ஜனாஸா எரிப்பை தேர்தல் கால பேசுபொருளாக்குவது கேவலமானது

0 426

கொரோனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்கள் பல­வந்­த­மாக எரிக்­கப்­பட்ட விவகாரம் தற்­போது மீண்டும் பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. விரைவில் ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெறும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்ற நிலை­யி­லேயே இந்த விடயம் அரசியல் மேடைகளில் பேசுபொருளாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.

முன்னாள் ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்­தி­லேயே முஸ்லிம்களின் கொவிட் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டன. உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் வழி­காட்­ட­லையும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறியே இலங்கை இந்த கடினமான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது.

இந்த அநியாயத்திற்கு எதி­ராக உயர் நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­யப்­பட்ட மனுக்கள் கூட எந்­த­வித விசா­ர­ணை­க­ளு­மின்றி தள்­ளு­படி செய்­யப்­பட்­டன.
இதற்­கான பிர­தான காரணம் சுகா­தார அமைச்­சினால் அப்­போது நிய­மிக்­கப்­பட்ட நிபு­ணர்கள் குழுவின் கண்மூடித்தனமான தீர்­மா­ன­மாகும்.

பேராசிரியை மெத்திகா விதானகே போன்ற இனவாத சிந்தனை கொண்டவர்களே நிபுணர் குழுவை தவறாக வழிநடாத்தி இந்த தீர்மானத்திற்கு வித்திட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக் கார­ண­மாக உயி­ரி­ழந்­த­வர்­களின் உடல்­களை அடக்கம் செய்தால், அந்த உடல்­க­ளி­லுள்ள வைரஸ் நீரின் ஊடாக பரவும் என்ற விஞ்ஞான உண்மைகளுக்குப் புறம்பான கருத்­தினை இந்த நிபுணர்கள் முன்­வைத்தனர். எனினும், குறித்த விடயம் தற்­போது பொய்யானது என நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் தான் கடந்த 18ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விசேட உரை­யொன்­றினை நிகழ்த்­திய ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்க, பல­வந்­த­மாக உடல்கள் எரிக்­கப்­பட்­ட­மைக்கு மன்­னிப்புக் கோரினார். இதன்­போது மேலும் உரையாற்றிய அவர் “இது விடயமாக ஆராய இலங்­கையில் நாங்கள் ஒரு குழுவை நிய­மித்தோம். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அடக்கம் செய்ய அனு­ம­திக்­கக்­கூ­டாது என்று குழு பரிந்­து­ரைத்­தது. உலக சுகா­தார நிறு­வனம் வேறு­பட்ட கருத்தை எடுத்­தது.

ஆனால் பின்னர் உயர் நீதி­மன்றம் அந்தக் குழுவின் பரிந்­து­ரையை உறுதி செய்­தது. எனவே அதை அர­சாங்கம் பின்­பற்ற வேண்­டி­யேற்­பட்­டது. அப்­போது மாற்று வழி இருக்­க­வில்லை. ஆனால் இப்­போது அவை அனைத்தும் முடிந்­து­விட்­டது.

இந்த நாட்டில் அடக்­கப்­ப­டு­வதா அல்­லது எரிக்­கப்­ப­டு­வதா என்­பதை தீர்­மா­னிக்கும் உரிமை அனை­வ­ருக்கும் இருக்க வேண்டும். எனவே, இறந்­த­வரின் உடலை புதைக்­கவோ, தகனம் செய்­யவோ அல்­லது மருத்­துவ பீடத்­திற்கு தான­மாக வழங்­கவோ உரிமை வழங்கும் சட்­டத்தை இவ்­வி­ட­யத்­திற்குப் பொறுப்­பான அமைச்சர் கொண்டு வர­வுள்ளார்.

இந்தக் காலகட்­டத்தில், முக்­கி­ய­மாக முஸ்லிம் மக்­க­ளுக்கு மன­ரீ­தி­யி­லான பாதிப்­புகள் ஏற்­பட்­டன. ஆனால் எனக்கு தெரிந்த இந்­துக்கள், பௌத்­தர்கள், கிறிஸ்­த­வர்கள் இறந்த பிறகு அடக்கம் செய்­வதை விரும்­பு­கி­றார்கள். எனவே நடந்­த­தற்கு அவர்­க­ளிடம் மன்­னிப்புக் கேட்­டுக்­கொள்­கிறோம். மேலும், இது தொடர்­பாக முன்­வைக்­கப்­படும் சட்­ட­மூ­லத்­திற்கு இந்தச் சபை ஆத­ர­வ­ளிக்கும் என்று நம்­பு­கிறேன்” என்றார்.

இத­னை­ய­டுத்து எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விமல் வீர­வன்ச மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகி­யோரும் இந்த விடயம் தொடர்பில் உரை­யாற்­றினர்.

கோட்­டா­பய ராஜ­பக்ச அர­சாங்கம் முஸ்­லிம்­களை இலக்கு வைத்து இன­வாத அடிப்­ப­டையில் செயற்­பட்டு ஜனா­ஸாக்­களை எரித்­தது என எதிர்க்­கட்சித் தலைவர் குற்­றஞ்­சாட்­டினார்.

தேசிய ரீதி­யாக நிபுணர் குழு­வொன்றை நிய­மித்து அவர்­களின் பரிந்­துரை என்ற பெயரில் செயற்­பட்டு, முஸ்லிம் மக்­களின் உரி­மைகள் மீறப்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார். இதற்கு பொறுப்­பா­ன­வர்கள் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பேரா­சி­ரியர் மெத்­திக்கா என்­ப­வரின் பொய்­யான இன­வாத கருத்­தி­னா­லேயே கட்­டாய தகனம் எமது நாட்டில் முன்­னெ­டுக்­கப்­பட்­டது என வெளி­வி­வ­கார அமைச்சர் குறிப்­பிட்டார்.

இவ்வாறு ஜனாதிபதியும் அமைச்சர்களும் எதிர்க்கட்சி யினரும் மாறி மாறி அறிக்கைகளை விடுகிறார்களே தவிர பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வருவதாக தெரியவில்லை.

ஆகக் குறைந்தது, புதிய சட்டத்தினை விரைவில் பாராளு மன்றத்தில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையினை கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டியது கட்டாயத் தேவை என வலியுறுத்த விரும்புகிறோம்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.