இலங்கையின் தேசியப் பெருவாழ்வில் முஸ்லிம்கள் இணைய வேண்டும்- சமூக செயற்பாட்டாளர் எம்.எல்.எம்.மன்சூர்

0 104

எம்.ஐ.அப்துல் நஸார்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 ஆவது வரு­டாந்தப் பொதுக்­கூட்­டம் கடந்த 30.06.2024 அன்று கொழும்பு தபா­ல் தலைமை அலு­வ­லக கேட்போர் கூடத்தில் நடை­பெற்றது. இதில் சிறப்பு பேச்­சா­ள­ராக கலந்து கொண்ட சமூக செயற்­பாட்­டாளரும் விமர்­ச­க­ரு­மான எம்.எல்.எம்.மன்சூர் ஆற்­றிய உரையின் தொகுப்பு

21 ஆம் நூற்­றாண்டில் இலங்கை­யின் வர­லாறு எழு­தப்­படும் போது தொடர்ச்­சி­யாக மூன்று வரு­டங்கள் இடம்­பெற்ற முக்­கி­ய­மான மூன்று வர­லாற்று நிகழ்­வுகள் மறு­த­லிக்­க­மு­டி­யா­த­வை.

முத­லா­வது 2019 ஈஸ்டர் தாக்­குதல், இரண்­டா­வது 2020 பெருந்­தொற்று கொவிட், மூன்­றா­வது 2021 மக்கள் எழுச்சி அர­க­லய.

இந்த மூன்று வர­லாற்று நிகழ்­வு­களும், இலங்கை முஸ்­லிம்­களை மூன்று வித­மாகப் பாதித்­தன. அதா­வது மற்­றைய சமூ­கங்­களைப் பாதிக்­காத அள­விற்கு முஸ்லிம் சமூ­கத்தின் மீது பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யது.

ஈஸ்டர் தாக்­கு­த­லுக்குப் பின்னர், சிங்­கள சமூகம் மட்­டு­மன்றி இலங்­கையின் அரச நிறு­வ­னங்­களும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இருந்த ஒரு நிலை­மை­யினை நாங்கள் பார்த்தோம். வைத்­தி­ய­சா­லையில் மற்றும் ஏனைய இடங்­களில் சேவை­களை பெற்­றுக்­கொள்­வதில் இருந்த சவால்கள், பொது நிரு­வாக அமைச்சின் செய­லாளர் அமைச்­ச­ரவை அனு­மதி இல்­லாமல் சர்ச்­சைக்­கு­ரிய சுற்­ற­றிக்­கை­யினை வெளி­யிட்­டமை, அவை அனைத்­துமே இலங்கை அரசு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக போர் தொடுத்த நிலை­மை­யினைப் பார்த்தோம். கடு­மை­யான அவ­மா­னங்­களையும் அதிர்ச்­சி­க­ளையும் சந்­தித்தோம்.

அதற்­க­டுத்து 2020 ஆம் ஆண்டு பெருந்­தொற்­றை­ய­டுத்து இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் உங்கள் அனை­வ­ருக்கும் தெரியும், அவை அனைத்­துமே இந்தத் தலை­மு­றையின் வாழ்நாள் முழு­வதும் அவர்­க­ளது ஒட்­டு­மொத்த ஞாபங்­களில் உறைந்­தி­ருக்கும். அதற்­கான நினைவுச் சின்­னமும் ஓட்­ட­மா­வ­டியில் இருக்­கின்­றது. அதுவும் ஆயி­ர­மா­யிரம் ஆண்டு காலம் இலங்கை முஸ்­லிம்கள் பட்ட துன்­பங்­க­ளுக்­கான சாட்­சி­க­ளாக இருக்கும்.

