்களும் தொடர்புபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்த அரபு நாடுகள் மீதான ஆக்கிரமிப்பு அதன் பொருளாதாரத்தில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியது. அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் மீதான ஈர்ப்பு அமெரிக்கர்களிடையே அதிகரித்த வண்ணம் உள்ளது.
உயிர்த்த ஞாயிறு படுகொலைகளையடுத்து இங்கு இஸ்லாம் எதிர்ப்பு உணர்வு ஜனாஸா எரிப்பு வரை நீண்டு சென்றது. குண்டு வெடிப்பு பற்றி புலனாய்வுப் பிரிவுனருக்கு கிடைத்த துல்லிய தகவல்கள் மறைக்கப்பட்ட விவகாரம் ஸஹ்ரான் தரப்பு புலனாய்வுப் பிரிவினருடன் கொண்டிருந்த தொடர்புகள் மொசாட்டும் ஸஹ்ரானும் நெருங்கிச் செயற்பட்டது குறித்தும் காரசாரமான விவாதங்கள் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இடம்பெற்றன. கோத்தாவினால் முன்னுரிமை வழங்கப்பட்ட இனவாத நிகழ்ச்சி நிரல் ஆட்டம் கண்டிருந்த பொருளாதாரத்தை முழுமையாகச் சரிய வைத்ததுடன் பெரும்பான்மையினர் தற்போது முஸ்லிம்களோடு சிநேகபூர்வமான தொடர்புகளைப் பேண ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும், பிரிட்டனின் செனல் 4 தொலைக்காட்சியும் முன்னாள் ஆட்சியாளர்களின் பாதி முகத்திரையைக் கிழித்திருக்கிறது. பொருளாதார படுகொலைகளுக்கு மஹிந்த குழுமத்தை நோக்கி நீதி தேவதையும் விரல் நீட்டியுள்ளது. ‘வலிந்து உருவாக்கிய முரண்பாடுகள் மூலம் பதவியைப் பிடித்துக் கொண்டாலும் அதில் நீடிக்க விடாமல் அம்முரண்பாடுகளே அவர்களைத் துவம்சம் செய்யும்’ என்ற மண்டேலாவின் கோட்பாடு யதார்த்தமாகி வருகிறது.
தாய் நாட்டைக்காக்க வந்த மீட்பாளர்கள் உட்பட, பாரம்பரியக் கட்சிகள் நம் தேசத்தை குட்டிச் சுவராக்கியுள்ளனர். ஊழல் மாபியாவிலிருந்து விடுபட்டதோடு இனமுறுகல்களை வெற்றி கொண்ட றுவாண்டா, தென்னாபிரிக்கப் பாதையில் நாம் பயணிக்கப் போகின்றோமா? என்பதை அடுத்து வரும் தேர்தல் முடிவுகள் காட்டும்.- Vidivelli