நாட்டின் அபிவிருத்தி பற்றி நான் கனவு காண்கிறேன்
ஆபத்தான தொங்கு பாலத்திலிருந்து இலங்கைத் தாய்த் திருநாடு எனும் குழந்தையை பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளேன் என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
இலங்கையின் பிரதான உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் நேற்று (26) காலை கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடன் இறுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சீனாவின் எக்ஸிம் வங்கியுடன் நேற்று பீஜிங்கில் இறுதி உடன்பாடு எட்டப்பட்டதோடு அதற்கான முறையான நடைமுறைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் இது நற்செய்தி என்று தெரிவித்த ஜனாதிபதி, சிலர் ஜனாதிபதி பதவிக்காக கடுமையாக பாடுபடும் நிலையில் தான் நாட்டிற்காக பாடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அவர்கள் தமக்குக் கிடைக்கும் பதவிகளைப் பற்றிக் கனவு காணும் போது, தான் நாட்டின் அபிவிருத்தியைப் பற்றிக் கனவு காண்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று விசேட உரையொன்றை ஆற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் உரையாற்றுகையில், அன்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் இலங்கைத் தாயை ஆபத்தான தொங்கு பாலத்தின் ஊடாக கொண்டு வர முடிந்தது.
ஹுனுவட்டயே நாடகத்தில் வருவதைப் போன்று கடினமான நிலைமையில் குழந்தையைப் பாதுகாப்பதற்கு அஞ்சி எந்த ஆதரவையும் வழங்காத தரப்பினர், குழந்தை தொங்கு பாலத்தை கடக்கும் முன்பே குழந்தையின் உரிமையைக் கேட்டு போராடுகின்றனர்.
கடனை செலுத்த முடியாமல் வங்குரோத்தான நாடென்று முத்திரை குத்தப்பட்ட ஒரு நாடு இரண்டு வருடங்களில் இந்தளவு முன்னேற்றத்தைப் பெற முடிந்திருப்பது வெற்றியாகும், அண்மைய வரலாற்றில் பொருளாதார படுகுழியில் விழுந்த உலகின் எந்த நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வாறான நிலையை அடைந்ததில்லை.
நாடு எதிர்நோக்கும் சவால்களை உண்மையாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கு நடைமுறை தீர்வுகளை வழங்கி, முடிவுகளைக் காட்டிய தன்னுடன் சேர்ந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வீர்களா? இல்லையேல் இன்னும் பிரச்சினையை புரிந்து கொள்ளாத மற்றும் அதிகாரத்திற்காக இருட்டில் தடவிக் கொண்டிருக்கும் குழுக்களுடன் இணைவதா என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
தவறான பாதையில் செல்வதால் ஏற்படும் ஆபத்துக்களை அனைவரும் அறிந்துவைத்துள்ளதால், அது தொடர்பில் தீர்மானத்தை எடுப்பதற்கு மக்களுக்கு முழு உரிமையும் சுதந்திரமும் காணப்படுகிறது.
மக்கள் எடுக்கும் தீர்மானம் ரணில் விக்ரமசிங்கவின் எதிர்காலத்தை தீர்மானிக்காது. அது நாடு மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தையே தீர்மானிக்கும்.
வங்குரோத்து அடைந்து நாட்டின் பொருளாதாரம் படுகுழியில் வீழ்ந்திருந்த நாட்டை மீட்பதற்கு தனது கட்சிக்கு பாராளுமன்ற அதிகாரம் இருக்கவில்லை. தன்னால் நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகளோ தான் நியமித்த அமைச்சரவையோ இருக்கவில்லை. அவை எதுவும் இன்றி உலகையே ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இரண்டு வருடங்களில் நிலையான நாட்டை கட்டியெழுப்ப தன்னால் முடிந்துள்ளது என்றார்.
2022 ஆகஸ்ட் 3 ஆம் திகதி பாராளுமன்றக் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையின்போது, வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப பின்பற்ற வேண்டிய நான்கு அம்சக் கொள்கைகளை நான் நாட்டுக்கு முன்வைத்தேன்.
1. சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து, விரிவான கடன் வசதிகளைப் பெற்று நாட்டில் நிதி ஒழுக்கத்தை ஏற்படுத்துவது,
2. சர்வதேச நிதி மற்றும் சட்ட வல்லுனர்களான Lazard மற்றும் Clifford Chance ஆகியோருடன் இணைந்து கடன் உறுதிப்படுத்தல் திட்டத்தைத் தயாரித்து கடன் வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டுவது,
3. வெளிநாட்டு முதலீட்டை உறுதிப்படுத்திக் கொள்வதோடு, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் கொள்கைகள், சட்ட திட்டங்களை உருவாக்குவதுடன், டிஜிட்டல் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்குவது,
4. இத்திட்டத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டுக்குள் கடனற்ற பொருளாதாரத்தை உருவாக்கி அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவது,
ஆகிய நான்கு அம்சக் கொள்கைகளை அன்று முன்வைத்தேன்.
அன்று நான் குறிப்பிட்ட வேலைத்திட்டம் குறித்தும், அதை எப்படிச் செயல்படுத்துவது என்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவ்வப்போது பாராளுமன்றத்தில் முன்வைத்தேன். இதை நாங்கள் இரகசியமாகச் செய்யவில்லை. அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்டன.
நான்கு அம்சக் கொள்கைகளில் முதல் மூன்று விடயங்களும் இப்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நமது வேலைத்திட்டமும் நாம் கடந்து வந்த பாதையும் சரியானவை என்பதை இது நிரூபிக்கிறது.
கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் வங்குரோத்து முத்திரை குத்தப்பட்ட நாடு என்ற வகையில், இரண்டே ஆண்டுகளில் இந்த மாதிரியான முன்னேற்றத்தை எட்ட முடிந்ததே பாரிய வெற்றியாகும். இவ்வாறு பொருளாதார படுகுழியில் விழுந்த ஏனைய நாடுகளுக்கு, சாதகமான நிலையை எட்ட நீண்ட காலம் பிடித்தது. அண்மைய வரலாற்றில், உலகில் எந்த நாடும் இவ்வளவு சிறப்பான வெற்றியை இவ்வளவு குறுகிய காலத்தில் பெற்றதில்லை.
நமது பொருளாதாரம் வீழ்ந்துள்ள படுகுழி தொடர்பில் நாம் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தோம். அதற்குக் கொடுக்கப்பட வேண்டிய சரியான தீர்வுகளை நாங்கள் அறிந்திருந்தோம். எங்களுடைய தொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு காரணமாக இந்த நிலையை எங்களால் அடைய முடிந்தது. எனவே, இந்த வழியைப் பின்பற்றினால், நான்காவது கட்டமான 2048 இற்குள் அபிவிருத்தியடைந்த நாடாக மாற முடியும் என்பது இப்போது தெளிவாகிறது.
திறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் மூலம் வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்காக நாம் இந்த இலக்குகளை எட்டியிருக்கிறோம். எமது உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் கடன் மறுசீரமைப்புக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அதனால், நாம் இப்போது மீண்டும் சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். அதேநேரம் நாம் இதுவரை கடந்து வந்த பாதை சரியானது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.- Vidivelli