இந்தப் பின்­ன­ணியில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக அர­க­லய என்ற மக்கள் எழுச்சி ஏற்­பட்டு இலங்­கையின் நிலை­மையை தலை­கீ­ழாக மாற்­றி­ய­மைத்­தது.
இலங்கை அர­சி­யலில் பிர­தான பேசு பொரு­ளாக இருந்த இஸ்­லாமோ போபியா, இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கெ­தி­ரான நிலைப்­பாடு, சிறு­பான்­மை­யி­ன­ருக்­கெ­தி­ரான நிலைப்­பாடு அனைத்­துமே தலை­கீ­ழாக மாற்­றப்­பட்­டது. அதற்­கான ஒரு பின்­ன­ணியும் இருந்­தது. அதா­வது நான் கடந்த வாரமும் விடி­வெள்ளி பத்­தி­ரி­கையில் கட்­டு­ரை­யொன்­றினை எழு­தி­யி­ருந்தேன். அதில் கூறி­யி­ருந்த விடயம் இலங்கை முஸ்­லிம்கள் மத்­தியில் காணப்­படும் பிரச்­சினை – இரண்டு அடை­யா­ளங்கள். ஒன்று ‘இலங்கை முஸ்லிம்’, இரண்­டா­வது ‘இலங்­கையில் வாழும் முஸ்லிம்’ – இதுதான் இங்­குள்ள பிரச்­சினை.

‘இலங்கை முஸ்­லிம்கள்’ என்­பது நாங்கள் ஆயிரம் ஆண்­டு­க­ளாக இலங்­கையில் பிறந்து, இலங்­கையில் வாழ்ந்து இலங்­கையில் மர­ணிப்­ப­வர்கள். தற்­போது புதி­தாக ஒரு அடை­யாளம் வந்­தி­ருக்­கின்­றது ‘இலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள்’ என்­ப­துதான் அது.

‘இலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள்’ என்­பது நூறு கோடிக்கும் மேற்­பட்ட முஸ்­லிம்கள் இலங்­கைக்கு வெளியே வாழ்­கின்­றார்கள், நாங்கள் இங்கு இரு­பத்­தி­யி­ரண்டு இலட்சம் முஸ்­லிம்கள் வாழ்­கின்றோம், அவர்­க­ளுடன் எங்­க­ளுக்கு ஒரு இணைப்பு இருக்­கின்­றது. அவர்கள் எமக்கு வலு­வான பாது­காப்­பாக இருந்து வரு­கின்­றார்கள் என்ற நம்­பிக்கை. அப்­ப­டி­யான சிந்­த­னை நிறைய முஸ்­லிம்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. இவர்­கள்தான் ‘இலங்­கையில் வாழும் முஸ்­லிம்கள்’. ஆனால் நாங்கள் அப்­படி இருக்க முடி­யாது. நாங்கள் சுதேச முஸ்­லிம்கள், இலங்கை முஸ்­லிம்கள் என்ற அடை­யா­ளத்தை தொடர்ந்து நாம் கடைப்­பி­டிக்­க வேண்டும்.

தமழ் மக்­களின் 30 ஆண்­டு­கால விடு­தலைப் போராட்­டத்தை நாங்கள் பார்த்தோம். இந்­தியா பாது­காப்பு வழங்கும் என்று அவர்கள் கடைசி வரையும் நம்­பி­னார்கள், 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆந் திகதி முள்­ளி­வாய்க்­காலில் பல ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் கொல்­லப்­பட்­ட­போது மன்னார் கட­லி­லி­ருந்து 18 மைல்­க­ளுக்கு அப்பால் ஏழு கோடி தமி­ழர்கள் இருந்­தார்கள், எவ­ருமே வர­வில்லை. ஆகவே, இந்­தி­யா­விற்கும் இலங்கைக் கரைக்கும் இடையே 18 மைல்­கள்தான், எத்­த­னையோ ஆயி­ரக்­க­ணக்­கான மைல்­க­ளுக்கு அப்பால் உள்ள முஸ்லிம் நாடுகள் எமக்கு பாது­காப்­ப­ளிக்கும், அர­ணாக இருக்கும் என நம்­பு­கின்­றார்கள். அந்த நம்­பிக்கை, யதார்த்தமற்­றது.

