ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அக்குறணை மக்களை விமர்சித்தமை தவறு
தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து சபையில் ஹலீம் சுட்டிக்காட்டு
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் ஒரு இனத்தையும், பிரதேசங்களையும் தவறாக சித்திரிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அக்குறணை தீ விபத்து தொடர்பில் சுயாதீன ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறிப்பிட்ட கருத்து தவறு என்பதை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. இவ்வாறான நிலைமை மீண்டும் ஏற்பட கூடாது என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.அப்துல் ஹலீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மது வரி கட்டளைச் சட்டம் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல்கள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
அக்குறணை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவம் பற்றி அவதானம் செலுத்த விரும்புகிறேன். அக்குறணை நகரில் உள்ள மிலானோ ரெஸ்டுரன்ட் துரதிஸ்டவசமாக தீ அனர்த்தத்துக்கு உள்ளானது. இந்த தீ பரவல் காரணமாக மூன்று வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாகின. இச்சம்பவம் அக்குறணை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த சம்பவத்தை அனைத்து ஊடகங்களும் முக்கியமானதொரு செய்தியாக வெளியிட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் சுயாதீன செய்திப் பார்வை என்ற நிகழ்ச்சியில், அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்த தீ விபத்தை திரிபுபடுத்தி, இதனை ஒரு தீ விபத்து என்று மாத்திரம் குறிப்பிடாமல் அக்குறணை மக்களை மிக மோசமாக விமர்சித்து கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். இதனால் அக்குறணை மக்கள் கொதித்தெழுந்துள்ளார்கள்.
இவரது முறையற்ற கருத்து தொடர்பில் அக்குறணை இளைஞர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும், பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்கள். இந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.
நிலைமை மோசமடைவதற்கு முன்னர் அக்குறணை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் வர்த்தக சங்கம் முன்வந்து இதற்கு பேச்சுவார்த்தை ஊடாக தீர்வு காண்பது குறித்து ஆராய்ந்தனர். இந்த விடயம் பற்றி அவர்களுடன் நானும் பேசியிருந்தேன், இந்த நிறுவனம் அதே நிகழ்ச்சியில் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
இந்த விடயம் குறித்து அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளருடன் உரையாடிய போது தவறிழைக்கப்பட்டுள்ளதை அவர் முழு மனதுடன் ஏற்றுக் கொண்டார்.
தமது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஊடாக மன்னிப்பு கோருவதாக குறிப்பிட்டார். அதற்கமைய மன்னிப்பு கோரியுள்ளனர். இவ்வாறு இந்த பிரச்சினை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் இருந்துக் கொண்டு முறையற்ற வகையில் செயற்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அக்குறணை வெள்ளப்பெருக்கு பற்றி பேசியிருந்தார். இந்த வெள்ளப்பெருக்கு அனர்த்தத்துக்கு தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்த போது துரதிஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆகவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.- Vidivelli