- தனித்து தீர்மானம் எடுக்க முடியாது என உலமா சபை திட்டவட்டமாக தெரிவிப்பு
- எழுத்துமூல ஒப்புதல் அளிப்பதற்கு முஜிபுர் ரஹ்மானும் அஸாத் சாலியும் மறுப்பு
(எஸ்.என்.எம்.சுஹைல்)
அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதிக்கும் விதத்தில் செயற்பட்ட குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மன்னிப்பு பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகளை சில பௌத்த அமைப்புகளும் பிக்குகளும் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக முஸ்லிம் தரப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான பிரயத்தனங்களையும் அவர்கள் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஒத்துழைப்பை பெற பிக்குகள் குழுவொன்று முயற்சித்து வருகிறது. எனினும், உலமா சபையானது குறித்த சந்திப்புக்கு இதுவரை நேரம் வழங்கவில்லை. அத்துடன், தேரரை விடுவிப்பதற்கு தாம் எந்த வகையிலும் ஒத்தாசை வழங்கப்போவதில்லை என்றும், இதுவிடயத்தில் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது என்றும் உலமா சபை ‘விடிவெள்ளி’க்கு தெரிவித்தது.
இதினிடையே, கடந்த வாரம் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அஸாத் சாலி ஆகியோரை சந்தித்த பிக்குகள் குழுவினர் ஞானசார தேரரை விடுவிப்பதற்கான கடிதமொன்றை தருமாறு கோரிக்கை விடுத்திருந்த போதிலும் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றவாளியாக காணப்பட்டுள்ள, பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி கடந்த மார்ச் 28 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக தேசிய சங்க கூட்டமைப்பு, ராவணா சக்தி, சிங்கள அமைப்புக்கள் உள்ளிட்ட பல அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிக்குகள் கடந்த சில தினங்களாக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களுக்கு விஜயம் செய்து அவர்களிடம் வலியுறுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஞானசார தேரருக்கு விடுதலையளிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மறுத்துள்ள நிலையில் ‘முறைப்பாட்டாளர்களும் முஸ்லிம் சமூகத்தை சார்ந்தவர்களிடமும் மன்னிப்பளிப்பதற்கு இணக்கம் தெரிவித்து எழுத்துமூல ஒப்புதல் பெற்றால் தாம் மன்னிப்பளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்’ ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பிக்குகள் குழுவினர் முறைப்பாட்டாளர்களான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அஸாத் சாலி ஆகியோரை சந்தித்து ஞானசார தேரருக்கு மன்னிப்பளிப்பதற்கான எழுத்துமூல ஒப்புதலை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல்களில் அண்மைக்காலமாக ஈடுபட்டு வந்தனர். மேலும், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் உலமா சபையானது அவர்களை சந்திப்பதற்கான நேரத்தை இதுவரை வழங்கவில்லை என அதன் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடிவெள்ளிக்கு தெரிவித்தார்.
இது தொடர்பில் உலமா சபையின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவிக்கையில், ‘அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கான கோரிக்கையை சில பிக்குகள் குழுக்கள் முன்வைத்து வருகின்றன. ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கான கோரிக்கையை விடுப்பதற்கே அவர்கள் எம்மை சந்திக்க முற்படுகின்றனர். குறித்த பிக்குகள் குழுவினரை சந்திப்பதற்கான எந்தவித தீர்மானத்தையும் உலமா சபை எடுக்கவில்லை.
அத்துடன், ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் எங்களுக்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. குறித்த தேரர் முன்னதாக உலமா சபையின் தலைவரை விமர்சித்ததுடன் அவதூறான வார்த்தைகளை பிரயோகித்திருந்தார். இதன்போது, அதற்கு மன்னிப்பளிக்கப்பட்டது. அது எங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட விடயமென்பதால் நாம் தன்னிச்சையாக தீர்மானம் எடுத்தோம்.
எனினும், தற்போது ஞானசார தேரர் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார். இது விடயத்தில் உலமா சபை தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.
ஞானசார தேரரின் இந்த அவமதிப்பு செயற்பாட்டினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பாதிக்கப்பட்டது. அத்துடன், பலர் மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். பலரும் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளனர். எனவே, இது விடயத்தில் எங்களால் தனித்து தீர்மானம் எடுக்க முடியாது. இதன் காரணமாகவே, நாம் அவர்களை சந்திப்பதற்கு நேரம் கொடுக்காமல் இருக்கிறோம்’ என உலமா சபையின் ஊடக பிரிவு தெரிவித்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், ‘கடந்த வாரம் இராவணா சக்தி அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மூன்று பிக்குகள் என்னை வந்து சந்தித்தனர். ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக ஒப்புதல் கடிதமொன்றை தருமாறு என்னை வேண்டிக்கொண்டனர். அதனை நான் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஜனாதிபதி வேண்டுமென்றால் விடுதலையளிக்கட்டும். மாறாக எங்களை இது விடயத்தில் சம்பந்தப்படுத்தக் கூடாது. நாம் அதற்கு ஒப்புதல் அளிக்கப்போவதில்லை. பிக்குகளை எங்களிடம் அனுப்பி வேறுவகையான சிக்கலை தோற்றுவிக்க ஜனாதிபதி முயற்சிக்கிறார்.
நாங்கள் ஒருபோதும் ஞானசார தேரருக்கு விடுதலை பெற்றுக்கொடுக்க துணைபோக மாட்டோம். ஞானசார தேரர் அவமதித்தது என்னையல்ல, அல்லாஹ்வையும் இஸ்லாத்தையுமாகும். எனவே, இதுவிடயத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமுமே தீர்மானம் எடுக்க வேண்டும்’ என்றார்.
தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அஸாத்சாலி கருத்து தெரிவிக்கையில், ‘ஞானசார தேரர் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதித்து கருத்து வெளியிட்டமைக்காகத்தான் சிறைத்தண்டனை அனுபவிக்கிறார். எனவே, இது விடயத்தில் முழு முஸ்லிம் சமுதாயமுமே மன்னிப்பளித்தால்தான் அவரின் விடுதலை பற்றி யோசிக்கலாமே தவிர என்னால் எதனையும் செய்யமுடியாது.
ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு விடுதலை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு எனக்கு அழுத்தம் வழங்கி வருகின்றனர். எனினும், முறைப்பாட்டாளர் என்றவகையில், நான் அதற்கு இணங்கவில்லை. இனி ஒருபோதும் அதற்கு நாம் இணங்கப்போவதுமில்லை.
அல்லாஹ்வையும் நபியையும் மார்க்கத்தையும் அவமதிக்கும் ஞானசார தேரரை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் மன்னிக்காது. இதே நிலைப்பாட்டில்தான் நான் தொடர்ந்தும் இருக்கிறேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli