எதிர்க்கட்சித் தலைவர் பதவி: சம்பந்தன், மஹிந்த பொருத்தமற்றவர்கள் தமக்கு தருமாறு கோருகிறது ஜே.வி.பி.

0 774

பிரதான எதிர்க்கட்சிப் பதவிக்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பும், மஹிந்த ராஜபக்ஷவும் மோதிக்கொண்டு தமது கடமையை கைவிட்டுவிடுகின்றனர். ஆனால் நாம் இன்றும் எதிர்க்கட்சிக்கான வேலையை செய்கின்றோம். மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கொடுத்துப் பாருங்கள் நாங்கள் உரிய கடமையை செய்து காட்டுகின்றோம் என ஜே.வி.பி தெரிவித்தது.

நிகழ்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இன்று இந்த நாட்டில் பொறுப்புக் கூறக்கூடிய  தலைமைத்துவம் ஒன்றில்லாது போய்விட்டது. ஜனாதிபதி – பிரதமர்  இடையில்  முரண்பாடுகள் நிலவுகின்றன. ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது வேறொன்று. பிரதமர் நாட்டின் குற்றவாளிகளை காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் ஆட்சி நடத்தி வருகின்றார். பலமான எதிர்க்கட்சி என கூறிக்கொண்டு  செயற்படும் எவரும் உறுதியாக இல்லை. அவர்களும் அதிகார மோகத்தில் மாத்திரமே செயற்பட்டு வருகின்றனர். மஹிந்த ராஜபக் ஷ அணியினர் எந்த நேரமும் அவர்களுக்கு ஏதேனும் பதவி கிடைக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தில் மட்டுமே செயற்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தில் சட்டவிரோதமாக பிரதமர் பதவியை கைப்பற்றினர். அது பறிபோனதும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றி பாராளுமன்றத்தை ஆக்கிரமிக்க முயற்சித்து வருகின்றனர். கடந்த சில பாராளுமன்ற அமர்வுகளின் போதெல்லாம் அவர்கள் எதிர்க்கட்சி ஆசனம் குறித்த நோக்கத்தில் மட்டுமே செயற்பட்டு வந்தனர். அதேபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு இத்தனை காலம் எதிர்க்கட்சி அதிகாரத்தில் இருந்தது. ஆனால் பிரதான எந்தவொரு பிரச்சினையையும் அவர்கள் கையாளவில்லை. மாறாக வடக்கின் ஒரு சில அரசியல் பிரச்சினைகள் குறித்து மட்டுமே பேசினார்கள்.

ஆனால், மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியின் உண்மையாக பொறுப்பினை சரியாக செய்து வருகின்றோம். மக்களின் நேரடியான பிரச்சினைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணி மட்டுமே கலந்துரையாடி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது. ஆகவே எமக்கு அங்கீகாரம் இல்லாது போனாலும்கூட  இன்றும் உண்மையான எதிர்க்கட்சி நாம்தான். மக்கள் எமது கொள்கையை, நிலைப்பாட்டினை ஆதரித்து மக்களின் மூலமாகவே அதிகாரத்தை வழங்கும் வரையில் எமது போராட்டம் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்படும். இன்று மக்கள் விடுதலை முன்னணியின் ஆறு உறுப்பினர்களுக்கு மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர். அவர்களாக எம்மீது நம்பிக்கை வைத்து எமக்கு ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. பாராளுமன்றத்தில் எமக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தை கொடுத்துப் பாருங்கள் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பது தெரியும் என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.