அடுத்த பொதுத் தேர்தல் : முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு எப்படி அமையும்?

0 127

ஐ.சுபைதர்

இலங்­கையில் பல்­வேறு பெயர்­களில் முஸ்லிம் கட்­சிகள் பல செயற்­பட்டு வந்­தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தேசிய காங்­கிரஸ் ஆகிய 3 கட்­சிகள் மாத்­தி­ரமே கடந்த பொதுத் தேர்­தலில் பாரா­ளு­மன்ற அங்­கத்­து­வத்தைப் பெற்­றன.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கடந்த பொதுத் தேர்­தலில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் தனித்தும், புத்­தளம் மாவட்­டத்தில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர­சு­டனும், ஏனைய மாவட்­டங்­களில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யு­டனும் இணைந்து போட்­டி­யிட்­டது.

இந்த வகையில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் ஒரு ஆச­னமும், அம்­பாறை மாவட்­டத்தில் 2 ஆச­னங்­களும், திரு­கோ­ண­மலை மற்றும் கண்டி ஆகிய மாவட்­டங்­களில் தலா 1 ஆச­னமும் என்ற அடிப்­ப­டையில் மொத்தம் 5 ஆச­னங்கள் இக்­கட்­சிக்கு கிடைத்­தது.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் அம்­பாறை மாவட்­டத்தில் தனித்தும் புத்­தளம் மாவட்­டத்தில் முஸ்லிம் காங்­கி­ர­சு­டனும், ஏனைய மாவட்­டங்­களில் ஐக்­கிய மக்கள் சக்­தி­யு­டனும் இணைந்து போட்­டி­யிட்­டது.

இந்த வகையில் வன்னி, அநு­ரா­த­புரம், அம்­பாறை, புத்­தளம் ஆகிய மாவட்­டங்­களில் தலா 1 ஆசனம் என்ற அடிப்­ப­டையில் 4 ஆச­னங்கள் இக்­கட்­சிக்கு கிடைத்­தது.

தேசிய காங்­கி­ர­சுக்கு அம்­பாறை மாவட்­டத்தில் 1 ஆசனம் கிடைத்­தது. இதன்­படி மொத்தம் 225 பாரா­ளு­மன்ற ஆச­னங்­களுள் 10 ஆச­னங்கள் முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு கிடைத்­தன.

இந்த 10 ஆச­னங்­களுள் தேசிய காங்­கிரஸ் மட்டும் ஆளுங்­கட்­சிக்­கான தனது ஆத­ரவு நிலைப்­பாட்டை தேர்தல் முடிந்த கையோடு பகி­ரங்­க­மாக வெளிப்­ப­டுத்­தி­யது. முஸ்லிம் காங்­கி­ரசும், அகில இலங்கை மக்கள் காங்­கி­ரசும் எதிர்க்­கட்­சியில் இணைந்து செயற்­பட்­டன.

இந்­நி­லையில் முஸ்லிம் காங்­கி­ரசின் தலைவர் ரவூப் ஹக்­கீமைத் தவிர பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நஸீர் அஹமத், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம், எம்.எஸ்.தௌபீக் ஆகியோர் பல சந்­தர்ப்­பங்­களில் ஆளுங்­கட்­சி­யோடு இணைந்து வாக்­க­ளித்­தனர்.

அதே­போல அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் றிசாத் பதி­யு­தீனைத் தவிர பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இஷாக் றஹ்மான், அலி­சப்ரி றஹீம், எஸ்.எம்.எம்.முஸர்ரப் ஆகியோர் ஆளுங்­கட்­சி­யோடு இணைந்து செயற்­ப­டு­கின்­றனர்.

இந்த ஆண்டு வரவு செல­வுத்­திட்ட ஒதுக்­கீட்டு நிதி ஆளுங்­கட்சிப் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மாத்­திரம் வழங்­கப்­பட்­டது. இந்த நிதியை எதிர்க்­கட்சிப் பக்­க­மி­ருந்து செயற்­படும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான றிசாத் பதி­யுதீன், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசீம்ன், அலி சாஹிர் மெள­லானா போன்றோர் பெற்­றி­ருக்­கின்­றனர்.