நாங்கள் சுதேச முஸ்­லிம்கள். இலங்­கையில் பிறந்து இலங்கை தேசிய கீதத்­திற்கு மதிப்­ப­ளிப்­ப­வர்கள், இலங்­கையின் அர­சியல் யாப்­புக்கு மதிப்­ப­ளிப்­ப­வர்கள், இலங்­கையின் தேசியக் கொடிக்கு மதிப்­ப­ளிப்­ப­வர்கள். ஆகவே, மற்­றைய சமூ­கங்­களைப் போலவே எமக்கு அத்­தனை உரி­மை­களும் இருக்­கின்­றன. நாங்கள் இரண்­டாந்­தர பிர­ஜை­க­ளாக இருக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அந்த வகை­யில்தான் அதற்­கூ­டா­கத்தான் இலங்­கையின் தேசியப் பெரு­வாழ்வில் நாம் இணைந்து கொள்ள வேண்டும்.

2012 ஆம் ஆண்­டுதான் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்தப் பிரச்­சினை ஆரம்­ப­மா­னது. அது வரையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இருந்த இனப்­பி­ரச்­சினை என்ன­வென்றால் அநா­க­ரிக தர்­ம­பால தொடக்கம் 1990 இல் வீர விதான இயக்கம் வரை அவர்கள் இரண்டு விட­யங்­களைக் குறிப்­பிட்­டார்கள். முத­லா­வது முஸ்­லிம்­களின் குடித்­தொகைப் பெருக்கம், இது எதிர்­கா­லத்தில் இலங்­கைக்கு ஆபத்­தாக அமை­யலாம். இரண்­டா­வது வியா­பா­ரத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம்.

ஆனால், 2012 ஆம் ஆண்டு திடீ­ரெனத் தோன்­றிய பொது பல­சேனா இயக்கம், அந்த விவா­தங்­களைக் கலைத்துப் போட்­டது. அந்த விடயம் தேவை­யில்லை. முஸ்­லிம்கள் வியா­பா­ரத்தில் முதன்­மை­யாக இருக்­கி­றார்­களா? நீங்கள் அவர்­க­ளுக்கு எதி­ராக போட்­டி­யி­டுங்கள், அவர்கள் அதிகம் பிள்ளை பெற்றால் நீங்­களும் பிள்ளை பெறுங்கள், அது­வல்ல இங்­குள்ள பிரச்­சினை, அதை­விட ஆபத்­தா­ன­வர்கள் முஸ்­லிம்கள். அவர்­க­ளுக்கு வெளி அடை­யாளம் ஒன்று இருக்­கின்­றது, நூறு கோடி முஸ்­லிம்கள் வெளியில் இருக்­கின்­றார்கள், அந்த சிந்­தனை இலங்­கைக்கும் வந்­தி­ருக்­கின்­றது. ‘மிலிடென்ட் இஸ்லாம்’ என்ற புதிய சிந்­தனை உரு­வாகி இருக்­கின்­றது. இது என்­றா­வது ஒரு நாள் இலங்­கையின் தேசிய பாது­காப்­புக்கு பாரிய அச்­சு­றுத்­த­லா­க­வரும் என்­பதுதான் கல­கொட அத்தே ஞான­சார தேரர் முன்­வைத்த வாதம். இதற்கு சிங்­கள மக்கள் மத்­தியில் பாரிய வர­வேற்­பு இருந்­தது. முன்னாள் பிர­தமர் தி.மு.ஜய­ரத்ன ஒரு முறை சொன்னார், அவர் மட்­டு­மல்ல மேலும் பலர் குறிப்­பிட்­டார்கள் ‘பொது­ப­ல­சேனா சொல்­லு­கின்ற அனைத்து விட­யங்­க­ளையும் நான் ஏற்றுக் கொள்­கின்றேன். எந்தப் பிழையும் இல்லை, சொல்லும் விதம் மட்டும்தான் தவறு’ எனக் குறிப்­பிட்­டி­ருந்தார். சிங்­கள சமூகம் பெரு­ம­ள­விற்கு பொது பல­சே­னாவை வர­வேற்­ற­தற்­கான காரணம், 1990ஆம் ஆண்­டிற்கு பின்னர் முஸ்லிம் சமூ­கத்தில் ஏற்­பட்ட மாற்றம், இஸ்­லா­மிய மய­மாக்கம், கலா­சார அடை­யா­ளங்­களில் ஏற்­பட்ட பல மாற்­றங்கள். அந்த நேரத்தில் இஸ்லாம் பற்றி மக்கள் மத்­தியில் இருந்த பயத்­தினை பொது பல­சேனா பயன்­ப­டுத்திக் கொண்­டது.

