ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்தவர்களில் 83 வீதமானோர் சட்டவிரோதமாக வந்தவர்களே
உறுதிப்படுத்தியது சவூதி அரசாங்கம்
சவூதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 1,300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் யாத்திரை மேற்கொள்ள முறைப்படி பதிவு செய்யாதவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த தகவலை சவூதி அதிகாரபூர்வமாக உறுதி செய்தது. யாத்திரை மேற்கொண்டவர்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியின் கீழ் வெகு தூரம் நடந்து வந்ததும், தங்கும் வசதி இல்லாததும் இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சவூதி அரசின் செய்தி நிறுவனமான சவூதி பிரெஸ் ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் இந்தியா உட்பட சுமார் 10 நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிகபட்சமாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 658 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 630 பேர் முறைப்படி பதிவு செய்யாதவர்கள்.
வெப்பத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 4.65 இலட்சம் பேருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்களில் 1.4 இலட்சம் பேர் முறைப்படி ஹஜ் யாத்திரைக்கு பதிவு செய்யாதவர்கள் என்றும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் ஃபஹத் அல்-ஜலாஜெல் தெரிவித்துள்ளார். மேலும், பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவூதியில் இந்த ஆண்டு யாத்திரை மேற்கொண்டவர்களின் உயிரிழப்புக்கு காலநிலை மாற்றம் பிரதான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு யாத்திரை மேற்கொள்பவர்களின் வயதும் காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் சவூதியில் சராசரியாக சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மினாவில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக சுமார் 2,400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இதே போல மக்காவுக்கு அருகில் கடந்த 1990 இல் ஏற்பட்ட சன நெரிசலில் சுமார் 1,426 பேர் உயிரிழந்தனர். கடந்த 1994 இல் 270 பேர், 1998 இல் 118 பேர் சவூதியில் யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் உயரிழந்தனர்.
கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் மக்கள் அதிகம் கூடும் மதம் சார்ந்த நிகழ்வுகளில் சுமார் 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் சவூதியில் மட்டும் 5,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 40க்கும் மேற்பட்ட தனித்தனி நிகழ்வுகளில் மொத்தமாக 2,200 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை சி.என்.என். உடன் பேசிய ஹிரு ஜுமர்டியா, தனது 86 வயதான தந்தை, ஜூன் 17 அன்று மக்காவின் தென்கிழக்கில் உள்ள மினாவில் உள்ள தனது கூடாரத்தில், உயிரிழந்ததாக கூறினார்.
“அவர் தூங்கிக் கொண்டிருந்தார், இதற்கு முன் நோயின் அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லை. ஹஜ் யாத்திரையின் போது அவர் நலமுடன் இருப்பதாக அனைவரும் கூறினர்” என்றார்.
சென்டோனோ 2018 இல் ஹஜ்ஜுக்காக பதிவுசெய்து, இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகரத்திலிருந்து தனது 83 வயதான மனைவி மற்றும் அண்டை வீட்டாருடன் மக்காவுக்குப் பயணம் செய்துள்ளார்.
இஸ்லாமிய நம்பிக்கையின்படி, ஹஜ்ஜின்போது இறப்பதும் மக்காவில் அடக்கம் செய்யப்படுவதும் ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது, பல முஸ்லிம்கள் தங்கள் முதுமைக் காலத்தில் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக பல வருடங்களாக பணத்தைச் சேமித்து பயணம் செய்கிறார்கள்.
“அவர் மக்காவில் அடக்கம் செய்யப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று ஜுமர்தியா கூறினார். தான் புனித யாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்போது தனது தந்தையின் கல்லறைக்குச் செல்வேன் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.
சுமார் 241,000 இந்தோனேசிய யாத்திரிகர்கள் இந்த ஆண்டு மக்காவிற்கு பயணம் செய்துள்ளதாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவர்கள் எதிர்வரும் ஜூலை 7 இல் நாடு திரும்பவுள்ளனர்.
இந்தோனேசிய மத விவகார அமைச்சகத்தின் தரவுகளின்படி, இந்த ஆண்டு புனித யாத்திரையில் இறந்த பெரும்பாலான இந்தோனேசியர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்ஜின் போது நூற்றுக்கணக்கான இந்தோனேசியர்கள் மரணிப்பது வழக்கமாகும். கடந்த ஆண்டு, 773 பேர் புனித யாத்திரையின்போது இறந்ததாக அமைச்சகத்தின் பதிவுகள் தெரிவிக்கின்றன.
தீவிர வெப்பநிலையைக் கண்காணிக்கும் காலநிலை நிபுணரும் வானிலை வரலாற்றாசிரியருமான மாக்சிமிலியானோ ஹெர்ரேரா, சி.என்.என். இடம் கூறுகையில், இப்பகுதியில் உள்ள பாலைவனங்கள் “பகலை விட இரவில் மிக வேகமாக வெப்பமடைகின்றன. இந்நிலை இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு வரை இல்லை,” எனக் கூறினார்.
“அனைவரும் கொடிய வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் துரதிர்ஷ்டவசமாக இம்முறை ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையால் நான் ஆச்சரியப்படவில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.
“மக்காவின் அதிக வெப்பத்தில் வெளியில் அதிக நேரத்தைச் செலவிடுவது மரண ஆபத்திற்கு இட்டுச் செல்கிறது… அடுத்து வரும் ஹஜ் யாத்திரைகளின்போது உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் என இருக்கும் என்று நான் பயப்படுகிறேன்.”- Vidivelli