ஜனாஸாக்க­ளை எரித்த­வர்­க­ளை சட்­டத்தின் முன் நிறுத்த முஸ்லிம் சமூகம் தயங்­கு­வது ஏன்?

0 128

கலாபூஷணம் ஏ.ஸீ.ஏ.எம். புஹாரி (கபூரி)

கொவிட்19 நோயினால் மர­ணித்த உடல்­களை அவ­ரவர் சமயக் கிரி­யை­க­ளின்­படி இறுதிக் கிரி­யை­களைச் செய்­ய­வி­டாது மெத்­தப்­ப­டித்த மேதா­விகள் சிலர் முஸ்லிம் சமூ­கத்தின் மீது கொண்ட காழ்ப்­பு­ணர்வின் கார­ண­மாக அவர்­களின் பிரே­தங்­க­ளையும் எரிக்க வேண்டும் என்று விடாப்­பி­டி­யாக நின்று எரித்­த­தனால் இவர்கள் என்ன இலா­பத்தைப் பெற்றுக் கொண்­டார்கள்.

சர்­வ­தே­சத்­தி­லுள்ள சகல மக்­களும் தத்­த­மது விருப்­பப்­படி இறுதிக் கிரி­யை­களை நிறை­வேற்­றலாம் என்று அனு­ம­தி­ய­ளித்த போதும் இலங்­கையில் உள்ள ஒரு சில வக்­கி­ர­புத்­தியும், பொறாமை உணர்வும் கொண்­ட­வர்கள் மாத்­திரம் ஆட்­சி­யா­ளர்­க­ளைக்­கூட மௌனி­க­ளாக ஆக்கி முஸ்லிம் பிரே­தங்­களை அடக்­க­வி­டாது அடம்­பி­டித்து புதுப்­புது வகை­யான கருத்­துக்­களைக் கண்­டு­பி­டித்து தங்­களின் தாகத்தைத் தீர்த்துக் கொண்­டனர் என்ற உண்­மைகள் இப்­போது கசிந்து கொண்­டி­ருக்­கின்­றன. அன்­றைய ஜனா­தி­பதி கோட்­ட­பாய அவர்­களே இந்த உண்­மையை ஒப்­புக்­கொண்டு புத்­தகம் எழு­தி­யுள்ளார்.

இந்­நி­கழ்வு நடந்து பல வரு­டங்­க­ளாகி விட்­டன. இப்­போது இவை தூசு தட்­டப்­ப­டு­வதன் நோக்கம் என்ன?

அமைச்சர் ஜீவன் தொண்­டமான் அரசு மன்­னிப்­புக்­கேட்க வேண்­டு­மென்றும் அமைச்­ச­ர­வைக்கு பத்­தி­ர­மொன்றைச் சமர்ப்­பிக்­க­வுள்ளேன் என்றும் கூறு­கிறார்.

இந்­நி­கழ்வு நடை­பெற்ற காலத்தில் தன்னால் எதையும் செய்ய முடி­யா­தி­ருந்த ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்று ஜனா­தி­ப­தி­யாகி இந்தக் கீழ்த்­த­ர­மான செய­லுக்­காக காத்­தான்­கு­டியில் நடை­பெற்ற பொது மக்கள் சந்­திப்­பின்­போதும் பாரா­ளு­மன்­றத்­திலும் மன்­னிப்புக் கேட்­கிறார். இவ்­வி­ட­யத்தில் எந்­தத்­த­வறும் இழைக்­காத இன்­றைய ஜனா­தி­பதி மன்­னிப்புக் கேட்க வேண்­டி­யதன் நியாயம் என்ன? சிந்­திப்­போமா?

ஜனா­தி­ப­தியின் மன்­னிப்பு உரைக்­குப்பின் பேசிய எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச ஜனா­ஸாக்­களை எரி­யூட்­டி­யது மிகவும் பிழை­யான செயல் என்று எடுத்­து­ரைத்­தபின் அமைச்சர் அலி ஸப்ரி அவர்­களும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்­களும் காரா­சா­ர­மாக உரை­யாற்­றினர். ஏனைய முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் யாருமே இது சம்­மந்­த­மாக உரை­யாற்­றிய தக­வல்கள் எமக்கு ஊட­கங்கள் வாயி­லாகக் கிடைக்­க­வில்லை.
மன்­னிப்புக் கேட்­டு­விட்டால் மட்டும் போதுமா? இச்­செ­யலைச் செய்­த­வர்கள், செய்யத் தூண்­டி­ய­வர்கள் இன்னும் மௌனி­க­ளாக இருக்­கி­றார்­களே! ஏன்? இவர்­களை இப்­ப­டியே விட்­டு­விட்டு முஸ்லிம் சமூகம் மௌனம் சாதிக்­க­லாமா? குற்­ற­மி­ழைத்தோர் தண்­டிக்­கப்­பட வேண்டும். அவ்­வாறு தண்­டனை வழங்­கப்­பட்­டால்தான் இனி­வரும் காலங்­க­ளி­லா­வது நமது சமூ­கத்தின் மீது அடக்­கு­முறை செலுத்த முனை­வோ­ருக்கு இது ஒரு பாட­மாக அமை­யு­மல்­லவா?