பின்னர் 2019 இல் நடந்த அனர்த்­தத்தை நாங்கள் பார்த்தோம். முஸ்­லிம்கள் எதிர்­கொண்ட சவால்கள், துன்­பங்கள் இந்தத் தலை­முறை வாழும் வரை அந்த நினை­வுகள் இருக்கும். எத்­த­னையோ பேர் சிறையில் அடைக்­கப்­பட்­டார்கள், முஸ்­லிம்கள் தேசிய நீரோட்­டத்­தி­லி­ருந்து அந்­நி­ய­மாக்­கப்­பட்­டார்கள். அதன் பின்னர், கொவிட் பெருந்­தொற்றில் அதே­போன்ற பிரச்­சினை.

இன்­றைய சூழ்­நி­லையில் புதி­ய­தொரு நிலைமை இலங்­கையில் தோற்­றி­யி­ருக்­கின்­றது. சுருக்­க­மாகச் சொன்னால், ஜே.ஆர்.ஜய­வர்­தன என்ற அர­சி­யல்­வா­தியை அனை­வரும் சபிப்­பார்கள். அவர் கொண்­டு­வந்த திறந்த பொரு­ளா­தாரம், அர­சி­யல்­யாப்பு இவை­கள்தான் இலங்­கையின் சாபம் எனக் குறிப்­பி­டு­வார்கள். ஆனால், அதில் வேடிக்கை என்­ன­வென்றால், மீண்டும் ஒரு தடவை ஜே.ஆர். வெற்­றி­ய­டைந்­தி­ருக்­கின்றார். அவ­ரது திறந்த பொரு­ளா­தார முறை வெற்­றி­ய­ளித்தி­ருக்­கின்­றது. அர­சியல் யாப்பு வெற்­றி­ய­ளித்­தி­ருக்­கின்­றது. அறு­பத்தி ஒன்­பது இலட்சம் சிங்­கள மக்கள் வாக்­க­ளித்து கோட்­டா­பய ராஜ­பக்ஷ வெற்றி பெற்ற சிங்­கள அரசு என்ற கனவு சிங்­கள தேசி­ய­வா­தி­களின் கண்­முன்­னா­லேயே சிதைந்து போய், அவர்கள் யாரை துரோகி என்று சொன்­னார்­களோ, சிங்­கள பௌத்த கலா­சா­ரத்தின் எதிரி என யாரைச் சொன்­னார்­களோ அவ­ரிடம் கொண்டு சென்று அந்த ஆணை­யினை ஒப்­ப­டைத்­தார்கள்.

இந்தக் குறி­யீடு எதனைக் காட்­டு­கின்­ற­தென்றால், சிங்­கள தேசி­ய­வாதம், இலங்­கையின் லிபரல் பொரு­ளா­தா­ரத்தின் முன்னால் தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கின்­றது, மண்­டி­யிட்­டி­ருக்­கின்து. ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் கொள்­கை­களை முன்­னெ­டுத்துச் செல்­வ­தாகக் கூறப்­ப­டும் ரணில் விக்­ர­ம­சிங்­க­விடம் அறு­பத்­தொன்­பது இலட்சம் மக்­க­ளு­டைய ஆணை­யினை ஒப்­ப­டைத்­தி­ருக்­கின்­றார்கள். இதுதான் தற்­போது ஏற்­பட்­டி­ருக்­கின்ற மாற்றம்.

