பத்திரிகையாளர் மீதான அச்சுறுத்தல் நீங்க நீங்க வேண்டும்

0 860

உலகளாவிய ரீதியில் பத்திரிகையாளர்களுக்கு இந்த ஆண்டில் முன்னெப்போதுமில்லாதவாறு  அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக இரு பிரதான சர்வதேச ஊடக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

”உலகின் சில பகுதிகளில் பத்திரிகையாளர்கள் வேட்டையாடப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள்; சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதுமில்லாத வகையில் மோசமான பகையை சந்தித்து வருகிறார்கள்” என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.

கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டில் ஊடகவியலாளர்கள் மீதான கொலைகளும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படுவதும், ஆளையே காணாமலாக்குவதும் அதிகரித்துள்ளதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

இந்த ஆண்டில் 80 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 61 வீதமானோரைக் குறிவைத்து நடந்த தாக்குதலில் 39 வீதமானோர்  கொல்லப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் 348 நிருபர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். 60 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு கூறியிருக்கிறது.

ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாக விளங்குவது ஆப்கானிஸ்தான் தான். இந்த நாடுதான் இப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

போர் நடக்காத நாடுகளில்தான் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது அதிகமாக இருக்கிறது என்றும் இவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. முதன் முறையாக அமெரிக்காவில் இந்த ஆண்டு 6 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஜூனில் மேரிலாண்டில் பத்திரிகை அலுவலகத்திலேயே 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் வடக்கு கரோலினாவில் மோசமான வானிலை தொடர்பான செய்தியை சேகரிக்கும்போது பலியாகினர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள பத்திரிகை யாளர்களில் பாதிக்கு மேல் சீனா, எகிப்து, துருக்கி, ஈரான், சவூதி அரேபியா நாடுகளில் இருக்கிறார்கள்.

பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழுவும் (சி.பி.ஜே.) இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018 இல் மொத்தமுள்ள 53 பத்திரிகையாளர்களில் 34 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 47 பேர் கடந்தாண்டில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் இது மிகவும் அதிகமாகும். இதிலும் ஆப்கானிஸ்தானே முதலிடத்தில் இருக்கிறது. அங்கு இந்த ஆண்டில் மட்டும் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வன்முறை அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள் மற்றும் பேராசை பிடித்த தொழிலதிபர்கள் ஆகியோர் பத்திரிகையாளர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசுவதால்தான் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் கிறிஸ்டோப் டெலாய்ர் கூறியிருக்கும் கருத்தும் இந்த இடத்தில் கவனிக்கத்தக்கதாகும்.

ஒரே ஆறுதலான விடயம் என்னவெனில், இந்த ஆண்டில் உள்நாட்டுக் கலவரம், போர் நடக்கும் பகுதிகளில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிரியாவிலும், யெமனிலும் போர் நடந்தபோதும் இங்கு ஊடகவியலாளர்களின் உயிரிழப்புகள் குறைந்துள்ளன.

எது எப்படியிருப்பினும் பத்திரிகையாளர்களை சுட்டுக் கொல்லும் நாடுகளையும் மற்றும் தீவிரவாத தலைவர்களையும் கேள்வி கேட்க யாருமில்லை என்பதுதான் இங்குள்ள முக்கிய பிரச்சினையாகும்.  இலங்கையில் கூட ஏராளமான பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இதுவரை எவரும் உரிய தண்டனைகளைப் பெறவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. சில ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் குற்றவாளிகள் இனங்காணப்பட்ட போதிலும் அவர்கள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

ஊடகவியலாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டோர் மீது நடவடிக்கை எடுப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை. அண்மையில் 51 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடியின் போதும் அரச ஊடகங்கள் மீது பலத்த தலையீடுகள் இருந்தன.

எனவேதான் இலங்கையிலும் உலக நாடுகளிலும் ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், தலையீடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.