ஐ.சுபைதர்
அக்கரைப்பற்று அஸ்ஸபா கனிஸ்ட வித்தியாலய பெயர் மாற்ற விவகாரத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தேவையற்ற அழுத்தங்களைப் பிரயோகித்தாரா என்ற சந்தேகம் முஸ்லிம் சமுகத்தின் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இப்பாடசாலையின் பெயரை லீடர் அஸ்ரப் கனிஸ்ட வித்தியாலயம் என மாற்றுமாறு கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திசாநாயக்க 2024.01.02 ஆம் திகதி வழங்கிய கடிதத்தின் மூலம் இச்சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
“கௌரவ கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களினால் இன்று எனக்கு நேரடியாக வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைவாக இப்பாடசாலையின் பெயர் மாற்றப்படுகின்றது” என்றே கல்வி அமைச்சின் செயலாளர் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாத பாடசாலைச் சமுகம் இது தொடர்பாக கல்முனை மேல் நீதிமன்றத்தில் EP/HCK/Writ/417/2024 ஆம் இலக்கத்தில் வழக்குத் தாக்கல் செய்து இப்பெயர் மாற்றக்கட்டளைக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவும் பெற்றுள்ளது. இந்த விடயத்தில் பாடசாலை சமுகத்திற்கு தேவையற்ற பணச் செலவும், மன உளைச்சலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விடயத்தில் அரச சட்டத்தரணிகள் கொடுப்பனவு, வாகன செலவு, காகிதாதிகள் செலவு என அரசாங்கத்திற்கும் பல்வேறு தேவையற்ற செலவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாடசாலைப் பெயர் மாற்றம் ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. அது கல்வி அமைச்சுக்கு உரியது. அதற்கென சில நடபடி முறைகள் உள்ளன. எனவே இங்கு ஆளுநர் தேவையற்ற தலையீடுகளைச் செய்துள்ளார் என்பதே இவ்வழக்கிற்கான வழக்கெழு காரணியாக உள்ளதாகச் சொல்லப்படுகின்றது.
உண்மையில் இந்த விடயத்தில் ஆளுநர் தலையீடு செய்தாரா அல்லது அவரது பெயர் இங்கு திட்டமிட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்புகின்றனர். ஆளுநர் கிழக்கு மாகாண அமைச்சுச் செயலாளர்கள் நியமன விடயத்தில் முஸ்லிம் விரோதப் போக்குடன் செயற்படுகின்றார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதற்கு வலுச் சேர்த்து ஆளுநர் – முஸ்லிம் சமுக விரிசலை மேலும் அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாக இது இருக்குமோ என்பதே இச்சந்தேகத்திற்கான காரணமாகும்.
ஏனெனில் எந்த ஒரு அதிகாரியும் தாபன விதிக்கோவை, நிதிப்பிரமானங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் நாட்டில் அமுலில் உள்ள சட்ட திட்டங்களுக்கமையவே பணிபுரிய வேண்டும். வேறு யாரும் சொன்னார்கள் அல்லது அழுத்தம் கொடுத்தார்கள் என்ற அடிப்படையில் பணிபுரிய முடியாது. அப்படி செயற்படுவது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
இதனை தாபன விதிக்கோவை தொகுதி II அத்தியாயம் XLVII ஆம் பிரிவு 8.1, 8.2, 8.3 என்பன தெளிவாகக் குறிப்பிடுகின்றன.
நிலைமை இவ்வாறிருக்க இலங்கை நிர்வாக சேவையின் சிரேஸ்ட அதிகாரியான கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் தாபன விதிக்கோவை ஏற்பாடுகளைப் புறந்தள்ளி ஆளுநரின் பணிப்புரைக்கமைய பாடசாலையின் பெயரை மாற்றுவதாக ஏன் கடிதம் வழங்கினார் என்பது இங்கு எழுகின்ற நியாயமான கேள்வியாகும்
“ஆளுநர் தனக்கு நேரடியாக வழங்கிய பணிப்புரைக்கமைய’ என்று செயலாளர் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளமையால் ஆளுநர் எழுத்து மூலம் இப்பணிப்புரையை விடுக்கவில்லை என்பது தெரிகின்றது. அப்படியாயின் வாய்மொழி பணிப்புரைக்கமைய ஒரு சிரேஸ்ட நிர்வாக சேவை அதிகாரி செயற்படலாமா, தாபன விதிக்கோவை ஏற்பாடுகள் இவருக்கு தெரியாதா என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விடயமாகும்.
உண்மையில் மேல் மட்டங்களின் பணிப்புரையை ஏற்றுச் செயற்படுகின்ற ஒரு அதிகாரி இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கமையவே அதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பார். இது தான் வழமை. இதன் மூலம் குறித்த அதிகாரி மேல் மட்டத்தையும் திருப்திப்படுத்தலாம். தானும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
இங்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வழங்கிய கடிதத்தைப் பார்க்கும் போது அதில் ஆளுநரின் பெயர் சேர்க்கப்பட்ட விதம் வேண்டுமென்று ஆளுநரின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த எடுக்கப்பட்ட ஒரு முயற்சியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது.
எது எப்படி இருப்பினும் இங்கு இரண்டு விடயங்கள் இருக்கின்றன. ஆளுநர் தொடர்ந்து முஸ்லிம் சமுகத்தைப் புறக்கணிப்பதோடு முஸ்லிம் சமுக விடயத்தில் தேவையற்ற தலையீடுகள் செய்கின்றாரா என்பது ஒன்று.
ஆளுநர் தொடர்பாக முஸ்லிம் சமுகத்திலே தப்பபிப்பிராயத்தை மேலும் உருவாக்கி ஆளுநரை நியமித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான ஒரு கருத்தேற்றத்தை முஸ்லிம் சமுகத்தில் வளர்த்து எதிர் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் ஜனாதிபதிக்கு அளிக்கப்படும் வீதத்தை கணிசமாகக் குறைக்கும் ஒரு செயற்பாடா என்பது இரண்டாவது.
எனவே, இங்கு ஆளுநர் தான் இந்த விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இது தொடர்பில் முஸ்லிம் மக்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்திக்க வேண்டும். தான் வழங்காத ஒரு பணிப்புரைக்கு தனது பெயரை இந்த அதிகாரி பயன்படுத்தியிருந்தால் அவருக்கெதிராக ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாபன விதிக்கோவை தொகுதி II அத்தியாயம் XLVII ஆம் பிரிவு 8.3 க்கமைய இந்த அதிகாரிக்கெதிராக நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும். அதேபோல இந்த அதிகாரியின் இந்த நடவடிக்கை மூலம் அரசுக்கு ஏற்பட்ட நட்டங்களை 1993.07.21 ஆம் திகதிய திறைசேரி சுற்றிக்கைக் கடித இல. எப்.ஐ.என்.320 க்கமைய இந்த அதிகாரியிடமிருந்து மீளப்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் கிழக்கு மாகாணத்தின் நிர்வாகச் சீர்கேடுகளை சீர்செய்யவும் முடியும்.
இதேபோல இந்த நிர்வாகச் சீர்கேட்டு விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய பாரிய கடப்பாடு பொதுச்சேவை ஆணைக்குழு மற்றும் தேசிய கணக்காய்வு திணைக்களத்திற்கும் கூட உண்டு.- Vidivelli