சிங்­கள தேசி­ய­வா­திகள் நளின் டீ சில்வா, அம­ர­சே­கர போன்­ற­வர்கள் போருக்­கெ­தி­ராக சிங்­களை மக்­களை ஒன்று திரட்­டி­ வெற்­றி­யீட்­டி­னா­லும்­கூட, ஜே.ஆர் உரு­வாக்­கிய பொரு­ளா­தார முறைக்கு எதி­ராக சிங்­கள மக்­களை அணி­தி­ரட்ட முடி­ய­வில்லை. சிங்­கள இளை­ஞர்கள், மத்­தி­ய­தர வர்க்கம் தொடர்ந்து கடந்த இரு­பது ஆண்­டு­க­ளாக அமெ­ரிக்­க­ம­ய­மா­வதைத் தடுக்க முடி­ய­வில்லை.

கொக்கா கோலா, மெக்­டொனால்ட், பெப்சி கோலா எல்லா சர்­வ­தேச பிராண்ட்­களும் ஆசி­யா­வி­லேயே அதி­க­மாக இலங்­கையில் வேரூன்றி இருக்­கின்­றன. புதிய தலை­முறை அமெ­ரிக்க மேலைத்­தே­ய­ம­ய­மாகிக் கொண்­டி­ருக்கும் நிலையில், இலங்­கையில் ஒரு சிங்­கள பௌத்த அரசை உரு­வாக்க வேண்­டு­மென்ற நளின் டீ சில்­வா­வி­னது கனவு அவர் கண் முன்­னா­லேயே சிதைந்து போனதை அவர் பார்த்தார்.

அவரும் அவ­ரது பிள்­ளை­களும் அமெ­ரிக்­கா­விற்குச் சென்று குடி­யே­று­வதை அவரால் தடுக்க முடி­ய­வில்லை. அமெ­ரிக்­காவில் இருந்த நிலையில் கடந்த மே 02 ஆந் திகதி அவர் மர­ண­ம­டைந்தார்.

புதிய சூழ்­நிலை மத­வாதம், இன­வாதம் அனைத்தையும் அப்­பு­றப்படுத்­தி­யி­ருக்­கி­ற­து. முஸ்­லிம்கள் தேசிய நீரோட்­டத்தில் இணைந்து கொள்­வ­தற்­கான மிகப் பெரிய வாயப்­புக்கள் திறந்து விடப்­பட்­டி­ருக்­கின்­றன. அதனைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்டும். குறிப்­பாக கிழக்கில் அடை­யாள அர­சியல் செய்யும் அர­சியல் கட்­சி­க­ளுக்கு புதிய வாய்ப்­புகள் காணப்­ப­டு­கின்­றன. புதிய சிந்­த­னை­க­ளையும் அணு­கு­மு­றை­க­ளையும் அவை மேற்­கொள்ள வேண்டும்.

1994 தொடக்கம் 2019 வரை­யான 25 வரு­ட­கா­ல­மாக செய்­து­வந்த அர­சியல் இனி சாத்­தி­ய­மா­கப்­போ­வ­தில்லை. அதா­வது ஒரு அமைச்­ச­ரவை அமைச்சர், இரண்டு இரா­ஜாங்க அமைச்­சர்கள் என சில பேரம் பேசும் அர­சி­ய­லாகவே அது இருந்­தது. அடுத்த ஐந்து ஆண்டு அர­சி­யலில் பெரும் மாற்­றங்கள் ஏற்­பட முடியும். சிந்­தனை மாற்­றங்கள், பொது மக்­களின் கண்­கா­ணிப்பு, சிங்­கள சமூக ஊட­கங்­களின் செயற்­பாடு இவை அனைத்­திலும் முஸ்­லிம்கள் தங்­க­ளது அர­சியல் நிலைப்­பா­டு­களை எவ்­வாறு மேற்­கொள்­வது என்ற விட­யத்தில் ஒரு புதிய சிந்­தனை, முக்­கி­ய­மாக குறிப்­பி­டு­வ­தாயின் சிவில் சமூ­கத்தின் ஒன்­றி­ணைவு எமக்கு தேவை­யாக இருக்­கின்­றது. உதா­ர­ண­மாக முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம், மத­ர­சாக்கள் போன்ற விட­யங்­களில் கடந்த பத்து வரு­டங்­க­ளாக ஒரு பொதுக் கருத்தை எட்ட முடி­யாமல் இருக்­கின்­றது. இதற்­காக சிவில் சமூகக் கூட்­ட­மைப்­பிற்­கான தேவை இருக்­கின்­றது. அதில் உல­மாக்கள் மட்­டு­மல்ல, புத்­தி­ஜீ­விகள், தொழில்­வல்­லு­நர்கள், குறிப்­பாக பெண்கள் அங்கம் வகிக்க வேண்டும். இன்றை­ய நிகழ்­வுக்கு ஐம்­பது வீதம் பெண்கள் சமூ­க­ம­ளித்­தி­ருப்­பது மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது.

நாங்கள் எல்­லோரும் எதிர்­பார்ப்­பது, கடந்த 20 ஆண்­டு­களில் இலங்­கையில் கல்வி, தொழில்­வாண்மை மற்றும் நிரு­வாகத் துறையில் பெண்­களின் எழுச்சி அதி­க­ரித்­துள்­ளது.

முஸ்­லிம்­களின் அர­சியல் தொடர்பில் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்­கான பாதை வழி­காட்­டி­யொன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அனை­வரும் அதற்கு பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும். அதே­போன்று, எல்­லொரும் உடன்­ப­டக்­கூ­டிய குறைந்­த­பட்ச பொதுத் திட்டம் உரு­வாக்­கப்­பட வேண்டும்.

முஸ்லிம் சமூ­கத்தில் காணப்­படும் மிகப் பெரும் குறை­பாடு சிவில் அமைப்­புக்கள் தொண்டு நிறு­வ­னங்கள் குறை­வாகக் காணப்­ப­டு­கின்­ற­மை­யாகும். அதற்கு ஒரு கார­ணமும் இருக்­கின்­றது. அதி­க­மான முஸ்லிம் இளை­ஞர்கள், சமூ­கத்தின் கிறீம் என்று சொல்­லப்­ப­டக்­கூ­டி­ய­வர்கள், தொழில்­வாண்­மை­யா­ளர்கள், வைத்­தி­யர்கள் போன்­ற­வர்கள் அர­சி­யலில் இருந்து நீக்கம் செய்­யப்­பட்­ட­வர்கள் போன்று இருக்­கின்­றனர். அவர்கள் அர­சி­யலின் பக்கம் திரும்­பு­வ­தில்லை, அவர்கள் ஆன்­மீ­கம்­சார்ந்தே இருக்­கின்­றனர். முஸ்லிம் சமூ­கத்தின் இளை­ஞர்­க­ளுக்கு மிகப் பெரும் பொறுப்பு இருக்­கின்­றது. இல­வசக் கல்­வியின் பயன்­களை சமூ­கத்­திற்கு திருப்பிக் கொடுக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது.

சிங்­கள சமூ­கத்­தினர் சக­வாழ்­விற்­கான அழைப்­பினை தொடர்ந்து விடுத்­துக்­கொண்டே இருக்­கின்­றனர். நான் சிங்­களப் பிர­தே­சத்தில் பிறந்து வளர்ந்­தவன். ஈஸ்டர் தாக்­குதல் தொடர்பில் மூன்று மாதங்­களின் பின்னர் அவர்கள் மறந்து விட்­டார்கள். கடைகள் பகிஷ்­க­ரிக்­கப்­பட்­போது கூட கடை­க­ளுக்கு வந்து ‘பன்­ச­லையில் பிரச்­சினை பின்னர் உங்கள் கடைக்கு வரு­கின்றோம்’ என கூறி­விட்டுச் சென்­றார்கள். அந்­த­ளவு நல்­ல­மனம் படைத்­த­வர்கள். எப்­போதும் சக­வாழ்­விற்கு தயா­ரா­ன­வர்கள்.

இயக்க வெறி மிகவும் மோச­மாக இருக்­கின்­றது. சமூக ஊட­கங்­களைப் பார்த்தால், கிழக்கு அர­சி­யலைப் பொறுத்­த­வரை தென்­னி­லங்­கை­யினை விட அதிக அர­சியல் விழிப்­பு­ணர்ச்சி இருந்­தாலும் ‘அர­சி­யல்­வா­தி­களில் யார் துரோகி?’ என்ற விவா­தமே போய்க்­கொண்­டி­ருக்­கின்­றது. அந்த பழைய விட­யங்­களை விட்­டு­விட்டு புதிய நிலை­மைக்­கேற்ப நாங்கள் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்டும். குறிப்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்த வேண்டும்.

இது வரை நாம் பேசாத பல விட­யங்கள் காணப்­ப­டு­கின்­றன. குறிப்­பாக தப்லீக் ஜமாஅத் என்ற அமைப்பு. அது தொடர்­பாக ஆக்­க­பூர்­வ­மான விட­யங்­களை முன்­வைக்க வேண்டும். அது ஒரு வலு­வான அமைப்பு. முஸ்லிம் சமூ­கத்தில் ஐம்­பது வீத­மா­ன­வர்கள் மத்­தியில் அவர்­க­ளது கருத்­துக்கள் பர­வி­யி­ருக்­கின்­றன. அதி­க­மான பள்­ளி­வா­யல்கள் அவர்­க­ளது கட்­டுப்­பாட்டில் இருக்­கின்­றன. மனித வளமும் பொரு­ளா­தார வளமும் கொண்ட ஒரு அமைப்பு. அது குறித்த விவா­தங்கள், கலந்து­ரை­யா­டல்­களை நாம் மேற்­கொள்ள வேண்டும்.

அதி­க­மான முஸ்­லிம்கள் தற்­போது பேசிக்­கொள்­கின்ற விடயம் ஜனா­தி­பதித் தேர்­தலில் யாருக்கு வாக்­க­ளிப்­பது என்­பது பற்­றி­ய­தாகும். எனது கருத்து அந்தக் கேள்­வி­யினை மாற்றிக் கேட்­கலாம். முஸ்­லிம்கள் அடுத்த ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து எதிர்­பார்ப்­பது என்ன? எப்­ப­டி­யா­ன­தொரு ஜனா­தி­பதி இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு தேவை? இந்தக் கேள்­விக்கு எம்மால் தெளி­வாக பதி­ல­ளிக்க முடி­யு­மென்றால் மிகவும் இல­கு­வாக எல்­ல­லோரும் முடிவெடுக்க முடியும்.

முக்­கி­ய­மாக முஸ்­லிம்­க­ளுக்கு தேவை­யான ஜனா­தி­பதி சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்­டக்­கூ­டிய ஜனா­தி­பதி. எந்த நிலைமை வந்­தாலும், மிகவும் நெருக்­க­டி­யான சூழ்­நி­லை­யிலும், பக்­கச்­சார்­பற்று முடி­வெ­டுக்கக் கூடிய ஆளு­மை­யாக இருக்க வேண்டும்.

1956 ஆம் அண்டு தொடக்கம் 2019 வரை­யான அத்­தனை வன்­மு­றை­க­ளுக்கும் காரணம் ஐந்து மணித்­தி­யா­லங்­களில் கட்­டுப்­ப­டுத்­தக்­கூ­டிய வன்­மு­றைகள் பல நாட்கள் நீடித்­த­மைக்குக் காரணம் இலங்­கையில் சட்ட ம் ஒழுங்கு மீறப்­பட்­ட­மை­யாகும். அது இது­வரை திருத்­தப்­ப­ட­வில்லை.

2022 மே மாதம் 22 ஆந் திக­தி இலங்­கையின் பிர­புத்­துவ அர­சி­யல்­வா­திகள் தெரிந்து கொண்ட ஒரு விட­யம்தான் சட்டம் ஒழுங்கு மீறப்­பட்டால் என்ன நடக்கும் என்­ப­தாகும். பொலிஸார் முடக்­கப்­பட்டால் என்ன நடக்கும் என்­பதை அமைச்­சர்கள் தமது வீடுகள் எரிந்­த­போ­துதான் முதல் தட­வை­யாக புரிந்து கொண்­டார்கள். ஆகவே, சட்டம் ஒழுங்கை நிலை­நாட்­டக்­கூ­டிய, மிகவும் நெருக்­க­டி­யான நேரங்­களில் முக்­கி­ய­மான தீர்­மா­னங்­களை நியா­ய­மாக எடுக்­கக்­கூ­டிய தலைவரே எமக்குத் தேவை.

