இந்தியாவின் வெளிவிவகார அமைச்சராக கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இரண்டாவது தடவையாக அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியினால் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனத்தினைத் தொடர்ந்து அவரது முதலாவது வெளிநாட்டு விஜயம் இலங்கைக்கானதாக அமைந்திருந்தது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் விஜயம் தொடர்பான முன்னேற்பாடுகளை ஆராயவே ஜெய்சங்கர் கொழும்பு வந்ததாக இலங்கை அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவித்தன.
எனினும், நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தற்போது ஒத்திப்போடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
எவ்வாறாயினும், இந்த ஒரு நாள் விஜயத்தின் போது இந்தியாவின் நிதியில் தற்போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பில் அவர் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கில் அமையவுள்ள அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் மற்றும் திருகோணமலையில் நிறுவப்படவுள்ள கைத்தொழில் வலயம் ஆகியவற்றிற்கு இந்த விஜயத்தின் போது முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவருடனான சந்திப்பின் போது, ஐக்கிய மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான ரவூப் ஹக்கீம், ஜீ.எல்.பீரிஸ், வீ.ராதாகிருஷ்ணன் மற்றும் பி.திகாம்பரம் உள்ளிடோர் கலந்துகொண்டனர்.
எனினும், சுகயீனம் காரணமாக மனோ கணேசனும், மன்னாரில் தங்கியிருந்தமையினால் றிசாத் பதியுதீனும் இந்த சந்திப்பில் பங்கேற்கவில்லை. இதேவேளை, பாராளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் மலையக எம்.பிக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் எம்.பிக்களையும், மலையகத்திலுள்ள தமிழ் எம்.பிக்களையும் இரு குழுக்களாகச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தார்.
வழமையாக இலங்கை வரும் நேரங்களில் எல்லாம் முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேச்சு நடத்தும் கலாநிதி ஜெய்சங்கர், இந்த முறை முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்காமல் சென்றமை பாரிய கேள்விக்குறியினை தோற்றுவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் முகங்கொடுத்து வருகின்றனர். தமிழ் சமூகம் எதிர்நோக்கியதைப் போன்ற பிரச்சினைகளை வரலாற்று நெடுங்கிலும் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கி வருகின்றது.
குறிப்பாக தற்போது கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான பல செயற்பாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான நிலையில் இந்த சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் அயல் நாடான இந்தியா செவிமடுக்க வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
அதற்காக வேண்டி சில முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையாவது இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்திருக்க வேண்டும். மாறாக தமிழ் மற்றும் மலையக சமூகத்தினைச் சேர்ந்த எம்.பிக்களை மாத்திரம் சந்தித்து விட்டு முஸ்லிம் எம்.பிக்களை சந்திக்காமல் சென்றமை பாரிய கவலையளிக்கும் செயற்பாடாகவுள்ளது.
இதனால், எதிர்க்காலத்தில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற்கொள்ளும் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கட்டாயம் முஸ்லிம் சமூகத் தலைவர்களை சந்திக்க வேண்டும். இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமும் உயர் ஸ்தானிகரும் மேற்கொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாகும்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஏனைய அரசியல் தலைவர்களுடன் சென்று பேசமால், தனியாகச் சென்று பேசுவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம் தலைவர்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திக்காமை மிகவும் கவலையளிக்கின்றது. இது தொடர்பில் அவருக்கு கடிதமொன்றை எழுதவுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான றிசாத் பதியுதீன், ஊடகவியலாளரொருவரிடம் கூறியுள்ளார். இந்த விடயம் மிகவும் அவசியமான தொன்றாகும். ஆனால் எந்தளவு நடக்கும் என்பது தான் கேள்விக்குறியாகும். எவ்வாறாயினும், இலங்
கைக்கு உத்தியோகபூர்வ விஜயங்களை மேற் கொள்ளும் சர்வதேச தலைவர்களை இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரதிதிகள் சந்தித்து இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை முன் வைக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை கட்சி அரசியலை மறந்து அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.- Vidivelli