சமூக விரோதி ஸஹ்­ரானின் தவ­றான சிந்­த­னை­க­ளினால் இன்­று­வரை முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­பட்ட பாரிய இழப்­புக்­க­ளி­லி­ருந்து மீள முடி­யாது தவித்துக் கொண்­டி­ருக்கும் இவ்­வே­ளையில் இவ்­வா­றான ஒரு நிகழ்வு நடக்­க­வி­ருக்­கின்­றது என்ற புல­னாய்­வுத்­து­றையின் அறிக்­கை­யைக்­கூட அலட்­சியம் செய்து எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­கா­தி­ருந்த நாட்டின் பாது­காப்­புக்கே பொறுப்­பா­க­வி­ருந்த அன்­றைய ஜனா­தி­பதி மைத்­திரியை நீதி­மன்றம் விசா­ரித்து கோடிக்­க­ணக்­கான ரூபாய்­களை நஷ்­ட­ஈ­டாகச் செலுத்த வேண்­டு­மென்ற நீதி­மன்­றத்தின் தீர்ப்பை நாம் ஏன் முன்­மா­தி­ரி­யாகக் கொள்ள முடி­யாது? இவ்­வி­ட­யத்தில் முஸ்லிம் சமூகத் தலை­மைகள் ஏன் மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வதில் அச­மந்தப் போக்கில் இருக்­கின்­றனர் என்­பதைப் புரிந்­து­கொள்ள முடி­யாமல் உள்­ளது.

இவ்­வி­ட­யத்தில் அர­சியல் கட்­சி­களின் தலை­மைகள் முன்­னுக்கு வரு­வதில் சில விமர்­ச­னங்கள் ஏற்­ப­டலாம். அத­னால்தான் இலங்­கைவாழ் முஸ்லிம் சமூ­கத்தின் ஏக பிர­தி­நி­தி­க­ளான அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா இவ்­வி­ட­யத்தைக் கையி­லெ­டுத்து ஏனைய நிறு­வ­னங்­க­ளி­னதும் சட்ட வல்­லு­னர்­க­ளி­னதும் ஆலோ­ச­னை­களைப் பெற்று உயர் நீதி­மன்றில் வழக்­கொன்றைத் தாக்கல் செய்தால் என்ன? என்ற ஒரு கருத்தை அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்­கான ஒரு பகி­ரங்க மடலை எழு­தினேன். அது விடி­வெள்ளி வாராந்த இதழில் பிர­சு­ர­மாகி இருந்­தது. இவ்­வி­டயம் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பரி­சீ­ல­னையில் உள்­ள­தாக எனக்கு வாய் மூல­மான ஒரு பதில் கிடைத்­தது ஆறு­த­லாக இருந்­தது.

இவ்­வி­ட­யத்தில் ஏனைய சமூக சேவை நிறு­வ­னங்கள் கரி­சனை காட்­டாமல் இருப்­பதன் கார­ணத்தை அறிய முடி­யா­துள்­ளது. இது தேவை­யில்­லாத ஒரு விடயம் என்று அவர்கள் கரு­து­கி­றார்­களா? அல்­லது பெரும்­பான்மைச் சமூ­கத்தில் உள்ள தங்­க­ளது முக்­கி­யஸ்­தர்­க­ளான கூட்­டா­ளி­களைப் பகைத்துக் கொள்ள வேண்­டி­யேற்­படும் என்று எண்­ணு­கி­றார்­களா? என்­பதைப் புரிந்து கொள்ள முடி­ய­வில்லை.

அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் ஒவ்­வொரு ஊரி­லு­முள்ள கிளைகள் இது சம்­மந்­த­மாக ஆராய்ந்து தலை­மை­ய­கத்­திற்கு தங்­க­ளது ஆலோ­ச­னை­களை வழங்­கி­யி­ருக்­கலாம். அவர்­களில் எத்­தனை பேர் இந்த விட­யத்தை அறிந்து வைத்­தி­ருக்­கார்­களோ?

இவ்­வாறே ஒவ்­வொரு ஊரி­லு­முள்ள பள்­ளி­வாசல் பரி­பா­லன சபைகள், சம்­மே­ள­னங்கள், சமூக சேவை நிறு­வ­னங்கள் இவ்­வி­ட­யத்தைப் பற்றி சிந்­தித்துப் பார்த்­த­துண்டா?

அனைத்­துக்கும் மேலாக ஷூறா கவுன்ஸில், இலங்கை ஜமா­அதே இஸ்­லாமி, தப்லீக் ஜமாஅத், அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் இயக்கம், அகில இலங்கை கதீப்­மார்கள் சம்­மே­ளனம், முஸ்லிம் மீடியா போரம், முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள், பல்­கலைக் கழ­கங்கள் சார்ந்த புத்தி ஜீவிகள், ஆசி­ரிய சங்­கங்கள் என்­ப­வர்கள் ஏன் இன்னும் தங்­க­ளது உணர்­வு­களை வெளிக்­கொ­ண­ர­வில்லை.

இவ்­வா­றான நிறு­வ­னங்கள் ஏன் இவ்­வி­ட­யத்தில் கரி­சனை காட்­ட­வில்லை என்­பதைப் புரிந்து கொள்ள முடி­யாமல் உள்­ளது. சமூக சேவைக்­காக என்றே சங்­கங்­க­ளையும், இயக்­கங்­க­ளையும் வைத்துக் கொண்­டி­ருப்­ப­வர்கள் இவ்­வி­டயம் சம்­மந்­த­மாக அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மா­வுக்கு அழுத்தம் கொடுப்­ப­துடன் அவர்­க­ளுக்கு உற்­சா­கத்­தையும், தைரி­யத்­தையும் கொடுக்­க­லா­மல்­லவா? ஏன் அர­சியல் இயக்­கங்­கள்­கூட தங்­க­ளது ஒத்­து­ழைப்பை வழங்கி தட்டிக் கொடுக்­க­லா­மல்­லவா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.