இலங்­கையில் முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் குறிப்­பி­டு­கின்ற ஒரு விடயம் இலங்கை அர­சியல் யாப்பில் பௌத்த மதத்­திற்கு முதன்மை இடம் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யாகும். என்னைப் பொறுத்­த­வரை அதில் எவ்­வித பிரச்­சி­னையும் இல்லை. பௌத்த மதத்­திற்கு முதன்மை இடம் வழங்­கப்­பட்­டாலும், அதற்­க­டுத்து எல்­லோ­ரு­டைய மத, கலா­சார உரி­மை­களும் இருக்­கின்­றன. அதி­கம்பேர் சொல்­கி­றார்கள் புதிய அர­சியல் யாப்பு மதச் சார்­பற்ற நாடாக இலங்­கை­யினைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்டும் என. இது சுத்த அபத்தம். அப்­ப­டி­யான ஒரு விடயம் தேவை­யில்லை. ஏனென்றால், எமது அண்டை நாடான இந்­தியா 1947 ஆம் ஆண்டு தொடக்கம் மதச் சார்­பற்ற நாடா­கவே காணப்­ப­டு­கின்­றது. அர­சியல் யாப்­பிலும் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் உலகில் ஆகக் கூடிய இனக் கல­வ­ரங்கள் 1947 தொடக்கம் 2022 புது டில்லி வரையில் இந்­தி­யாவில் தான் இடம்­பெற்­றுள்­ளன. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான முஸ்­லிம்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றனர். எனவே இவை­யெல்லாம் வெறும் அலங்­கா­ரங்கள் மாத்­தி­ர­மே­யாகும். அப்­ப­டி­யான கோரிக்கைக்கு நாம் செல்வோமானால், மீண்டும் உறங்கிக்கிடக்கும் இனவாத மதவாத சக்திகளை தூண்டிவிடுவதற்கு தூபமிடுவதாகவே அமையும்.

இந்தக் காலகட்டத்தில் ஊடகவியலாளர்களுக்கு மிகப் பெரும் பொறுப்பு இருக்கின்றது. இலங்கையில் பாரிய அரசியல் பொருளாதார மாற்றங்கள் விரைவில் ஏற்படவிருக்கின்றன. அது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.

இலங்கையில் இதுவரை காலமும் இருந்த ஏ. பீ அணிகளுக்கு மேலதிகமாக சீ அணியும் களமிறங்கி இருக்கின்றது. அவர்களும் அடுத்த தேர்தலுக்குப் பின் அரசியலில் பிரதான இடத்தினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இருக்கின்றது. அந்த அணியும் இலங்கையின் யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு, அவர்கள் 60 வருடங்களாக கொண்டிருந்த இந்திய எதிர்ப்பினை கைவிட்டிருக்கின்றார்கள், அதேபோன்று சிறுபான்மையினர் தொடர்பில் பல்வேறு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்து வருகின்றார்கள், என்.பீ.பீ என்ற அமைப்பிற்கூடாக அவர்களது லிபரல் முகத்தை வெளியே கொடுத்திருக்கின்றார்கள், டில்வின் சில்வாவின் போல்சுவிக்வாதமும், லால்காந்தவின் லிபரல் வாதமும் ஆகிய இரண்டு முகங்களைக் காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே, இலங்கையில் அடுத்துவரும் ஆண்டுகளில் சிறுபான்மை மக்களுக்கு எந்த அணி வந்தாலும் அந்த சிறப்பான வாய்ப்புக்கள் இருக்கின்றன. பொதுவாக சமூக ஊடகங்களும் தேசிய ஒற்றுமைக்கு வலுவூட்டி வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. முஸ்லிம்களும் அத்தகைய விதத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இங்கிருக்கும் ஊடகவியலாளர்கள் இலங்கை முஸ்லிம்களை புதிய இலங்கைக்காக தயார்படுத்துவது எப்படி என்ற விடயம் தொடர்பில் கட்டுரைகளை விவாதங்களை கருத்தப் பரிமாறல்களை ஆரம்பிக்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.