இடைநிறுத்தப்பட்டிருந்த திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று மாலை வெளியிடப்பட்டுள்ளதாக கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.முஹைஸ் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
நேற்று வியாழக்கிழமை காலை பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் தம்மை தொடர்பு கொண்டு இது பற்றி அறியத்தந்ததாக குறிப்பிட்ட அவர் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக பெறுபேறுகளை இணையத்தளத்தில் வெளியிட முடியாதுள்ளதாக திணைக்கள அதிகாரிகள் தம்மிடம் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து மாணவிகளை அழைத்துக் கொண்டு இன்றைய தினம் கொழும்பிலுள்ள பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரில் சென்று பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அதிபர் மேலும் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப காரணங்களால் பரீட்சைப் பெறுபேறுகளை அடுத்த வாரமே தபால் மூலமாக பாடசாலைக்கு அனுப்பி வைக்க முடியும் என்றும் அடுத்த வாரமளவிலேயே இணையத்தளத்திலும் வெளியிட முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் கடந்த மே மாத இறுதியில் வெளியிடப்பட்ட போதிலும் திருகோணமலை சாஹிறா கல்லூரியிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய 70 மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. குறித்த மாணவிகள் தமது இஸ்லாமிய கலாசார ஆடையினை அணிந்து பரீட்சைக்குத் தோற்றியதன் காரணமாக பரீட்சை மண்டப விதிமுறைகளை மீறியுள்ளதாக பரீட்சை மேற்பார்வையாளர் முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந் நிலையில் இந்த விவகாரம் ஜனாதிபதி கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் பாராளுமன்றத்திலும் இது தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன.
மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்த விவகாரம் குறித்து தனது கரிசனையை வெளியிட்டிருந்தது. இந்நிலையிலேயே நேற்றைய தினம் இம் மாணவிகளின் பெறுபேறுகள் ஒரு மாதத்தின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli