தமிழ் சமூகம் சிறந்த மிதவாத தலைவரை இழந்திருப்பது ஈடுசெய்ய முடியாததாகும்
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் அனுதாபம்
தமிழ் சமூகம் ஒரு சிறந்த பண்பான மிதவாததத் தலைவரை இழந்திருப்பது ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம். ஸுஹைர் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தனின் மறைவையொட்டி விடுத்துள்ள அனுதாபச் செய்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, மறைந்த இரா. சம்பந்தன் இந்நாட்டின் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக அயராது உழைத்து வந்த மிதவாதத் தலைவராவார். அவர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண உழைத்து வந்த அதேநேரம், இந்நாட்டு முஸ்லிம்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளுக்காகவும் குரல் கொடுக்கத் தவறாதவராக இருந்தார்.
1980 களில் வடக்கு கிழக்கில் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்து தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடாத்துவதற்காக எமது கவுன்சில் ஒப் முஸ்லிம் அமைப்பு 1985 இல் முன்னாள் அமைச்சர் மர்ஹும் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் தலைமையில் சென்னைக்கு விஜயம் செய்தது. அத்தூதுக்குழுவுக்கு நான் செயலாளராகக் சென்றிருந்தேன்.
இவ்விஜயத்தின் போது தமிழகத்தில் இருந்த வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் தலைவர்களுடன் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். அவர்களில் இரா. சமபந்தன் குறிப்பிடத்தக்கவராவார். எமது குழுவினரின் வருகையை அறிந்ததும் இன்முகத்துடன் எம்மை வரவேற்று வடக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாட வாய்ப்பளித்தார். எமது தரப்பினர் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் குறித்து முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பில் மிகுந்த அக்கறையோடு கவனம் செலுத்தினார். அந்த சந்திப்பு நான்கு தசாப்தங்களாகியுள்ள போதிலும் இன்றும் பசுமை போன்று உள்ளது.
ஆகவே மறைந்த இரா. சமபந்தனைப் போன்று தமிழ் முஸ்லிம் உறவை மேலும் கட்டியெழுப்புவதில் தமிழ் தலைவர்கள் கவனம் செலுத்துவது காலத்தின் அவசியத் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.- Vidivelli