இந்­நி­லையில் பாம்­புக்குத் தலையும், மீனுக்கு வாலும் காட்டும் விலாங்கு மீனைப்­போல தமது பிர­தி­நி­திகள் இருப்­ப­தாக வாக்­கா­ளர்­க­ளி­ட­மி­ருந்து குற்­றச்­சாட்­டுக்­களும் எழுந்­தன.

அடுத்த ஒரு பொதுத் தேர்­தலில் இந்த 10 ஆச­னங்­களும் முஸ்லிம் கட்­சி­க­ளுக்கு மீளக் கிடைக்­குமா என்ற கேள்வி தற்­போது உள்­ளது. காரணம் கடந்த காலங்­களில் அர­சோடு இணைந்து 20 ஆம் திருத்­தத்­திற்கு வாக்­க­ளித்­தமை, ஜனா­ஸாக்கள் பல­வந்­த­மாக எரித்­த­போதும் அர­சுக்கு மறை­முக ஆத­ரவு வழங்­கி­யமை, போன்ற செயற்­பா­டு­க­ளினால் முஸ்லிம் கட்­சிகள் மீது முஸ்லிம் சமுகம் அடைந்­துள்ள அதி­ருப்தி நிலை­யாகும்.

இது ஒரு­பு­ற­மி­ருக்க முஸ்லிம் கட்­சிகள் தனித்துப் போட்­டி­யி­டு­வதா அல்­லது பெரிய கட்­சி­க­ளுடன் இணைந்து போட்­டி­யி­டு­வதா என்ற நிலை இன்­னொரு புறம். சேர்ந்து போட்­டி­யி­டு­வ­தாயின் எந்தக் கட்­சி­யுடன் இணைந்து போட்­டி­யி­டு­வது என்ற நிலை மற்­றொ­ரு­புறம்.

தனித்துப் போட்­டி­யி­டு­வ­தாயின் முஸ்லிம் காங்­கி­ரசைப் பொறுத்­த­வரை மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 1 ஆச­னமும், அம்­பாறை மாவட்­டத்தில் ஒரு ஆச­னமும் பெறக் கூடிய சூழ்­நி­லையே உள்­ளது. (அம்­பாறை மாவட்­டத்தில் ஐக்­கிய மக்கள் சக்­திக்கும் வாக்­குகள் உள்­ளன. கடந்த முறை முஸ்லிம் காங்­கிரஸ் விருப்பு வாக்கு அதிகம் பெற்­ற­மை­யி­னா­லேயே 2 ஆச­னங்கள் இக்­கட்­சிக்கு கிடைத்­தது.)

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தனித்துப் போட்­டி­யி­டு­மாயின் வன்னி மாவட்­டத்தில் ஒரு ஆசனம் பெறக் கூடிய சூழ்­நிலை உள்­ளது. தேசிய காங்­கி­ர­சுக்கு கடந்த போதுத் தேர்தல் போன்று வாக்­குகள் அளிக்­கப்­ப­டு­மாயின் அது அம்­பாறை மாவட்­டத்தில் தனது 1 ஆச­னத்­தையும் தக்க வைத்துக் கொள்ளும் சூழ்­நிலை உள்­ளது.

இன்­றைய சூழ்­நி­லையில் பெரும்­பா­லான முஸ்லிம் வாக்­குகள் ஐக்­கிய மக்கள் சக்­தியின் பக்கம் உள்­ளமை தெரி­கின்­றது. கருத்துக் கணிப்­பு­க­ளின்­படி முஸ்லிம் வாக்­குகள் ஐக்­கிய தேசியக் கட்­சிப்­பக்கம் கணி­ச­மான அளவு திரும்­ப­வில்லை என்ற நிலை உள்­ளது. எனவே எந்தக் கட்­சி­யுடன் சேர்ந்து போட்­டி­யிட்டால் ஆச­னங்­களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற ஒரு நிர்ப்பந்த நிலை முஸ்லிம் கட்சிகளுக்கு உள்ளது.

குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டால் மாத்திரமே கண்டி மாவட்டத்தில் அதன் தலைவர் வெற்றிபெறக் கூடிய சூழ்நிலை உள்ளது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அடுத்த பொதுத் தேர்தலுக்கான முஸ்லிம் கட்சிகளின்  கூட்டு எப்படி அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டியுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.