‘தொழுதுகொண்டிருந்த என்னை எட்டி உதைத்து பன்றி இறைச்சியை ஊட்ட முயன்றனர்’ இதுவா பொலிஸ் விசாரணை?

0 120

எப்.அய்னா

தங்க நகை தொடர்­பி­லான விவ­கார விசா­ரணை தொடர்பில், தன்னை கைது செய்த படல்­க­முவ பொலிஸார், பன்றி இறைச்­சியை ஊட்ட முயற்­சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள அழுத்தம் கொடுத்­த­தாக மினு­வாங்­கொடை பகு­தியை சேர்ந்த மொஹம்மட் நிப்லி எனும் வர்த்­தகர் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

கடந்த 14 ஆம் திகதி இந்த கைது நடந்­த­தாக கூறும் நிப்லி, இது தொடர்பில் நீதி­மன்­றுக்கும் தெரி­வித்­த­தா­கவும், படல்­க­முவ பொலி­ஸா­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்க தயா­ராகி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்­து­வ­விடம் விடி­வெள்ளி வின­விய போது, வர்த்­தகர் மொஹம்மட் நிப்லி கூறு­வதைப் போல ஏதேனும் அழுத்­தங்கள், அநீ­திகள் நடந்­தி­ருப்பின் அது தொடர்பில் பொலிஸ் தலை­மை­ய­கத்­துக்கோ அல்­லது உரிய தரப்­பி­ன­ருக்கோ முறைப்­பா­ட­ளிக்கும் பட்­சத்தில் அது குறித்து விசா­ரணை நடாத்த தயார் என குறிப்­பிட்டார்.

மொஹம்மட் நிப்லி முன்பு தங்க நகை கடை நடாத்­தி­யவர். தற்­போது தங்க நகை­களை உரி­மை­யா­ள‌ர்­க­ளிடம் இருந்து கொள்­வ­னவு செய்து வர்த்­தகம் செய்து வரு­பவர். மார்க்க செயற்­பா­டு­க­ளுடன் கூடு­த­லாக நெருக்­க­மா­னவர். மினு­வாங்­கொ­டையைச் சேர்ந்த அவர், படல்­க­முவ பொலி­ஸாரால், திவு­ல­பிட்­டிய பகு­தியை அண்­மித்த இட­மொன்றில் வைத்து கடந்த 14 ஆம் திகதி கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப‌­டு­கின்­றது.

மொஹம்மட் நிப்லி அவர் எதிர்­கொண்ட சம்­பவம் தொடர்பில் இவ்­வாறு குறிப்­பி­டு­கின்றார்.

‘அன்று வெள்­ளிக்­கி­ழமை. நான் வழ­மை­யாக வெள்ளிக்கிழ­மை­களில் வர்த்­தக செயற்­பா­டு­களில் பெரி­தாக ஈடு­ப­டு­வ­தில்லை. மூல பற்றுச் சீட்டு இருப்பின் மட்­டுமே நான் நகை­களை கொள்­வ­னவு செய்வேன். அப்­படி இருக்­கையில், கடந்த 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப. 10.00 மணி­ய­ளவில் ஒரு தரகர் தொலை­பே­சியில் அழைத்தார். நகை­களை விற்க ஒருவர் வந்­தி­ருப்­ப­தா­கவும், எனக்­காக காத்­துக்­கொண்­டி­ருப்­ப­தா­கவும் கூறினார்.இத­னை­ய­டுத்து நான் திவு­ல­பிட்டி பகு­திக்கு சென்றேன்.

அப்­போது அங்கு வைத்து படல்­க­முவ பொலிஸார் என் கைக­ளுக்கு விலங்­கிட்டு முகத்தை மூடி வேன் ஒன்றில் என்னை ஏற்­றிக்­கொண்டு எங்­கெங்கோ சென்­ற‌னர்.

அவர்கள் தங்க நகை திரு­டர்கள் இரு­வரை பிடித்­துள்­ள­தா­கவும் அவர்கள் நகை­களை தன்­னி­டமே விற்­றுள்­ள­தா­கவும் பொலிஸார் கூறினர். மூல பற்றுச் சீட்டு இல்­லாத எந்த நகை­க­ளையும் நான் கொள்­வ­னவு செய்­வ­தில்லை என உறு­தி­யாக நான் கூறி­ய­துடன், அவர்­க­ளிடம் ஒரு போதும் நகை­களை கொள்­வ­னவு செய்­த­தில்லை என்­ப­தையும் தெரி­வித்தேன்.

ஆனால் அவர்கள் என்னை தொடர்ந்து திருட்டு நகை­களை வாங்­கி­ய­தாக ஒப்­புக்­கொள்­ளு­மாறு வற்­பு­றுத்­தினர். மூன்று பவுண் நகை­களை முதலில் கோரினர். பின்னர் 12 பவுண் நகை­களை தர வேண்டும் எனவும் இல்­லா­விட்டால் 2 வரு­டங்கள் வரை சிறையில் இருக்க வேண்டிவரும் எனவும் அவர்கள் அச்­சு­றுத்­தினர்.

பொலிஸில் இருந்த போது அவர்கள் என்னை ‘ தம்­பியா’ (பேச்சு வழக்கில் முஸ்­லிம்­களை அழைக்க பயன்­ப­டுத்­தப்­படும் அநா­க­ரீ­க­மான சிங்­கள சொல்) என்ற‌ சொற்­பி­ர­யோகம் ஊடா­கவே அழைத்­தனர்.

அரபா தினத்­தன்றும் நான் பொலிஸ் நிலை­யத்­தி­லேயே இருக்க வேண்டி வந்­தது. அன்று நான் நோன்பு பிடித்­தி­ருந்தேன். தொழுது கொண்­டி­ருந்த போது என்னை எட்டி உதைந்து ‘ தம்­பியா’ எனும் சொல்லால் விழித்து, உனக்கு இங்கு வணங்க முடி­யாது எனவும் அதற்கு விடவும் மாட்டோம் எனவும் கூறினர். ஆனால் அவர்கள் திரு­டர்கள் எனக் கூறி கைது செய்­தி­ருந்­த­வர்­க­ளுக்கு சிகரட் உள்­ளிட்ட அனைத்தும் தாரா­ள­மாக பொலிஸ் அனு­ச­ர­ணை­யி­லேயே கிடைத்­தது.

இதன்­போது பொலிஸார் கோரும் தங்­கத்தை அவர்­க­ளுக்கு தர வேண்டும் என தொடர்ச்­சி­யாக குறிப்­பிட்ட அவர்கள், ஒரு கட்­டத்தில் பன்றி இறைச்­சியை எடுத்து வந்து வாய் அருகே வரை கொண்டு வந்து அதனை ஊட்­டு­வ­தாக மிரட்டி குற்­றத்தை ஒப்­புக்­கொள்­ளு­மாறு கூறினர்.

பின்னர் மீண்டும் பெரு­நா­ளைக்கு இரு தினங்­களின் பின்னர், நான் பள்­ளி­வா­ச­லுக்கு போய்­கொண்­டி­ருந்த போது வழியில் வைத்து என்னை கைது செய்து வீட்­டுக்கு அழைத்து சென்று வீட்­டையும் சோதனை செய்­தனர். பின்னர் என்னை மினு­வாங்­கொடை நீதி­மன்றில் 1447, 1448 ஆகிய இரு வழக்­கி­லக்­கங்­களின் கீழ் நீதி­மன்றில் ஆஜர் செய்­தனர்.

நீதி­மன்றில் எனக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ரணி பொலிஸ் நிலை­யத்தில் நடந்த கொடு­மை­களை நீதி­மன்றில் கூறிய போது, நீதிவான் பொலி­ஸாரை எச்­ச­ரித்து எனக்கு பிணை­ய­ளித்தார்.’ என நிப்லி குறிப்­பிட்டார்.

உண்­மையில் பொலிஸ் விசா­ர­ணை­களின் போது, கைது செய்­யப்­ப­டுவோர் அல்­லது விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டுவோர் அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வது ஒன்றும் புதிய விட­ய­மல்ல. எத்­தனை உயர் நீதி­மன்ற தீர்ப்­புக்கள் இருந்­தாலும் இன்னும் பொலிஸ் நிலை­யங்­களின் குற்­றங்­களை ஒருவர் மீது கட்டி, விசா­ர­ணை­களை நிறைவு செய்யும் பழக்கம் மாறி­ய­தாக தெரி­ய­வில்லை.

இந்த சம்­ப­வத்தை பொறுத்­த­வரை, கைது செய்­யப்­பட்­டவர் முஸ்­லிமாக இருந்­தமை, அவ­ரது ஆடை (ஜுப்பா) முஸ்லிம் கலா­சா­ரத்தை பிர­தி­ப­லிக்கும் வண்ணம் இருந்­த­மையை மையப்­ப­டுத்தி மத ரீதி­யி­லான வெறுப்­பு­ணர்வு தூண்­டப்­பட்டு, குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள வற்­பு­றுத்­தப்­பட்­டுள்­ள­தாக தெரி­கி­றது.

எனினும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர், இக்­குற்­றச்­சாட்டை அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இல்லை. உண்­மையை கண்­ட­றிய விசா­ரணை வேண்டும் எனவும், பாதிக்­கப்­பட்­டவர் முறைப்­பா­ட­ளித்தால் விசா­ரணை செய்யத் தயார் எனவும் பொலிஸ் ஊடக பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

அதன்படி, பொலிஸ் தலைமையகத்தில் இன்று (27) முறைப்பாடளிக்க எதிர்பார்ப்பதாக வர்த்தகர் நிப்லி விடிவெள்ளியிடம் குறிப்பிட்டதுடன், மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறையிடவும் தயாராகி வருவதாக கூறினார்.
உண்மையில் படல்கமுவ பொலிஸார் வர்த்தகர் நிப்லி கூறுவதை போல நடந்துகொண்டிருப்பின் அது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். எனவே இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு முன்வர வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.